Pages

Thursday 4 October 2012

அக்கினிக் குஞ்சுகள் எங்கே ?...

                                           

                                                 

 இரவு ஒன்பது மணி...

  விஜய் தொலைக்காட்சி சேனல்...

 " தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்." ..என்று நல்ல குரலை நாராசமாக்கி தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே முக்குவதைப் போல் ஒரு பெண் கதறிக் கொண்டே வர, துவங்குகிறது நிகழ்ச்சி,

தமிழ்த் திரையுலகின் முன்னணி பின்னணி பாடகர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்கிறார்கள்..

ஏழு வயது சிறுவன் ஒருவன் மிக சிரத்தையுடன் மழலை மொழியில் ஒரு தமிழ் பாடலை பாடி முடிக்கிறான்

" அந்த ரெண்டாவது சரணம் பாடுறச்சே, சுருதி விலகிடுத்து, பல்லவி பாடுறச்சே வாய்ஸ் உள்ள போய்டுத்து, மத்தபடி நன்னா பாடினேள்" என்ற ரீதியில் கருத்துகள் சொல்லப்படுகின்றன...

அடுத்து ஒரு சிறுமி பாடத் துவங்குகிறாள்... வயது வந்தவர்கள் பாடும் போதே சொல்ல சற்று கூசும் ரெட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் கொண்ட அந்த பாடலை அதே வளைவு நெளிவுகளுடன் பாடுகிறாள்...அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்..குறிப்பாக பெற்றவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்..அடடா கண் கொள்ளாக் காட்சி..

அடுத்ததுதான் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் வருகிறது காட்சி.. பாடி முடித்த பத்து வயது சிறுவன் ஒருவன்
" நான் நல்ல பாடுனேன், எனக்கு எல்லாரும் ஓட்டுப் போடுங்க ப்ளீஸ் " என்று கெஞ்ச அதை வழிமொழிவது போல் அவனது பெற்றோரும் தொலைக்காட்சி பெட்டியின் முன் நின்று கதறுவது நிச்சயமாய் எத்தனை பேரை முகம் சுளிக்க வைக்கும் என்று தெரியவில்லை..

இதை எல்லாம் பொறுத்துக் கொண்டாலும், " நீ நன்னா பாடினேடா கண்ணு, ஆனாலும் யாராவது ஒருத்தர் எளிமினேட் ( நீக்கப்பட) ஆகணும், அதனால உன்ன எளிமினேட் பண்றோம்"  என்று வசனம் பேசிவிட்டு எழுந்து மேடைக்கு வந்து அந்த சிறுவனையோ, சிறுமியையோ, கட்டிக் கொண்டு ஒரு நடுவர் அழத்துவங்க, அந்த சிறுவன், அவனது பெற்றோர், நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று அனைவரும் அழ, கடைசியாக  சிரித்த முகத்துடன் தொலைக்காட்சி முன்பு அமர்ந்த நாம் வரை கண்களை கசக்குவோம்...அதோடு விடுவார்களா என்றால் அதுதான் இல்லை.. அந்த குழந்தை வீடு சென்று பக்கத்து வீட்டுகாரர்களை கட்டிக் கொண்டு அழும் வரை காட்டி நோகடிப்பார்கள்...

                                          

இத்தனையையும் பார்ப்பதற்காகவே நாமும் நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் தொலைக்காட்சி முன் தினமும் அமர்ந்திருக்கின்றோம்...

ஆனால் என்றாவது ஒரு நாள் சிந்தித்திருப்போமா,

காகிதப்பூக்களாய் காட்டப்படும் அந்த பிஞ்சுகளின் மனநிலை என்னவென்று...

பள்ளி வகுப்புகளில் இனி அந்த குழந்தையால் எப்படி சகஜமாக அமர்ந்து படிக்க முடியும். தோல்விகள் என்பது வயது முதிர்ந்தவர்களையே எந்த அளவு பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, அது குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும்..இந்த போட்டியில் தோல்வியடைந்த அந்த குழந்தை சகஜ நிலைக்குத் திரும்பவே பல நாட்கள் பிடிக்கும்..அப்படியே திரும்பினாலும் சுற்றி இருக்கும் மற்ற குழந்தைகள் அதை நியாபகப்படுத்தாமல் இருப்பார்களா ?
இதையே சற்று மாற்றியும் பார்க்கலாம்.அதாவது, தோல்வியைவிட கொடூரமானது இளமையில் அளவுக்கு அதிகமான புகழ்..பெரிவர்களே புகழை சரியாகக் கையாளத் தெரியாமல் கர்வம் தலைக்கேறி தறிகெட்டு திரிகின்றோம். பிஞ்சுகளுக்கு அது கிடைத்தால்... இனிமையாக அமைய வேண்டிய இளமைக்காலம், "நான் மற்றவர்களை விட உயர்ந்தவன்" என்று தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு தரிசாகப் போய்விடாதா?

அடுத்து அத்தனை பேர் முன்னிலையிலும் குழந்தைகளைக் கெஞ்ச வைப்பது,

ஓட்டுக்காக அரசியல் எச்சிலைகள் பிச்சை எடுக்கலாம்,  எதிர்கால அப்துல் கலாமோ, கல்பனா சாவ்லாவோ பிச்சை எடுக்கலாமா?. சுமரியாதை என்பதே இப்போதே விதைத்தால் தானே எதிர்காலத்தில் அவனோ, அவளோ, தன்னைத்தானே மதிப்பார்கள்...சுயமரியாதை தானே தமிழனின் அடையாளம்..அதையே குழி தோண்டிப் புதைக்கலாமா?

துள்ளித்திரிய வேண்டிய பட்டாம் பூச்சிகளை இவர்கள் கூண்டில் அடைத்து வித்தை காட்டுகிறார்கள், அதை நாமும் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறோம்...

இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்,  " திறமையை இளமையிலேயே கண்டறிவது தானே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அது எப்படி தவறாகும் ? என்று

நியாயமான கேள்வி தான்..

திறமையைக் கண்டறிய வேண்டியது தான்..ஆனால் அதற்கு இத்தனை விளம்பர சாயம் பூசத் தேவை இல்லை...பரிசு என்று அவர்கள் அறிவிப்பதைப் பாருங்கள்.. "25 இலட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு ", இதனால் பத்து வயது குழந்தைக்கு என்ன பயன் ? .அவர்களது பெற்றோர்கள் பெருமையாக பேசிக்கொள்ள வேண்டுமானால் அது உதவும்.
திறமையைக் கண்டறிவதாக இருந்தால் அது தன்னம்பிக்கையை வளர்க்கும் போட்டியாக இருக்க வேண்டும்...பரிசு தர விரும்பினால் படிக்க நல்ல புத்தகத்தை கொடுங்கள், இல்லையெனில் அறிவை வளர்க்க கணிப்பொறியைக் கொடுங்கள்..அதுவும் இல்லையா, அறிவியல் சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதாக  அறிவியுங்கள்.. அதிலும் நட்பினை வளர்க்கும் விதத்தில் எந்த குழந்தை வெற்றி பெறுகிறதோ, அவனது அல்லது அவளது நண்பர்களையும் அழைத்து செல்வதாக சொல்லுங்கள்..

அதை விடுத்து சிறகுகள் விரித்து பறக்க வேண்டிய பறவைகளை சிந்திக்கவே விடாமல் சிறைப்பிடிப்பதென்ன நியாயம்....

" அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
 ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
 வெந்து தணிந்தது காடு- தழல்
 வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
 தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்..."

அடடா, எத்தனை பெரிய கனவு பாரதிக்கு,.. பொந்தினில் வைத்தால் காட்டையே எரிப்பார்கள் தான் நமது அக்கினிக் குஞ்சுகள் .....ஆனால் அவர்களை நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடைப்பது சரியா...?

கேள்வியுடன் மட்டுமல்ல வருத்ததுடனும் கோபத்துடனும் முடிக்கிறேன். இந்த பதிவை...


ஸ்ரீ....

1 comment:

  1. மொட்டுக்களை பார்த்து வருத்தப்படுவது வீண்! விதையே தவறு என்கையில்!மனிதனைக்காட்டிலும் பறவைகள் தன் குஞ்சுகளை அருமையாக வளர்க்கிறது.பிரச்சினை வெற்றி தோல்விகளில் இல்லை அதைப்பார்க்கும்பார்வையிலும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்திலும் உள்ளது.இங்கு பெற்றவர்களுக்கே அது தெரியாத போது பாவம்! அவர்கள் எப்படி அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வார்கள்? தெரியவில்லை என்பதைக்காட்டிலும் தெரிந்துக்க்கொள்ள விரும்புவதில்லை இவர்கள்.
    ஏன் தெரியவேண்டும்? பணம், புகழ் கிடைத்தால் யாரை வேண்டுமானாலும் ஈன்ற தாயாக ஏற்றுக்கொள்வார்கள்.நம் முன் ஒருவர் ஓடிக்கொண்டிருந்தால் யோசிக்க என்ன இருக்கு ?நீயும் கண்ணை மூடிக்கொண்டு, ஏன் என்று தெரியாமல் , அவர் பின் என்ன அவரையும் தாண்டி ஒடிக்கொண்டிருப்பவர்களிடமா, தனி மனித ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு,சுயமரியாதையை கற்றுக்கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது?
    ம்ஹூம்?
    அட! தன்னைதானே மதிக்கும் சுயமரியாதை வேண்டாம்,உன்னைப்போல் பிறரையும் நேசி என்பதாவது இவர்களுக்கு தெரியுமா?எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள் நிலவுக்கே சென்றாயினும் வாங்கி வருகிறன் என்பார்கள்.எங்கே போய்அடித்துக்கொள்வது?
    பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எந்த நோக்கதிற்கென்று தெரியாமல் வெறும் TRB தரத்தை உயர்த்துவதற்காக செய்யும் அவர்களிடமா நீ பாரதியையும் அந்த மகாகவியின் கனவையும் பற்றி கேட்கிறாய்? நீ வேண்டுமானால் ஒரு குழந்தையிடம் ,
    “ ஓடி விளையாடு பாப்பா” என்று சொல் உடனே “Don’t call me paapa, I’m not papa என்று மழலை மறந்து சீறும் குழந்தையிடம் நான் கூறவில்லையம்மா பாரதியார்தான் பாடியுள்ளார் என்றால் “Oh I see, யாரது new singer, musician, or actor?என்று கேட்பார்கள்.
    நீயும் நானும் கவலைப்பட்டு என்ன செய்வது?முடிந்தால் பிழைக்கத்தெரியாதவர்கள் என்று பட்டம் சூட்டுவார்கள்.
    விட்டுவிடு ஸ்ரீதரா! இந்த சமுதாயம் ஒன்றை இழந்தால்தான் அதன் அருமையை புரிந்துகொள்கிறது(குழந்தையிடம் மழலையை தேடுவது போல்) ஆனால் புரியும் சமயம் இழந்ததை பெற முடியாத தூரத்தில் இருப்போம்.வேறு வழி இல்லை இங்கு சாட்சியாளர்களாக காலம் நம்மை பதிவு செய்துவிட்டது.
    “நல்லதோர் வீணைசெய்தே – அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி!-எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
    வல்லமை தாராயோ- இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?”

    ReplyDelete