அனைவருக்கும்
வணக்கம்.....
வழக்கம் போல்
இந்த முறையும் கவிதைதான் எழுதி இருக்கிறேன்..ஆனால் சற்று அதிகப்படியான கற்பனையுடன்..
நம் ஒவ்வொருவருக்கும்
கடவுளைப்பார்த்தால் இந்த கேள்வி கேட்க வேண்டும் என்று இருக்கும்..அப்படி சற்று
கோணலாக யோசித்தபோது தோன்றிய கற்பனைதான் இந்த கவிதை..
கொதிக்கும்
தேனீர் ஊதி ருசித்து
கொலை கொள்ளை என
செய்திகள் வாசித்து...
ஆள்பவன் முதல்
ஆண்டவன் வரை
அனைவரையும்
வசைபாடி
அடுத்து என்ன
செய்யலாம் என்று
ஆராய்கிற வேளையில்
அழைத்தது அழைப்பு
மணி,...
கதவைத்
திறந்தால்...
அங்கே ஒருவன்...
“நேரமாகி விட்டது
நண்பா..
கிளம்பு “என்றான்.
நம்மை போல் இவனும் கிறுக்கன் போலும்
மனதினில் சிறிய
நகைப்புடன் நானும்
“யார் நீ நண்பா”
என்றேன் மெதுவாய்
"கடவுளின் தூதன்..
காலனின் கையாள்.."
அடுக்கடுக்காய்
அவன் அள்ளி விடுகையில்...
நிச்சயம் இவனும்
நம் ரகம் தான்...
மனதினில் எண்ணம்
ஓடிடும் வேளை...
நின்றது நேரம்..
உடல் விட்டு
உயிர் சென்றது தூரம்..
நினைவு திரும்பி நான்
விழித்த வேளை..
விடுதலை என்பதை
உணர்ந்தேன் நான்...
மரணம் என்பது
இத்தனை சுலபமா...
சுற்றம் அழுத
சத்தம் மட்டும்
காற்றில் கலந்து
காதினை அடைந்தது..
வங்கியில் பணம்
வாங்கிய வீடு
வரிசையில் நின்று
வென்ற என் காதலி...
அத்தனையும்
தொலைத்து
அரைமனதாக
அருகினில் பார்த்தால்....
அருகில் அமர்ந்து
புன்னகை செய்தான்..
வாசலில் நின்று
வசனம் சொன்னவன்..
மிதந்து சென்ற
வாகனம்
மெதுவாய்
நின்றது..
ஏன்? என்று நான் கேட்கும் முன்பே..
அமெரிக்க உளவு
செயற்கைகோள்
அங்கே பழுதாகிப்
போனதால்..
போக்குவரத்து
நெரிசலாம் பாதையில்..
பதில் வந்தது...
பேசிப்பேசியே
காலம் கொன்ற இனமல்லவா..
பேச்சுக்
கொடுத்தேன் காலனின் தூதனிடம்...
நரகம் தான் நமக்கு
என்று நிச்சயம் தெரியும்- இருந்தும்
நப்பாசை என்பது நம்முடன் பிறந்ததால்
சொர்க்கம்
இன்னும் எவ்வளவு தூரம்..?- நான்
“சொர்க்கத்தை
கடந்து விட்டோம் நாம்” -அவன்
வானுலகத்தின்
அரசியல் நிலை என்ன...
தூதனின் வாய்
திறக்க முயன்றேன் நான்...
முறைப்பான் என்று
நினைத்தேன் நான்..
முறுவலித்தவன்
சொன்னான்...
முப்பெரும்
தேவியும்
முப்பத்துமூன்று
விழுக்காடு கேட்க
கடைசியில் காலனின் உதவியால்
அமைந்ததாம் தொங்கு
பாராளுமன்றம்...
பேசிமுடிக்கையில்
கடவுளின் மன்றம் அடைந்தேன் நான்..
"பொய்கள் கொண்டு
பூமியை நிறைத்தேன்..
பொறாமை கொண்டேன்
நண்பன் வெற்றியில்
கவிதையின்
பெயரில் பலரைக் கொன்றேன்..
கடவுளை பல நாள்
காறி உமிழ்ந்தேன்
காதலி அருகினில் இருந்தும்
கூட
அவள் தோழியின்
அழகினை கண்களில் கவர்ந்தேன்.".
பட்டியல் நீண்டது
என் பாவ செயல்களால் (?)
கடவுள்
பார்த்தான் என்னை..
"எங்கே அனுப்ப
நான் உன்னை.."....
கேள்வியை அவன் முடிக்கும்
முன்னே..
அனுப்பும் வேலையை
அப்புறம் பார்க்கலாம்..
அடுக்கடுக்காய்
மனம் துளைக்கும்
கேள்விகள்
உண்டு எனக்கு...
பதில் சொல் முதலில் நீ
மாலை சூடி..
பாமாலை பாடி
பணிவோடு தன்
பாதம் பணிந்த
மானிடர்களை
மட்டும்
இதுவரை கண்டவன்..
தன் படைப்பின்
தவறாய் கண்டான் என்னை..
"கேள்"..என்றான்......
அந்த ஒற்றை
வரியில் தொற்றிக் கொண்டேன் நான்..
இனி நானே கடவுளின் வேதாளம்...
அடுத்த பதிவுகலெல்லாம் கேள்வி-பதில்களின் தொகுப்பு
No comments:
Post a Comment