Pages

Wednesday 23 December 2015

மரணத்தை ரசிக்கின்றேன் நான்.

இன்றல்ல நேற்றல்ல
நெடு நாளாய் ஒரு கனவு..
மரணம்...
மழலையின் துயில் போல்
மணித்துளிகளில் நிகழ்வதனால் 
மாறாத காதல் அதன் மேல்.

வரம் என்று கிடைக்குமென்றால்
மரணம் அதை வடிவம் செய்யும்
வரம் வேண்டும் எனக்கு.

சுகமோ சோகமோ
ஏதோ ஒரு உச்சத்தில்,
முத்தத்தின் முடிவில்
எதிரியின் மடியில்
ஏதோ விடுமுறை நாளில்
எவனோ ஒருவன் பார்க்கையில்
மரணம் எனக்கு வரவேண்டும்
ஏனென்றால்,
ரசிகன் இல்லா உச்சகாட்சி
நாடகத்தில் ருசிப்பதில்லை.

அபசகுனம் என்கிறாள் அம்மா
கடிந்து கொண்டாள் காதலி
முட்டாள் நீ என்றான் நண்பன்.
ஆயினும்
மரணத்தை ரசிக்கின்றேன் நான்.
ஏனென்றால்.
அர்த்தம் தேடும் வரிகள் தான்

கவிதையின் முற்றுபுள்ளியை ரசிக்கின்றன.....

Thursday 17 September 2015

சற்று உள் சென்று பாருங்கள்

Image result for sad lonely man



மனம் என்னும் வீட்டில்.....

வன்மமும் விசனமும் வாசலில்
விளையாடிக் கொண்டிருக்கலாம்

இச்சைகள் கயிற்றுகட்டில் அமர்ந்து
காலாட்டிக் கொண்டிருக்கலாம்

அறிவென்னும் அரிதாரம் பூசி
ஆளுயர அசிங்கங்கள்
அலைந்து கொண்டிருக்கலாம்
..
சற்று உள் சென்று பாருங்கள்

முழங்காலில் முகம் புதைத்து
மூலை ஒன்றில் இடம் பிடித்து
வாய்ப்பு வரும் வேளை பார்த்து
வந்தேறிகளால் வாழ்விழந்த

மனிதம் அங்கே அமர்ந்திருக்கும்..

Friday 11 September 2015

ஆற்றங்கரையும் அலங்காரகணபதியும் ...













உச்சிகால பூஜை வேளை
உச்சாடனை முடிந்த பின்பு
நடை சாத்தி விட்டார்கள்

உச்சந்தலை ஒழுகும் வியர்வை
தும்பிக்கையால் துடைக்கையிலே
மூஷிகனும் சிரிக்கின்றான்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவையெல்லாம் தந்தாலும்
என்னாளும் மனம் மறக்குமா ...
தாய் மடியாம் அரசமரமும்
பால் வடியும் அரசலாறும்

ஏக்க மூச்சு விட்டபடி
எழுந்து நின்ற கணபதியை
மூஷிகனும் கேட்டுவிட்டான்
முட்டாளென கேள்வியொன்றை

புலம் பெயர்ந்த அன்று முதல்
அகம் மருகும் என் குருவே
நகர்வலம் நாம் போகலாமா ?
நம்மிடத்தை காணலாமா ?

சிஷ்யன் தன் சொல்கேட்டு
சில நொடிகள் சிந்தனை -
நினைவெல்லாம் நிதம் வாழும்
ஆற்றங்கரை அதைக் காண
அடுத்த நொடி புறப்பட்டார்
அலங்கார கணபதியும்

ஆற்றங்கரை அடைந்தும் விட்டார்

அந்தோ ..

அறம் கொன்ற  மாந்தர்கள்
மரம்  கொன்றும் விட்டாரே .
இடைமெலிந்த மங்கையைப் போல்
நடைமெலிந்து ஓடிசலானது அரசலாறும் ..

முகம் விழுந்த தும்பிக்கையும்
அகம் விழுந்த நம்பிக்கையுமாய்
ஆங்கோர் பாறை மேலே
அமைதியாக அமர்ந்துவிட்டார்..

விசும்ப மனம் வரவில்லை ..
வினாயகமூர்த்திக்கு ..
மறுமுறை மாமனைக்கண்டால்
மனிதர் குறைத்து
மரங்கள் படைக்க
வேண்ட வேணும் ...
என நினைக்கும் நாழிகையில்
எதிர் வந்தவன் கேட்டானே   ..

"என்னையா ..புள்ளையார் வேஷமா ?..
உன் மூஞ்சிக்கு பொருந்தவே இல்ல "

அலங்கார கணபதி
ஆங்கார கணபதியானார் ...






 

Friday 14 August 2015

என்ஜினியர் என்றொரு இனமுண்டு

 வணக்கம் ..

இந்த பதிவு பொறியியல் படிப்பவர்களுக்கானது அல்ல..படித்துவிட்டு
"தான் பெற்ற துன்பம் பெறலாகது இந்த வையகம் " என்று நினைக்கும் பாவப்பட்ட ஜீவன்களுக்கானது ,,,,


                       எங்க ஊர்ப்பக்கமெல்லாம் முன்னாடி யாராவது முகவரி தேடி அலையும் போது இப்படி கேட்பது வழக்கம்

" அண்ணாச்சி , இந்த என்ஜினியர் ராமசாமி வீடு எங்க இருக்கு ?"

இந்த கேள்விய ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி கேட்டா   நம்மள  பாத்து மரியாதையா "அதுவா தம்பி  இப்டியே சோத்தாங்கை பக்கம் போய் திரும்பி பீச்சாங்கைபக்கம் போனீங்கன்ன பெரிய வீடு ஒன்னு இருக்கும் அதான்னு சொல்வாங்க .

இதே கேள்விய ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி கேட்டா .."எந்த என்ஜினியர் வீடு..நம்மூர்ல ஒரு நாலஞ்சு என்ஜினியர் இருக்காங்க ..எதுக்கும் உள்ளாரா போய் விசாரிச்சுப் பாருங்க" அப்படினு பதில் வரும்.

ஆனா அதே கேள்விய இப்போ போய் கேட்டிங்கனு வைங்க ..ப்ப்ப்ர்ர்ர்ர்ர் ,,,அத எப்டி என் வாயால சொல்லுவேன்...அந்த அளவு பெருத்த அவமானம்  அந்த எஞ்சினீரிங் படிச்சவனுக்கு வர  நாம காரணம் ஆய்டுவோம் ..

அந்த அளவுக்கு நம்மூர்ல என்ஜினியர் என்ற சொல் ம(மி )திக்கபடுவதற்கு  யார் காரணம் ...

வேற யாரு நாமதேன் ..


பக்கத்து வீட்டு  பையன் +2 முடிச்சுட்டு நம்மகிட்ட வந்து ."அண்ணே ,அடுத்து
என்னண்ணே படிக்க்கலாம்" அப்டின்னு கேட்டான்னா ...
நாமளும் "அடடா , நம்மளையெல்லாம் ஒருத்தன் மதிச்சு ஆலோசனை கேக்குறானேனு ..சற்று கெத்தா  " என்ன மார்க்குன்னு கேப்போம் " ..
அதுக்கு அந்த பக்கி "பிஸிக்ஸ் , கெமிஸ்ட்ரி லாம் நல்ல மார்க்குனே ..இந்த மாக்ஸ்ல தான் கம்மியாய்ட்டுன்னு ..நம்ம 5 வருஷத்துக்கு முன்னாடி யார்கிட்டயோ   சொன்ன வசனத்த நம்மகிட்டயே சொல்லுவான்..

அத வெளில காட்டிக்காம நாமளும் " ஆஹான் ,,அப்படியா .."அப்டின்னு நாம ஏதாச்சும் சொல்றதுக்கு வாய் எடுக்குறதுக்கு முன்னாடி அவங்கப்பா  "எஞ்சினீரிங் சேர்த்துடலாம்னு இருக்கேன் தம்பி ..நாளைக்கு உங்கள மாதிரி நல்ல நிலைமைக்கு வந்துடுவான் பாருங்க"ன்னு சொல்லுவார்..

நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர் ...."உங்கள மாதிரி "

நான் நல்லாருக்கேன்னு உங்களுக்கு யாரு சாமீ சொன்னதுன்னு வாய் வரைக்கும் வரும்..ஆனா சொல்லமுடியாது ..ஏன்னா தன்மானப் பிரச்சனை..

இருந்தாலும் கண்ணுக்கு முன்னாடி ஒருத்தன் நாம செஞ்சதையே செஞ்சு நம்மள மாதிரியே சாணி அள்ளிக் கொட்டப்போறானேனு ஒரு நல்ல எண்ணத்துல .." இப்போ பீல்டு அவ்ளோ சரி இல்லையே" ..அப்படின்னு ஆரம்பிச்சோம்னா .." அப்ப நாங்க வர்றோம் தம்பி , அப்ளிகேசன் பார்ம் வாங்கனும்"னு அவங்களே கெளம்பிடுவாய்ங்க...அப்டியே நமக்கு செருப்பால அடிச்சா மாதிரி இருக்கும் ...கொஞ்சம் தூரம் போனதும் நம்ம காதுக்கு கேக்குற மாதிரி "பொறாமை புடிச்ச பயபுள்ள"னு நமக்கு அர்ச்சனையும் கெடைக்கும் ...அதாவது அவர் பையன் நல்லா வர்றது நமக்கு புடிக்கலையாம் ...அத நாம  பெருசா எடுத்துக்க மாட்டோம்ங்கறது வேற விஷயம் ..ஆனா நாலு வருசதுக்கப்பறமா .."ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்கண்ணே ..ரெஸ்யூம் தரேன்"னு அவன் சொல்றப்போ தான் உண்மையிலயே கஷ்டமா இருக்கும்..

பசங்க தெளிவா இருந்தாலும் இந்த பெத்தவங்க அக்கப்போர் தான் பெருத்த அக்கப்போர் ...அவன் எதிர்காலம் நல்லாருக்கனும்னு நீங்க நினைப்பது தவறில்லை தான்..ஆனால் எவனோ ஒருத்தனுக்கு எங்கயோ ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கெடச்சதுன்னு நம்ம பையனையும் கொண்டு போய் தள்ளுறது என்ன நியாயம்...

இது கூட பரவால்ல ..இன்னும் சில பேரு இருக்காய்ங்க ...அவன் ஏகப்பட்ட அரியர் வச்சுட்டு சுத்திட்டு சுத்திட்டு இருப்பான் ..அவங்கப்பா நம்மகிட்ட எப்போவாச்சும் சொல்லிருப்பார் ..நம்ம பயலுக்கு ஒரு வேலை இருந்தா பாருங்க தம்பி"னு . நாமளும் சரின்னு சொல்லி அவன் ரெஸ்யூம்  தெரிஞ்சவன் தெரியதாவனுக்கெல்லாம் அனுப்பிருப்போம் ...எவனும் பதில் சொல்லமாட்டான் ..அப்புறம் ஊருபக்கம் போன ரெஸ்யூம் குடுத்தவர பாத்து...
வெற்றிக்கொடிகட்டு வடிவேலு மாதிரி ..."உயிரே ..உயிரே ..தப்பிச்சு எப்பிடியாவது ஓடிவிடுனு ..ஓடனும் ...

அதுக்காக மொத்தமா எஞ்சினீரிங் படிக்கவேணாம்னு சொல்லல...நல்ல மதிப்பெண்கள் இருந்து நல்ல கல்லூரில இடம் கிடைத்தால் ..பொறியியல் ஒரு சிறந்த படிப்பே..

ஆனா ...அப்படி இல்லேன்னா...நம்மளால என்ன முடியுமோ ..நம்ம பாடி எவ்ளோ தாங்குமோ ..அத மட்டும் தான் செய்யணும்..அப்படியும் இல்ல..நான் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று அடம் பிடிக்கும் சிங்கக்குட்டிகளுக்காக கீழே தாரக மந்திரம் உள்ளது..

"
என்ஜினியர் என்றொரு இனமுண்டு
எத்தனை கேவலம் வந்தாலும்
ஏற்றுக்கொள்ளும் மனமுண்டு.."


ஸ்ரீ ....


புழுதி புரட்டி சாமியார்

இடை மேலே உடை இன்றி
எவரும் ஒரு துனை இன்றி
நதியாடும் ஓடம் போல்
நடந்து வரும் இவன் யாரோ..

பருவம் கொண்ட பெண்களெல்லாம்
அவன் கோலம் கண்டு நகைக்கின்றார்
கோலங்களை வென்றவன்தான்
காலங்களை வெல்கின்றான்- என
உலகளந்த தத்துவத்தை
ஒரு நொடியில் கடக்கின்றான்

அந்தோ..
கால் இரண்டும் சோர்ந்தனவோ
களைப்பு வந்து சேர்ந்ததுவோ
தள்ளாடும் நடை நடந்தவன்
தவறி அங்கே விழுந்துவிட்டான்

வலி என்பதே அவன் வாழ்வில்
புதியதொரு பாடம் தானே
புன்னகைத்து எழுகின்றான்
மறுபடியும் விழுகின்றான்
மணல் அள்ளி சிரிக்கின்றான்’
மண்மகளை ருசிக்கின்றான்
ஆட்டமெல்லாம் முடிந்தபின்னே
அடைக்கலம் அவள் தானே

வசை துறந்த ரமணனோ- இல்லை
திசையணிந்த சமணனோ
ஆசை கொன்ற புத்தனோ- இல்லை
ஆடை மறந்த சித்தனோ..

யாரிவன்...

டேய் புழுதி புரட்டி சாமியாரே “

குரல் முன்னால் வர
அவள் பின்னால் வருகிறாள்

மண்ணை பாத்தா என்னையே
மறப்பான் என் மவன்”

முத்தை அள்ளும் சிப்பி அவள்
முத்தமிட்டு அள்ளிவிட்டாள்..
இடைமேலே அமர்த்திவிட்டாள்..

இக்கவிதையின் நாயகனை...


ஸ்ரீ


Friday 12 June 2015

கவிஞனின் காதலி...

ஹைக்கூ கவிதை வடிக்கும்
ஹைடெக் கவிஞனவன்.
கணிணினியின் திரையில்
கவிதை ஒன்று வடிக்கின்றான்..
நடனமாடும் விரல்களை
வலை கொண்ட மீனைப் போல்
வதை கொண்டு காண்கின்றாள் அவள்.

“மறந்தே விட்டானா என்னை ?”
வறுமை
வன்மை
காதல்
காமம்
எதுவந்த போதும்,
எனை அன்றோ தேடுவான்.

உலகம் உறங்கிய நேரம்
உணர்வுகள் உறங்காத அவனிடம்
உறவாடியவள் நான் தானே
உணர்வுகள் உந்திய வேகம்
அவன் விரல்களின் வன்மம் ஆகும்
அதை மெலிதாய் தாங்கிய என் தேகம்

அத்தனையும் மறந்தானோ?

எத்தனையோ ஏக்கம் தாங்கி
மையல் கொண்டவன் மறந்ததால்
மை கொண்ட விழியினிலே
அழவும் ஒரு வழி இன்றி
அமைதியாக அமர்ந்திருந்தாள்..
ஆங்கோர் வெள்ளைத்தாள் மேல்

அவன் பேனா எனும் காதலி...



ஸ்ரீ