இதயம் என்ற
ஒன்றினை
எனக்குள்
எதற்காய் படைத்தாய்...
உதிரம் அனுப்பும்
எந்திரம் தானே
அதன் வடிவம்
எதற்கு இத்தனை சிக்கலாய் ?
நெஞ்சின்
கூட்டில் நிதமும் துடித்து
நினைவுகள் கொண்டு
நிதமும் நிறைந்து
என்றோ நடந்ததை
இன்று நினைந்து
எவர் அழுதாலும்
அதற்காய் கசிந்து
அனுதினம் என்னை
வதைத்திடத் தானா?
இதயம் வடிக்கும்
வேலையை மட்டும்
என் போல் எந்திர
அறிஞன் செய்வேனானால்..
தங்கத்தில் செய்வேன் இதயம் நான்
தசையில்
செய்ததால் தான்
“தருகிறேனடி என் இதயம்
“ என்றதும்
“வேண்டாம்
தேவையில்லை “ என்பார்கள்
தங்கத்தில்
செய்திருந்தால்
தருகிறேன்
என்றதும் மறுப்பார் மிக அரிதாக...
இரும்பில்
செய்வேன் இதயம் நான்
எவர் முயன்றாலும்
உடைவதற்கில்லை..
மண்ணில் செய்வேன்
இதயம் நான்
எவர் உடைத்தாலும்
உதிரியால் செய்யலாம்...
கோடி
விண்மீன்களும்
கோள்கள் பலவும்
‘படைத்தாயாமே..
இதய வடிவம்
செய்யும் வேலையில்
இப்படி கோட்டை
விட்டு விட்டாயே..?
பாற்கடலில் உறங்குவதாகவோ...
பாழும் சிலுவையில் தொங்குவதாகவோ
பாசாங்கு செய்யாது பதில் சொல் எனக்கு...
வெண்ணை திருடிய போதும்
வெளிரா அம்முகம் இன்று
வெளிரக் காண்கிறேன் நான்
கடவுளின்
பதில் வந்ததும் பகிர்கிறேன்.....
No comments:
Post a Comment