Pages

Thursday 18 October 2012

தண்ணீர்..தண்ணீர்.....


                  
                                  

" முதல் உயிர் பிறந்தது நீரில்
என்பதால்- ஒவ்வொரு உடம்பிலும்
ஓடிக் கொண்டே இருக்கிறது
அந்த உறவுத்திரவம்..."


வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து....

இந்த கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒன்று மட்டும் தான் நினைவுக்கு வருகிறது.
தண்ணீரையும் மனிதனையும் பிரிக்கவே முடியாது..கர்பத்தில் வளர்ந்த சிசு தண்ணீர் குடத்தில் சுவாசிப்பதில் தொடங்கி தண்ணீர் குடத்தில் முடிக்கும் வரை.

அடுத்து ஒரு உலக மகா யுத்தம் நடந்தால் அது தண்ணீருக்காக மட்டுமே இருக்க முடியும்.சமீபத்தில் இணையதளத்தில் ஒரு பதிவில் இதைப்படித்ததும் ஒவ்வொரு முறை தண்ணீர் குழாயைத்திறக்கும் போதும் சுருக்கென்று ஏதோ ஒன்று உறுத்துகிறது..

பெட்ரோலை அடுத்து தண்ணீரிலும் அரசியல் தொடங்கி வெகு ஆண்டுகளாகிறது..ஏற்கனவே நம் தேசம் தண்ணீருக்காக வங்காளதேசம்,சீனம், நேபாளம் என்று சுற்றி இருக்கும் நாடுகளுடன் முட்டிக் கொள்ளத் துவங்கி வெகு நாட்களாகிறது..

பிரம்மபுத்திரா ஆற்றில் மட்டும் சீனா ஒரு அணையைக் கட்டத் துவங்கினால் இந்தியா என்றென்றும் சீனாவிடம் கை ஏந்த வேண்டி வரும் தண்ணீருக்காக..கட்டினால் தானே என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறீர்களா தோழர்களே...சற்று மூச்சினைப் பிடித்துக் கொள்ளுங்கள். அந்த அணையின் அனைத்து ஏற்பாடுகளும் துவங்கி வெகு நாட்களாகிறது...இப்படி சர்வதேச தண்ணீரைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு சற்று நாம் நமது தமிழகத்தின் தலை எழுத்தை பார்த்துவிட்டு வரலாம்..

தமிழகம்...தண்ணீரினால் சபிக்கப்பட்ட மாநிலம், அண்டை மாநிலங்களால் வெகு சுலபமாக  ஏய்க்கப்பட்டுவிடும் இங்கு.பருவ மழை பொய்த்துவிட்டால், இல்லாத கடவுளை சபிக்க மட்டுமே நமக்கு உரிமை உண்டு..

காவேரி, பெரியாறு, என்று தொடர்கின்ற அவலங்கள் எத்தனை...

இங்கே நான் இந்த அவலங்களின் வரலாற்றை ஆராய விரும்பவில்லை..சிறிதாக பின்னோக்கி சென்றுவிட்டு அடுத்து ,நாம் என்ன செய்திருக்க வேண்டும் ?... என்ன செய்திருக்கிறோம் என்பதைப் பற்றியே பேச விழைகிறேன்...

கேரளமும், கர்னாடகமும் பாடும் ஒரே பாடல் இது தான்..ஆங்கிலேயர்கள் காலத்தில் நாங்கள் ஏமாற்றப் பட்டுவிட்டோம். மதராஸ் மாகாணத்துடன் முல்லை பெரியாறுக்காக திருவிதாங்கூர் மாகாணமும், காவேரிக்காக மைசூர் மாகாணமும் வற்புறுத்தப்பட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டனவாம்..ஆனால் நிலங்களின் அளவின் அடிப்படியில் தான் தண்ணீர் பங்கு பிரிக்கப்பட்டது...அது மட்டுமல்லாது அதற்குப் பிறகு அந்த ஒப்பந்தங்கள் மாற்றி எழுதப்பட்டு விட்டன,,,,என்வே அவர்களின் இந்த வாதத்தின் அடிப்படையே தவறு...

அடுத்து நாம் என்ன செய்திருக்க வேண்டும் ?... என்ன செய்திருக்கிறோம் ?....

மழை பெய்துவிட்டால் போதும் தமிழனுக்குத் தண்ணீர் தரக்கூடாது என்பது மொத்த கர்நாடகமும் ஒன்று கூடி நிற்கிறது..காவேரியின் கால்களைக் கட்டப்படாமல் காத்து அவள் தஞ்சை மண்ணைத் தழுவும் வரை நமெக்கெல்லாம் பெரும்பாடாகிப் போகிறது..உச்ச நீதிமன்றமே உச்சுக் கொட்டிக்கொண்டு தான் இருக்கிறதே உரிய நடவடிக்கை எடுத்தாதாகத் தெரியவில்லை..

இருக்கும் அணை பலம் இல்லையாம் அதனால் புது அணை கட்டுகிறார்களாம் நமது கேரள தோழர்கள்,
புது அணை கட்டுவதைவிட இருக்கும் அணையை பலப்படுத்தாலாமே என்றால். அது முடியாது என்பார்கள். ஏன் என்றால் அது அப்படித்தான் என்பார்கள்..நாமும் நான்கு நாட்கள் கத்திவிட்டு அடங்கி விடுவோம்..

வட இந்தியர்களைப் பொறுத்தவரை " தண்ணீர்" என்று வந்துவிட்டால் தமிழன் என்றுமே சண்டைக்காரன் தான்..அனுபவரீதியாக இதை உணர்ந்தவன் நான்..நமது அண்டை மாநில சகோதரர்கள் நம்மைப் பற்றி உருவாக்கிய பிம்பம் அப்படி...

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போரடித்த தேசத்தில் மாடுகள்  மேய கூட புற்கள் முளைக்க தண்ணீர் வற்றி தட்டுப்பாடு வரக் காரணம் யார்..?..கன்னடத்தவர்களா? மலையாளிகளா?ஆந்திர நண்பகளா ?...இல்லை..இவர்கள் அனைவரும் தத்தம் வேலைகளில் சரியாக இருந்தார்கள்...இளிச்சவாயானாய் நாம் இருந்ததற்கு அவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும்...

குழப்பாக இருக்கிறதா ? குழம்பவே வேண்டாம்...

தண்ணீரின் உரிமை நம்மிடம் இருந்து பறிபோனதற்கு வேறு யாரும் காரணமல்ல..நாமும், நம்மை ஆண்டவர்களும் தான் காரணம்..அலட்சியம்..இது தான் நம்மை எப்போதும் மற்றவர்களிடம் தோற்க வைக்கிறது..பல பத்திரிக்கைகள் கேரளத்தின் புதிய அணையைப் பற்றி கதறிக் கொண்டிருக்கையில் நாம் இருபது ஒவர் கிரிக்கெட்டில் லயித்திருந்தோம்...நாம் லயித்திருந்த காலத்தில் அழகாக ஒரு அணுகுண்டினை உருவாக்கினார்கள் நம் தோழர்கள்..
 

                                        

" டேம் 999"  சாதாரணமாகப் பார்த்தால் ஒரு திரைப்படம்,,ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் ஒரு பிரச்சார ஆயுதம்..மொத்த தேசத்தின் கவனத்தையும் தனது விருப்பப்படி அணையின் பக்கம் அவர்கள் திருப்பிவிட்டு நிதானமாக அடுத்த அடி எடுத்து வைத்து, "நாளைக்கே அணை உடைந்துவிடும்"  என்ற அளவிற்கு ஊடகங்களை அலற விட்டு பின்பு தனது புதிய அணைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது கேரளம்..தனது மொத்த தாக்குதலையும் முழுமையாக முடித்துவிட்டு அமைதியாக கேரளம் அமர்ந்த பிறகு தான் நாம்..அய்யோ, அம்மா, எனறு கதற ஆரம்பித்தோம்...

அடுத்து காவேரி , ஆடு தாண்டும் காவேரியாக அது இருக்கும் குடகுமலைப் பகுதியை நாம் வைத்திருந்தால் நாம் இன்று அடுத்தவனிடம் பிச்சை எடுக்க வேண்டி இருந்திருக்காது. சரி அதை விட்டுவிடலாம்... காவேரி நதி நீர் பங்கு, ஒவ்வொரு வருடமும் யானை தேய்ந்து அது எரும்பாக மாறும் வரை காத்திருந்து அதன் பிறகு தான் நாம் கூச்சலிட ஆரம்பித்தோம்.


எதற்காக இத்தனை தாமதம், எதற்காக இத்தனை அலட்சியம்..நான் பார்த்தவரை இதன் காரணம் ஒன்று தான்..தண்ணீர் என்பது நமது மாநிலத்தின் பிரச்சனையாகப் பார்க்கப்படுவதில்லை...ஒரு குறிப்பிட்ட பகுதியின் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.

சற்று விளக்கமாக சொன்னால் காவேரி நதி நீருக்காக என்றாவது தென் மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றுக் கேள்விப்பட்டிருக்கிறோமா?, இல்லை சென்னை என்ற பெருநகரில் என்றாவது இந்த பிரச்சனையை பற்றி அறிந்தவர்கள் எத்தனை பேர்...?

காவேரி என்பது தஞ்சாவூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர் மக்களின் பிரச்சனை,
அதே போல் முல்லை பெரியாறு தேனி மாவட்ட மக்களின் பிரச்சனை,
சிறுவாணி என்பது கோவை மக்களின் பிரச்சனை...

இது தான் நமது பலவீனம்...பிரிந்து கிடப்பது.

அடுத்து நமது அரசியல் கலாசாரம்...நேற்று ஒரு ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபரும் அவரது போட்டியாளரும் ஒரே மேடையில் பேசிக் கொள்கிறார்கள்..ஆனால் இங்கே மக்களின் முக்கிய பிரச்சனையான தண்ணீரைப் பற்றி மட்டுமல்ல, மற்ற எதற்குமே ஒரணியில் நிற்காத நமது தலைவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது..

சமீபத்தில் முதல்வர் அவர்கள் கலைஞர் கருணாநிதியை மானங்கெட்டவர் என்று திட்டிவிட, அதற்கு
என்று நான் உன்னை நேரில் சந்திக்கிறேனோ, அன்று தான் மானக் கெட்டவனாவேன் என்று சொல்கிறார்..தமிழகத்தின் இரு பெரும் தலைவர்கள் நேரில் சந்திப்பதில் இத்தனை பிரச்சனைகள் என்றால் இவர்கள் எப்படி நமது பிரச்சனைகளைத தீர்ப்பார்கள்..

இப்படி எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் தீர்வு ஒன்று தான்..ஒற்றுமையாக இருப்பது...தண்ணீர் என்பது உரிமை மட்டுமல்ல..உயிர் ஆதாரம்..அதில் கூட ஒற்றுமை இல்லை என்றால் தமிழன் என்று சொல்வதிலும், தலை நிமிர்ந்து நிற்பதிலும் அர்த்தமே இல்லை..

என்று தணியும் எங்கள் காவேரி தாகம்....... !!!!


No comments:

Post a Comment