Pages

Monday 13 August 2012

அன்புள்ள தலைவனுக்கு....


தென்பாண்டிச் சிங்கம் தந்த தென்னவனே
பொன்னர் சங்கர் படைத்த தமிழ் பிரம்மனே
ஈழம் ஈன்றெடுக்க உன்
வாழ்வுரிமை மாநாடு...
வானாளாவி வெற்றி பெற வாழ்த்துகள்..

ஆனால்..
ஐயங்கள் சில உண்டு ஐயா எனக்கு,
முத்தமிழ் அறிஞன் நீயே
இத்தமிழனின் ஐயம் தீர்க்க வேண்டும்..

மாநாடு உண்டு என்றால்- அதற்கு
மகத்தான ஒரு காரணமும் இருக்க வேண்டுமே..
அங்கே தான் துவங்குகிறது என் ஐயம்..

கண்ணகி மகள்களின் கற்பு
சிங்கள கடைத்தெருவில்
கூவிக் கூவி விற்கப்பட்டதே- அதைத்தான்
நாம் கூத்தாடி கொண்டாடப் போகிறோமா ?..

கற்புக்கரசி கனிமொழி அன்று
சிங்களவனின் வீட்டில் விருந்துண்டு வந்தார்களே
ஒரு வேளை அவனின் விருந்தோம்பலை
வியந்து போய் மகிழ்கிறோமோ மாநாட்டில் ?...

சிற்றுண்டி இடைவேளையில்
சிறியதாக, அரியதாக
அகிலமே வியக்கும்வண்ணம் அரைநாள்
உண்ணாவிரதமிருந்தாயே...
அடடா,
அதைத்தான் கற்றுத்தர போகிறாயோ..
அனைவரையும் அழைத்துவந்து ?...


அறுபது மாதங்கள் உன்னை
ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி இருந்தோமே
அப்போது ஏன் உன் குரல்
அண்டை நாட்டில் ஒலிக்கவில்லை..
இந்திய மாக்கடல் விழுங்கி விட்டதோ
உன் குரலை..

சரி போகட்டும்...

செங்கோல் இருந்த போது
செயல்படாமல் இருந்து விட்டதற்காக இன்று
எழுதுகோல் கொண்டு எமை
ஏய்க்க நீ நினைப்பதாக வதந்தி ஒன்று
வந்ததிங்கு....

இப்படி எத்தனையோ ஐயங்கள் பலவாக
நித்திரை கொள்ளை போகிறது...
எதுகையும் மோனையும் கொண்டு
எவருக்கும் புரியாமல் எப்போதும்
ஆற்றுவாயே சொற்பொழிவு- அதைவிடுத்து
அழகாக ஒரே வரியில் விடை கூறு..

ஏன் இந்த மாநாடு...


பதிலுக்காக ஆவலுடன்.....
ஏழரை கோடியில் ஒருவன்....