என்றும் போல் எழுந்ததும் போர்வையை தடவிப்பார்த்துக்கொண்டாள் கவிதா ..
"ஏழு கழுதை வயசாகுது இன்னும் ஜமக்காளத்துல மோண்டு வச்சட்டுறுக்க எருமைமாடு.குத்தவச்சதுக்கபறமும் இப்டியே செய்யி .."
அம்மாவின் வசை இன்று கேளாததால் உற்சாகமாவே ஆரம்பித்தது இந்த ஞாயிற்றுகிழமை .
"ஏட்டி . கவிதா ..இங்க வா .."
வரேன்மா ..எழுந்து ஓடும்போது முற்றத்தில் நின்று விட்டாள் ..எல்லா ஞாயிற்றுகிழமையையும் போல் இன்றும் அப்பா சவரக்கத்தி சகிதம் கண்ணாடியை வைத்துக்கொண்டு ஆரம்பித்துவிட்டார் ..
ஒரு முக்காலியில் கண்ணாடி அமர்த்தி முகமெல்லாம் நுரையாக அதன் எதிரே அமர்ந்து சவரம் செய்து கொண்டிருந்தார் ..மிக நேர்த்தியாக முன்னும் பின்னும் இழுக்கையில் அழகாக நுரையை அள்ளிக்கொண்டு வந்தது கத்தி..நுரை தீர்ந்ததும் மீண்டும் தண்ணீரால் கழுவுட்டு மீசையை நீவிவிட்டு சிறிய கத்திரியால் செதுக்க ஆரம்பித்தார். வைத்த கண் வாங்காமல் பாத்தவளை .
" இப்போதான் எந்திரிக்கிய கழுத ..போ அம்மா கூப்பிடுதா என்னனு கேளு .." முகம் பார்த்து பேசாதவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் ..மூக்கின் கீழ் அடர்த்தியாக நீண்டு மேல் உதட்டின் இருபுறமும் சற்று வளைந்து அப்பா தடவும் போதும் சற்று இலகுவாக நீண்டு பின் மடங்கி போகும்...பலநாட்களாக பார்த்துக்கொன்டே இருக்கிறாள் ..விவரம் தெரிந்த நாள் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையையும் ஓருமணிநேரம் கண்ணாடியின் முன் அமர்ந்து விடுவார்.அப்பாவுக்கு அவரின் மீசை ஏன் அவ்வளவு பிடிக்கும் என்பது கவிதாவுக்கு புரிவதே இல்லை.
இரண்டொரு நாள் முன்னால் நடந்த சண்டையில் "நான் மீசை வச்ச ஆம்பளடி, நீ சொல்றதெல்லாம் கேட்டுட்ருக்க பொன்னப்பயனு நெனச்சியா" என்று அம்மாவை அடிக்க கையை ஓங்கியதும் ஞாபகத்தில் வந்து சென்றது .
அப்பா மட்டுமல்ல , தாத்தா, மாமா என வேட்டி கட்டும் எல்லாருமே மீசை வைத்திருக்கும் ரகசியம் இதுவரை கவிதவிர்கு புரிவதே இல்லை.
ஏதோ ஒருநாள் இரவில் " ஏம்மா எனக்கு மீசை வருமாம்மா "
"வராது "
"அப்பாக்கு இருக்கு "
"ஆமா அந்த திமிறுல தான் உங்கப்பன் ஆடாத ஆட்டம் ஆடுறான்..நீ வேறயா பேசாம கெடக்கமாட்ட "
அதோடு அம்மாவிடம் மீசை பற்றி கேட்பதே இல்லை
" கூப்டு எவ்வளவு நேரமாச்சு ..செவிட்டு சிறுக்கி எங்கிட்டு போய் தொலைஞ்சா?"ஆங்காரியாய் அம்மாவினை கண்டதும் கவிதாவின் மீசை ஆராய்ச்சி நின்று விட்டது..
இதோ வந்துட்டேன்மா "
இந்த காப்பிய குடிச்சுட்டு போய் நம்ம ரமேசு வீட்டுல இருந்து அருவாமனை வாங்கிட்டு வா ..நம்ம வீட்டு அருவமனைக்கு சாணை புடிக்கணும்னு எத்தனைதடவை நான் கரடியா கத்தினாலும் கேக்க நாதி இருக்காது இந்த வீட்ல"
அப்பாவை ஓரக்கண்ணால் பார்த்துகொன்டே வசை பாடும் அம்மாவை கடந்து அப்பாவின் மீசையைப் பார்த்துகொண்டே உரல் மேல் அமர்ந்து காபியை ரு சித்துக்கொண்டிருந்தாள் ..
"ஆமா, ஏற்கனவே பொழப்பு ஆக்கம் போல இருக்கு, இதுல உரல்ல உக்காரு..எந்திருச்சு போடி .
அத்த .அம்மா அருவமனை வாங்கிட்டு வர சொன்னா .
"வாடி என் மருமவளே, இன்னும் உங்காத்தா அந்த அருவமனைய சாணை புடிக்கலையாக்கும்
".இரு ஏலே ரமேசு அந்த அருவாமனைய எடுத்தால , சரி உங்க வீட்டுல என்ன குழம்பு? "
தெரியல ..என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி முடிக்கையில் ரமேசு வந்திருந்தான்..
முகத்தை ஒருபக்கம் திருப்பி உதட்டை குவித்து ஹுக்க்கும் என்று வக்கனை கட்டிவிட்டு கிளம்பியவளை "போடி கருவாச்சி " என்றான்.. நேற்றைய சண்டையின் தொடர்ச்சியாய்
"போடா ஊழமூக்கா "
"ஏட்டி யாரை ஊழமூக்கனு சொல்லுத, நாளைக்கி உன்னைய கட்டப்போறவன் அவனாக்கும் "
"ஆமா இந்த ஊழமூக்கன யாரு கட்டுவா ?"
அருவாமனைய வாங்கிக்கொண்டு கிளம்பியவளை "ஏட்டி , நாளைக்கி வெள்ளெனயே கெளம்பனும் உங்காத்தாட்ட சொல்லிரு "
"எங்கத்த போறோம் "
செந்தட்டி அய்யனார் கோவிலுக்கு நம்ம ரமேசுக்கு மொட்டை போடத்தான் .என்புள்ள அந்த காய்ச்சலுக்கு பொழைச்சு வந்ததுக்கு கடன் செலுத்த..நீயும் நாளைக்காச்சும் குளிச்சுட்டு வெரசா கெளம்பனும் கேட்டியா"
அத்தையின் நக்கல் புரிந்த ரமேசு சிரிக்க "போல மொட்டை " என்று அவனுக்கு மட்டும் கேட்குமாரு சொல்லிவிட்டு அவன் அழ ஆரம்பிக்கும் முன் கிளம்பினாள் .
....
மறுநாள் காலையிலேயே கிளம்பிவிட்டார்கள் எல்லாரும். லாரியில்ஏற அடம்பிடித்த ஆட்டை தோளில் தூக்கி ஏற்றிய அப்பாவை பெருமையாக பார்த்துக்கொண்டாள் ,
ரமேசு புது சட்டை எல்லாம் போட்டுகொண்டு வந்தாலும் ஒழுகிய மூக்கினைக் கண்டதும் கவிதாவால்
சிரிப்பை அடக்கமுடியவில்லை
அம்மா "இப்போ எதுக்கு லூசு மாதிரி பல்லகாட்டிற்றுக்க, பொட்டச்சி ஓயாம பல்ல காட்டிட்டு இருந்த வீடு விளங்குமா ?
தான் சிரிப்பதற்கும் வீடு விளங்குவதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி கேட்காமலேயே வாயை மூடிக்கொண்டாள் .
ரமேசின் இளக்கார சிரிப்பு மட்டும் ஏனோ உறுத்தியது .
செந்தட்டி சேர்ந்ததும் "அப்பனே அய்யனாரப்பா " கிழவியின் குரல் கேட்டு திரும்பியவள் முதல் முறையாக காண்கிறாள் அய்யனார் சிலையை .
குதிரையில் அமர்ந்து ஆஜானுபாகுவாய் , தோளில் தொடும் முடி , பெரிய கண்கள் ,கையில் அருவாள் ,
எல்லாவற்றையும் விட முக்கியமாய் ...பெரிய மீசை ..எண்ணை தேய்த்து மெருகேற்றிய சிலையை எல்லாரும் கடந்து செல்ல கவிதா மட்டும் நின்று பார்த்துக் கொன்டே இருந்தாள் .
"என்ன கண்ணு பாக்குற "
"அய்யனாருக்கும் மீசை பெருசா இருக்குல்லப்பா "
"ஹா ஹா , இதை தான் பாக்கியாக்கும், வா பூசைக்கு நேரமாச்சு, அங்க பாரு பூசாரித்தாத்தா வந்துட்டாரு "
சிவப்பு நிற வேட்டி கட்டிக்கொண்டு , நெற்றியில் குங்குமம் சகிதம் வந்த பூசாரி தாத்தா, கையில் ஏதோ வைத்திருந்தார் ..
"என்னப்பா அது"
"எது "
"பூசாரி தாத்தா கைல "
"அதுவா உடுக்கை "
"அப்டினா ?"
"தாத்தா பாட்டுப்படுவார் அப்போ அத அடிச்சுகிட்டே பாடுவார் ?"
"ஆத்தா சந்நிதியை மூடுங்கடா " சத்தமாக ஆணையிட்டார் .
எதிரே இருந்த சிறிய குடிசையினை மூடிவிட ஆரம்பமானது பூசை .
கிடா வெட்டும் வேளை அப்பாவின் வேட்டியில் முகம் மறைத்துக்கொண்டாள் . தலையில்லா ஆடு துடிப்பதைப் பார்க்கையில் அழுகை வந்தது.பூசை முடிந்ததும் ரமேஷின் அப்பா வந்தார்
" யோவ் மாப்ள வாரும், அப்படியே ஆத்தங்கரை பக்கம் போயிட்டு வருவோம் "
" நீ அம்மா கிட்ட இருடா கண்ணு, அப்பா இந்தா வாரேன் "
" நானும் வரேன், "
"ஆம்பளைங்க போற இடத்துக்கெல்லாம் உன்ன கூட்டி போக முடியாது , நீ போ "
அப்பாவும் மாமாவும் கிளம்பியதும் அம்மாவை நோக்கி சென்றாள் .
"உங்கப்பா எங்கடி "
"அப்பா மாமாகூட ஆத்தங்கரைக்கி போயிருக்கு "
"அதானே பாத்தேன் , இன்னும் ஆரம்பிக்கலையேனு " இது அம்மா
"சரி விடு, இதென்ன புதுசா என்னைக்கும் நடக்குறது தான" இது அத்தை
அப்பாவும் மாமாவும் தள்ளாடிக்கொண்டே வருவதை கண்டதும் அம்மா எழுந்து சென்றாள்
" கோவிலுக்கு வந்த இடத்துலயுமா "
அப்பா அதற்கு ஏதோ சொன்னார் ,விசும்பிக்கொண் டே வந்தாள் அம்மா
" விடுடி சாந்தி , எல்லாம் ஆம்பளைங்கிற திமிரு , பொட்டைக்கோழி கூவி விடியவா போகுது ,வா சாமி கதை சொல்ல போறார் , ஏட்டி கவிதா நீயும் வா " என்றாள் அத்தை .
பெரிய தொந்தி தொடைகளில் அமர்ந்திருக்க கையில் உடுக்கையுடன் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார் பூசாரி தாத்தா.கவிதாவை இறுக்கி வந்து அமர்கையில் எப்போதும் போல் அதே குமட்டல் தரும் நெடி அப்பாவிடமிருந்து.
டும் டும் என்று அதிரும் சத்தம் வந்ததும் அங்கே ஒரு அசாத்திய மௌனம்
" ஆறடி உயரங்கொண்டு
அகண்ட நெஞ்சில் வீரங்கொண்டு
ஆத்துத்தண்ணி முட்டி தொட
ஆடிகிட்டயே வாரணய்யா அய்யனாரூ சாமி அவன்."
கண்களைத் திறந்து கூட்டத்தை பார்த்து "ஊரு எல்லையில பகைவனைத் தோக்கடிச்சு எதுக்க எவனுமில்லாமா எட்டு ஊரு தாண்டி வந்து இங்க வந்து சேர்ந்தாரு அய்யனாரு ..ஊரு மந்தையில் நின்னு எவனாச்சும் மீசை வச்ச ஆம்பள இருக்கானானு மார்தட்டி மல்லுக்கு அழைச்சாரு .எமனுக்கே அண்ணன் போல எதுக்க நிக்கும் அவரை பாத்து எவனுக்கும் திராணியில்லை எதுத்து ஒரு வார்த்தை பேச.
"ஹ்ம்ம் "என்ற உறுமலோடு அப்பாவின் கை ஏதச்சயாய் மீசையை தடவிக்கொள்வதை உணர்ந்தாள் கவிதா
"எதுக்க எவனுமில்லைனு தெரிஞ்சதும், மதங்கொண்ட யானைக்கு பசியும் சேர்ந்து வந்தத போல ஊரெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இந்த ஆத்தங்கரை சேர்ந்தாரு .அமைதியான கரையினில ஓலையில குடிசை கட்டி ஒருத்தி வாழ்ந்தாலய்யா .அங்காள ஈஸ்வரினு பேர்கொண்ட தாயி அவ.
ஊரையே அழிச்சவருக்கு, ஓலைக்குடிசை பொருட்டாகுமா ...ஒத்த கையில் பிரிச்சுப்போட எத்தனிச்சு நிக்கையில ,அய்யோ ,முடியலையே அவரால "
உடுக்கை நிற்க கோவிலின் அமைதி கவிதாவை ஏதோ செய்தது .
அப்புறம் என்னாச்சு ? இது மாமா
"இரும்பு போல கை ரெண்டும் , செனங்கொண்ட சிங்கம் போல சேர்த்து வச்சு குடிசைமேல பாஞ்சாறு , காத்துக்கே பிஞ்சுபோகும் ஓலை இவரு கைகளுக்கு அசையலையே ,மீண்டும் மீண்டும் முயற்சி செஞ்சு சோர்ந்து போய் விழுந்தாரு ."
" அதிராம பூமி தொட்டு , சலங்கை ரெண்டும் சத்தமிட வெள்ளி முடி சூடிக்கிட்டு வந்த வெளியே வந்தா கிழவி அவ,
என்னய்யா கலைச்சுப் போய்ட்டியா , வேணும்னா நாளைக்கி வாரியா?ஊரயே ஜெயிச்சவன இந்த ஓலை குடிசை என்ன செய்யும் , எக்களாமா சிரிச்சவள எதுத்து பாத்து கேட்டாரு,
" மல்லாதி மல்லனெல்லாம் மண்ண கவ்வ வச்சவன் நான் , மண் குடிசை நிக்குதே மலை போல முன்னாடி , யாரு தாயீ நீ "
" ஆதி நாந்தான்
அந்தம் நாந்தான்
பூமி நாந்தான்
உன்னையும்
உங்கப்பனையும்
உலகத்துக்கே கூட்டி வந்த
சாமி நாந்தான் "
சிரிச்சலே ஆத்தா, எவனுக்கும் தலைவணங்க சாமி அவன் .அவ முன்னால தலைவணங்கி பாதம் தொட்டு சொன்னானம்மா .." தாயி, நீயே சரணமுன்னு"
ஆத்தங்கரையை காத்துகிட்டு காவலா நிக்கனும்னு ஆணையிட்டு அமர்ந்தாலே குடிசைக்குள்ள.. அசைவ பூசை நேரம் மட்டும் உனக்கான நேரமுன்னு அமைதியாக அமர்ந்துவிட்டா அங்காள ஈஸ்வரியே "
உடுக்கை சத்தம் முடிவுக்கு வர எல்லாரும் பயபக்தியோடு எழுந்து சென்றார்கள் விருந்திற்கு ..
கவிதா மட்டும் அம்மன் சந்நிதியை நோக்கி நடந்தாள் அய்யனாரை கடந்து ..இப்போது ஓலை குடிசை ஏனோ அய்யனாரின் மீசையைவிட கம்பீரமாய் தெரிந்தது அவளுக்கு ......
Super da nice, dont forget to script that nayanthara story
ReplyDeletekandippa thalaivarae
ReplyDeleteNice one sri...
ReplyDelete