Pages

Sunday 23 December 2012

பேய் அரசாள பிணம் தின்னும் சாத்திரங்கள்....




சிறிய இடைவேளைக்குப் பிறகு அனைவருக்கும் வணக்கம்....
                                   
                   இந்த பதிவினை எழுதத் துவங்கும் இந்த வினாடி.. எங்கோ வசிக்கும் என் சகோதரியோ,என் தோழியோ இந்த வினாடி பாதுகாப்பாக இருக்கிறாளா? என்ற பயத்தில் விரல்கள் நடுங்குவதை உணர்கிறேன்..தலை நகர் டெல்லியில் நடைபெற்ற சமபவத்தின் வினையாக இருக்கலாம்......மாணவர் அமைப்புகள், மகளிர் சங்கங்கள், ஊடகங்கள் என போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்....

ஏற்கனவே அனைவருக்கும் கண்கள் விழித்திருப்பதால், டெல்லி சம்பவத்தைப் பற்றி நான் எழுதப் போவதில்லை..

ஆனால்..

போராடிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்,

" கிறிஸ்துமஸ், இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என அத்தனையும் தாண்டி இந்த பிரச்சனையின் தீவிரம் குறையாமல் இருக்கட்டும்...மறதி என்ற தேசிய வியாதி இந்த பிரச்சனையிலாவது உங்களை பீடிக்காமல் இருக்கட்டும்....."

இனி எனது கருத்தினைப் பதிவு செய்கிறேன்...


"இந்தியாவிற்கு சுயாட்சி வழங்குவதா?

என்ன விளையாடுகிறீர்களா ?

முதலில் சுயாட்சி என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியுமா? அவ்வளவு ஏன், குறைந்தது தங்களுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தையாவது அவர்களால் உருவாக்கி கொள்ள முடியுமா?"...

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க இங்கிலாந்து முடிவு செய்த போது, இந்த நையாண்டி வரிகளை உதிர்த்தவர் பர்க்கன்ஹட் என்ற ஆங்கிலேயர்...
இதை  கேட்கும் போது இரத்தம் கொதிக்கத்தான் செய்கிறது..ஆனால் நடப்பதை பார்த்தால் ஒரு வேளை உண்மையைத் தான் சற்று மிகைப்படுத்தி சொல்லி இருக்கிறாரோ என்றே தோன்றுகிறது...

ஆம்...

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு...

சில நாட்களில் இந்திய பாராளுமன்றத்த்தில் நிறைவேற உள்ள ஒரு சட்ட மசோதா...

எதற்காக இந்த இட ஒதுக்கீடு...

தாழ்த்தப்பட்டவர்கள் பெரிய பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்பதாலா?..

இல்லை....., படிப்பு, திறமை இவற்றினை விட தாழ்த்தப்பட்டவர்கள் என்ற தகுதி பதவி உயர்வுக்கு முக்கியம் என்று கருதுவதாலா...?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியப்போவதே இல்லை...

எவ்வளவு யோசித்த போதும் ஒன்று மட்டும் விளங்கவே இல்லை...

.ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்று வேலையில் அமர்ந்திருக்கும் ஒருவனுக்குத் தானே மறுபடியும் உதவப் போகிறார்கள்..நடக்க முடியாதவனை தூக்கிவிடுவதில் தவறில்லை தான்...ஆனால் நடப்பவனுக்கு கால்கள் வலிக்கும் என்று மோட்டார் வாகனம் வாங்கித்தருவேன், அதுவும் அடுத்தவன் காசில் என்றால் என்ன நியாயம்..

வர்ணாசிர முறை எந்த அளவிற்கு தவறானதோ, அந்த அளவிற்கு தவறானது இந்த சட்டம்...

அம்பேத்கரே இருந்தால் கூட இந்த சட்டத்திற்காக மகிழ்வாரா என்பது சந்தேகமே....

ஏனென்றால்..

இந்த சட்டத்தினால், வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் செருப்பு தைப்பவனுக்கோ, முடி வெட்டுபவனுக்கோ என்ன கிடைக்கும்...?

எதுவும் கிடைக்காது என்பதே உண்மை...

ஏழை ஏழையாகவே இருப்பான் , பணக்காரன் பணக்காரனாகிக் கொண்டே செல்வான் தாழ்த்தப்பட்டவன் என்ற தகுதியுடன்...

1950 ல் இந்த சட்டத்தை கொண்டு வந்திருந்தால் அது நியாயம்..அப்போது தாழ்த்தப்படவர்கள் என்பவர்கள் முன்னேற்றக் காற்றினை சுவாசிக்கப் போராடிக் கொண்டிருந்தனர்...ஆனால் இன்று எல்லா துறைகளிலும் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் கணிசமாக இருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு சட்டம் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்..100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒடும் 10 பேரில் , ஒருவன் மட்டும் 50 மீட்டர் தூரம் ஒடினால் போதும் என்பது போல் இருக்கிறது,,,இந்த சட்டம்...

விலைவாசி விண்ணை முட்டுகிறது...
தினமும் உயர்கிறது எரிபொருள் விலை...அடுப்பு எரிகிறதோ இல்லையோ உழைப்பவன் வயிறு எரிகிறது தினமும்...
ஊழலில் உலகமே நம்மைக் கண்டு வியந்து போய் இருக்கிறது...

இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருக்க இந்த சட்டத்தினை இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற என்ன காரணம்...?
 
வேறு என்ன ஓட்டு வங்கிதான்...இன்னும் எத்தனை காலம் தான் ஒதுக்கீட்டினால் ஓட்டு வாங்குவார்களோ..?

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இப்படி ஒரு ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அன்னிய நேரடி முதலீட்டு பிரச்சனையில் அரசினை ஆதரிப்பதாக அறிவித்தார்...செல்வி.மாயவதி...அடடா......என்ன ஒரு பெருந்தன்மை...தேசத்தை புதைக்க குழி தோண்ட ஒப்புக் கொண்டால், அதன் குரல்வளையை நெறித்துக் கொல்ல உதவுவாராம்....

எப்படியோ அன்னிய நேரடி முதலீடு,பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இரண்டும் நிறைவேற வழிவகை செய்தாயிற்று....சரிதான்..

இனி இந்த நாட்டில்... "பேய் அரசாள பிணம் தின்னும் சாத்திரங்கள்.".








  









Sunday 21 October 2012

இரயில் பயணங்களில்.....


நிறை மாத கர்ப்பிணி போல்
நடை போடும் ரயில் பெட்டியே..
எத்தனை பொக்கிஷம் சுமக்கிறாய் நீயும்....

எதிரே அமர்ந்து உண்டு உறங்கி
ஓரப்பார்வை வீசி ஒரு வார்த்தை கூட
பேசாமல் இறங்கி செல்லும்
நாகரீகப் பெண் மேல் வரும் 
ஈசல் ஆயுள் காதல்.....

எங்கேயோ பார்த்த நியாபகம் என்று
என்றோ சொல்லப் போகும்
ஓர் இரவு சிநேகிதங்கள்...

யார் எவர் என்றே தெரியாமல்
எதில் தொடங்கினாலும் அரசியலில்
முடியும் அர்த்தமற்ற பேச்சுகள்..

அழகான மழலை அது...
கடந்து செல்கையில்
அமைதியாய் கண் சிமிட்டி
அதன் புன்னகை பறிக்கும்
குறும்புகள்..

அனைவரும் உறங்கிய பின்
அமைதி ஒன்றே துணையாக
கடந்து செல்லும் மரங்களிடையே 
காதலியைக் காண்கின்ற
ஜன்னலோரக் கனவுகள்...

கண்ணாடி பார்த்து சிரத்தையுடன்
தலை வாரி சிறிது பொழுது கழிக்கலாம் என்று
கதவோரம் நிற்கையில்
கண நேரத்தில் தலை கலைக்கும்
காற்றின் மேல் வரும் செல்லக் கோபங்கள்...

இத்தனையையும் ஏந்தி வரும் ஏந்திழையே
உன்னுடன் பயணிக்கும் போது தான்
அடடா...வாழ்க்கை அழகானது என்ற எண்ணம் வருகிறது......

Thursday 18 October 2012

தண்ணீர்..தண்ணீர்.....


                  
                                  

" முதல் உயிர் பிறந்தது நீரில்
என்பதால்- ஒவ்வொரு உடம்பிலும்
ஓடிக் கொண்டே இருக்கிறது
அந்த உறவுத்திரவம்..."


வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து....

இந்த கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒன்று மட்டும் தான் நினைவுக்கு வருகிறது.
தண்ணீரையும் மனிதனையும் பிரிக்கவே முடியாது..கர்பத்தில் வளர்ந்த சிசு தண்ணீர் குடத்தில் சுவாசிப்பதில் தொடங்கி தண்ணீர் குடத்தில் முடிக்கும் வரை.

Thursday 4 October 2012

அக்கினிக் குஞ்சுகள் எங்கே ?...

                                           

                                                 

 இரவு ஒன்பது மணி...

  விஜய் தொலைக்காட்சி சேனல்...

 " தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்." ..என்று நல்ல குரலை நாராசமாக்கி தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே முக்குவதைப் போல் ஒரு பெண் கதறிக் கொண்டே வர, துவங்குகிறது நிகழ்ச்சி,

தமிழ்த் திரையுலகின் முன்னணி பின்னணி பாடகர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்கிறார்கள்..

ஏழு வயது சிறுவன் ஒருவன் மிக சிரத்தையுடன் மழலை மொழியில் ஒரு தமிழ் பாடலை பாடி முடிக்கிறான்

" அந்த ரெண்டாவது சரணம் பாடுறச்சே, சுருதி விலகிடுத்து, பல்லவி பாடுறச்சே வாய்ஸ் உள்ள போய்டுத்து, மத்தபடி நன்னா பாடினேள்" என்ற ரீதியில் கருத்துகள் சொல்லப்படுகின்றன...

அடுத்து ஒரு சிறுமி பாடத் துவங்குகிறாள்... வயது வந்தவர்கள் பாடும் போதே சொல்ல சற்று கூசும் ரெட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் கொண்ட அந்த பாடலை அதே வளைவு நெளிவுகளுடன் பாடுகிறாள்...அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்..குறிப்பாக பெற்றவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்..அடடா கண் கொள்ளாக் காட்சி..

அடுத்ததுதான் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் வருகிறது காட்சி.. பாடி முடித்த பத்து வயது சிறுவன் ஒருவன்
" நான் நல்ல பாடுனேன், எனக்கு எல்லாரும் ஓட்டுப் போடுங்க ப்ளீஸ் " என்று கெஞ்ச அதை வழிமொழிவது போல் அவனது பெற்றோரும் தொலைக்காட்சி பெட்டியின் முன் நின்று கதறுவது நிச்சயமாய் எத்தனை பேரை முகம் சுளிக்க வைக்கும் என்று தெரியவில்லை..

இதை எல்லாம் பொறுத்துக் கொண்டாலும், " நீ நன்னா பாடினேடா கண்ணு, ஆனாலும் யாராவது ஒருத்தர் எளிமினேட் ( நீக்கப்பட) ஆகணும், அதனால உன்ன எளிமினேட் பண்றோம்"  என்று வசனம் பேசிவிட்டு எழுந்து மேடைக்கு வந்து அந்த சிறுவனையோ, சிறுமியையோ, கட்டிக் கொண்டு ஒரு நடுவர் அழத்துவங்க, அந்த சிறுவன், அவனது பெற்றோர், நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று அனைவரும் அழ, கடைசியாக  சிரித்த முகத்துடன் தொலைக்காட்சி முன்பு அமர்ந்த நாம் வரை கண்களை கசக்குவோம்...அதோடு விடுவார்களா என்றால் அதுதான் இல்லை.. அந்த குழந்தை வீடு சென்று பக்கத்து வீட்டுகாரர்களை கட்டிக் கொண்டு அழும் வரை காட்டி நோகடிப்பார்கள்...

                                          

இத்தனையையும் பார்ப்பதற்காகவே நாமும் நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் தொலைக்காட்சி முன் தினமும் அமர்ந்திருக்கின்றோம்...

ஆனால் என்றாவது ஒரு நாள் சிந்தித்திருப்போமா,

காகிதப்பூக்களாய் காட்டப்படும் அந்த பிஞ்சுகளின் மனநிலை என்னவென்று...

பள்ளி வகுப்புகளில் இனி அந்த குழந்தையால் எப்படி சகஜமாக அமர்ந்து படிக்க முடியும். தோல்விகள் என்பது வயது முதிர்ந்தவர்களையே எந்த அளவு பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, அது குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும்..இந்த போட்டியில் தோல்வியடைந்த அந்த குழந்தை சகஜ நிலைக்குத் திரும்பவே பல நாட்கள் பிடிக்கும்..அப்படியே திரும்பினாலும் சுற்றி இருக்கும் மற்ற குழந்தைகள் அதை நியாபகப்படுத்தாமல் இருப்பார்களா ?
இதையே சற்று மாற்றியும் பார்க்கலாம்.அதாவது, தோல்வியைவிட கொடூரமானது இளமையில் அளவுக்கு அதிகமான புகழ்..பெரிவர்களே புகழை சரியாகக் கையாளத் தெரியாமல் கர்வம் தலைக்கேறி தறிகெட்டு திரிகின்றோம். பிஞ்சுகளுக்கு அது கிடைத்தால்... இனிமையாக அமைய வேண்டிய இளமைக்காலம், "நான் மற்றவர்களை விட உயர்ந்தவன்" என்று தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு தரிசாகப் போய்விடாதா?

அடுத்து அத்தனை பேர் முன்னிலையிலும் குழந்தைகளைக் கெஞ்ச வைப்பது,

ஓட்டுக்காக அரசியல் எச்சிலைகள் பிச்சை எடுக்கலாம்,  எதிர்கால அப்துல் கலாமோ, கல்பனா சாவ்லாவோ பிச்சை எடுக்கலாமா?. சுமரியாதை என்பதே இப்போதே விதைத்தால் தானே எதிர்காலத்தில் அவனோ, அவளோ, தன்னைத்தானே மதிப்பார்கள்...சுயமரியாதை தானே தமிழனின் அடையாளம்..அதையே குழி தோண்டிப் புதைக்கலாமா?

துள்ளித்திரிய வேண்டிய பட்டாம் பூச்சிகளை இவர்கள் கூண்டில் அடைத்து வித்தை காட்டுகிறார்கள், அதை நாமும் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறோம்...

இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்,  " திறமையை இளமையிலேயே கண்டறிவது தானே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அது எப்படி தவறாகும் ? என்று

நியாயமான கேள்வி தான்..

திறமையைக் கண்டறிய வேண்டியது தான்..ஆனால் அதற்கு இத்தனை விளம்பர சாயம் பூசத் தேவை இல்லை...பரிசு என்று அவர்கள் அறிவிப்பதைப் பாருங்கள்.. "25 இலட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு ", இதனால் பத்து வயது குழந்தைக்கு என்ன பயன் ? .அவர்களது பெற்றோர்கள் பெருமையாக பேசிக்கொள்ள வேண்டுமானால் அது உதவும்.
திறமையைக் கண்டறிவதாக இருந்தால் அது தன்னம்பிக்கையை வளர்க்கும் போட்டியாக இருக்க வேண்டும்...பரிசு தர விரும்பினால் படிக்க நல்ல புத்தகத்தை கொடுங்கள், இல்லையெனில் அறிவை வளர்க்க கணிப்பொறியைக் கொடுங்கள்..அதுவும் இல்லையா, அறிவியல் சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதாக  அறிவியுங்கள்.. அதிலும் நட்பினை வளர்க்கும் விதத்தில் எந்த குழந்தை வெற்றி பெறுகிறதோ, அவனது அல்லது அவளது நண்பர்களையும் அழைத்து செல்வதாக சொல்லுங்கள்..

அதை விடுத்து சிறகுகள் விரித்து பறக்க வேண்டிய பறவைகளை சிந்திக்கவே விடாமல் சிறைப்பிடிப்பதென்ன நியாயம்....

" அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
 ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
 வெந்து தணிந்தது காடு- தழல்
 வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
 தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்..."

அடடா, எத்தனை பெரிய கனவு பாரதிக்கு,.. பொந்தினில் வைத்தால் காட்டையே எரிப்பார்கள் தான் நமது அக்கினிக் குஞ்சுகள் .....ஆனால் அவர்களை நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடைப்பது சரியா...?

கேள்வியுடன் மட்டுமல்ல வருத்ததுடனும் கோபத்துடனும் முடிக்கிறேன். இந்த பதிவை...


ஸ்ரீ....

Tuesday 2 October 2012

கச்சத்தீவு- ஒரு கேள்வியும், சில கடிதங்களும்...

இராமேஸ்வரத்தில் சிறு கிராமம்...

கதிரவன் கசங்கிய கண்களுடன் விழித்துப்பார்க்கிறான்..

அன்று ஐந்து வயது மேரிக்கு பள்ளி விடுமுறை..தினமும் தான் விழிக்கும் முன்போ அல்லது தூங்கிய பிறகோ வீட்டில் தென்படும் தனது அப்பா அன்று காலையில் இருந்தே தன்னுடன் இருப்பது அவளுக்குத் திருவிழா போல் இருந்தது.
முத்தமழையில் நனைத்து அருகிலிருந்த பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கித் தந்துவிட்டு..கையில் வலையுடன் டா டா காட்டியவாரே கடலுக்குள் நடந்து செல்லும் தந்தையை கை அசைத்தவாரே வழி அனுப்பி வைக்கிறாள் மேரி.

இரண்டு நாட்கள் கழித்து.

அம்மாவின் அழுகை கேட்டுக் கண் விழித்து கண்களை கசக்கியவாரே எழுந்து வெளியே வந்து பார்க்கிறாள்.

அப்பா ஏன் வீட்டு வாசலில் படுத்திருக்கிறார்..?
அவரை சுற்றி ஏன் அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள் ?
.
எப்போதும் வீட்டுக்குள் தூங்கும் அப்பாவிற்கு என்னவாயிற்று என்று புரியாமல் இருந்தாலும் அம்மா அழுவதால் அவளுக்கும் அழுகை வரும் போல் இருந்தது...எந்த பெட்டிக்கடையில் மேரியின் அப்பா மிட்டாய் வாங்கித்தந்தாரோ அதே பெட்டிகடையில் படபடக்கும் செய்தித்தாள் சொல்கிறது காரணத்தை..

இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு. இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேர் உயிர் இழந்தனர்...
முதல்வர் கண்டனம்...உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் கருணைத்தொகை அறிவிப்பு...
பிரதமருக்குக் கடிதம் எழுதப்போவதாக உத்திரவாதம்...

பாவம்..இனி இவர்கள் எழுதப்போகும் கடிதம் தன் தந்தையை மீட்டுத்தராது என்று மேரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...


 இது போல் ஒன்றல்ல இரண்டல்ல... ஆயிரம் மேரிகள் அனாதை என்று பெயர் வாங்கி வெகு காலாமாகிறது...எனது சந்தேகமெல்லாம் கடிதம் எழுதும் நம் முதல்வர்கள் அதை பிரதமருக்கு அனுப்பினார்களா என்பதே..ஒரு வேளை,முகவரி தெரியாமல் இருந்துவிட்டார்களா?... இல்லை தமிழில் எழுதி இருந்து படிக்க முடியாமல் டெல்லிக்காரர்கள் கிழித்துவிட்டார்களா?..இதை எல்லாம் கேட்டால் நம்மை தேச துரோகி என்பார்கள்..வெளி நாட்டிலிருந்து நிதி வருகின்றது என்று கைது செய்வார்கள்...ஆகவே நாம் அதைவிடுத்து பிரச்சனையின் ஆணி வேரை மட்டும் பார்க்கலாம்..

ஒவ்வொரு நாள் செய்தித்தாளையும் மீனவர்களின் இந்த பிரச்சனை ஒரு சிறு பகுதியாகவாவது ஆக்கிரமித்திருக்கிறது...
ஆனால் முடிவில்லாத கதையாக இது நீண்டு கொண்டிருக்கக் காரணம் என்ன?

இறால்கள், இவைதான் பொதுவான காரணமாக சொல்லப்படுகின்றன..வாழ்வாதார நெருக்கடியின் காரணமாக இந்த இறால்களைப் பிடிப்பதற்காக நமது மீனவர்கள் " சர்வதேசக் கடல் எல்லைக் கோடு" என்று வரையறுக்கப்பட்ட பகுதியினைத்தாண்டி செல்லும் போது தான் அவர்களைக் கைது செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு..( கவனிக்கவும்... கைது செய்வதாக மட்டும் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.)..

ஆனால் இங்கே ஒரு விஷயம் நெருடலாக இருக்கும்..
சர்வதேச எல்லைக் கோடு என்று வரையறுக்கப்பட்ட இந்த எல்லை எப்படி உருவானது ?..
அதைத்தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என்று வரையறுத்திருப்பது எவ்வாறு...?
நம் மீனவர்கள் ஏன் அதை மீறுகிறார்கள்?...

இந்த கேள்விக்கான விடை சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது..அது... கச்சத்தீவு....

                                                         
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு..1974 ல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்படுகிறது..அதற்குப் பிறகு தான் ஆரம்பிக்கிறது தலைவலி.....1974 ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்களுக்கு இந்த கடல் பகுதியில் மீன் பிடிக்க உரிமை இல்லை..இந்த கச்சதீவினைச் சுற்றி உள்ள பகுதிகள் தான் நல்ல மீன் பிடிப்புப் பகுதிகள்... அதைத்தாரை வார்த்தார்கள் நம்மவர்கள்...நேற்று வரை சொந்தமாயிருந்த வீட்டில் இனி நுழையக்கூடாது என்று உத்தரவிட்டால் யாருக்கும் கோபம் வரும்..ஆனால் தமிழனின் கோபம்,ஒற்றுமையின் அளவு தான் நமக்குத் தெரியுமே மத்தியிலே மந்திரி பதவி என்றால் மாநிலத்தையே விற்று விடுபவர்களாயிற்றே நாம்...அது தான் அன்றும் நடந்தது..நடந்த போராட்டங்கள் எல்லாம் வீழலுக்கு இறைத்த நீராய்ப் போனது..இன்று கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்பெதெல்லாம் தும்பவிட்டு வாலைப் பிடிக்கும் கதைதான்..

மிகக் குறைவாக இருந்த இந்த கொலைகளும், கைதுகளும் அதிகமாகியது இலங்கை-விடுதலைப்புலிகள் யுத்தத்தின் போது தான் " கரும் புலிகள்" என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினை ஒடுக்குவதாக சொல்லிக் கொண்டு கடலில் தென்படும் தமிழர்கள் மீதெல்லாம் தாக்குதல்கள் தொடங்கின..அன்று தொடங்கி இன்று வரை தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையில் கடிதப்போக்குவரத்தை மட்டுமே இந்த பிரச்சனை உருவாக்கி இருக்கிறது...சிறந்த கடற்படை இருந்தும் இதுவரையில் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை...


இதுவரியில் நமது தரப்பின் குற்றச்சாட்டுகளைப் பார்த்தோம்..இனி இலங்கை தரப்பில் பார்க்கலாம்..

நைலான் வலைகள், இதைத்தான் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் மீது குற்றச்சாட்டாக சொல்கிறார்கள்...
இந்த நைலான் வலைகள் மற்றும் விசப்படகு கொண்டு அடித்தள மீன்பிடிப்பு (Bottom trawling ) என்ற முறையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்..உண்மைதான். இந்த நைலான் வலைகளும் , அடித்தள மீன்பிடிப்பு முறையும் கடல் வளத்தை அழித்துவிடக்கூடும்...ஆனால் அதற்காக எல்லை தாண்டினாலோ, நைலான் வலை வைத்திருந்தாலோ கொல்வது என்பது நியாயமல்லவே..

என்ன செய்யலாம்?...

அரசியல் ஆதாயம் தேடும் பிச்சைகாரர்களின் கூட்டம் கச்ச்தீவினை மீட்டெடுப்போம் என்று ஒரு பக்கம் உரக்கக் கூவிக் கொண்டே இருக்கட்டும்..நாம் மற்றவழிகளை சிந்திக்கலாம்..

பேச்சுவார்த்தை மூலம் நைலான் வலைகளை உபயோகப்படுத்துவதை இருவரும் தடுக்கலாம்
இறாலுக்காகத்தான் எல்லை தாண்டுகிறார்கள் என்றால் அதை தொழில்னுட்ப உதவி கொண்டு வேறு வழிகளில் உற்பத்தி செய்யலாம்
இலங்கை ராணுவம் போல் நாமும் நமது ராணுவத்தை இந்திய சமுத்திரத்தில் கண்காணித்து மீனவப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்..
எதற்கெடுத்தாலும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நாம் மீனவர்கள் சர்வதேச எல்லைக் கோட்டினை அடையாளம் கண்டு கொள்ள பயன்படுத்தலாம்....

ஆனால் நமக்கெங்கே இருக்கிறது நேரம்...ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தவும், செம்மொழி மாநாடு நடத்து சுற்றை நாசமாக்கவும், ஊழல் வழக்கிற்காக பெங்களூரு நீதிமன்றம் செல்லவுமே நேரம் சரியாக இருக்கிறது...


இன்று இராமேஸ்வரத்தின் கடற்கரை மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கும் மேரி, சில வருடங்களில் " என் தந்தையின் மரணத்திற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?" என்று கேட்கலாம்...

பதில் இருக்கிறதா நம்மிடம்.....

இல்லை அன்றைக்கும் கடிதம் எழுதிக் கொண்டிருப்பீர்களா ?

Friday 21 September 2012

மாண்புமிகு மதராஸி.

ஆகஸ்ட் 28,2009...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்....


பெட்டியையும் பயணச்சீட்டையும் மீண்டும் ஒரு முறை சரிபாத்துக் கொள்கிறான் குமரன்.....பொறியியலில் பட்டம் பெற்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை கிடைத்து இன்று வட இந்தியாவில் ஒரு கிளையில் வேலையில் சேர்வதற்காக கிளம்பிக் கொண்டிருக்கும் இளைஞன். தமிழ் நாட்டை விட்டு வெளியே செல்வது இதுவே முதல் முறை..அவனது வண்டி நடைமேடையை அடைந்து விட்டதாக அறிவிப்பு வந்ததும் அதில் சென்று ஏறி அமர்கிறான்.இது தான் அவன் எதிர்பார்த்த தருணம்.....

இன்றிலிருந்து வாழ்வில் ஒரு சகாப்தம் துவங்குகிறது...சொந்த வீடு, கார், காதலி என்று அவன் மனம் வேகமாக பயணிக்க அதை விட வேகமாக பயணிக்கிறது வண்டி..பயணச் சீட்டு பரிசோதகர் வந்து அவனை உலுக்கி எழுப்புவதற்குள் தான் வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் பொது மேலாளராகவே ஆகி இருந்தான் கற்பனையில்..

" ஆப்கா டிக்கெட்?" ( உங்களுடைய டிக்கெட் ?)  என்று முதல் ஹிந்தி வாக்கியம் காதில் விழுந்ததும் கற்பனை கலைந்து நிஜ உலகிற்கு வந்தான்..

" வாட்?" என்று ஆங்கிலத்தில் இவன் கேட்க மேலும் கீழுமாக ஒருமுறை பார்த்துவிட்டு..

" டிக்கெட்" என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் ஏளனமாக அவர் கேட்பது புரிந்ததும் அதை எடுத்து நீட்ட அதில் எதோ கிறுக்கிவிட்டு அவர் நீட்டினார்..அதை பெற்றுக் கொண்டு அவரிடம் எப்போது தான் சேரவேண்டிய இடம் வரும் என்று கேட்க நினைத்தவனை ஏதோ தடுத்தது.. எப்படிக் கேட்பது..ஆங்கிலத்திலா, தமிழிலா...



சுற்றி இருந்த அத்தனை பேரும் ஹிந்தியில் சகஜமாக உரையாடிக் கொண்டிருக்க தான் மட்டும் தனிமைப்பட்டதாகத் தோன்றியது...உணவு பரிமாறுபவன் வரை அத்தனை பேரும் ஹிந்தியில் பேசி நோகடித்தனர்..சென்னையைத் தாண்டும் வரை இருந்த தன்னம்பிக்கை இப்போது சற்று இறங்கி விட்டதாகத் தோன்றியது....



" கொய்யால, தமிழ் நாட்டுல இருக்குற வரைக்கும் ஒண்ணும் தெரியல, ஆனா இப்போ இந்த ஹிந்தி வாயனுங்க கிட்ட எப்படி வண்டி ஓட்டுறதுனே தெரியலயேடா குமரா, சரி சமாளிப்போம்...  " தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் சிறிது பீதி ஆட்கொண்டே இருந்தது அடிவயிற்றில்.




எப்படியோ பயணத்தை சமாளித்து ஊர் வந்து இறங்கியவனுக்கு வரவேற்க வட இந்திய குளிரைத்தவிர நிலையத்தில் யாரும் இல்லை..வெளியே வந்தால் இவனை அழைத்து செல்வதற்காக வர வேண்டிய வண்டி எதுவும் வரவில்லை...தொடர்புக்கு என்று கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்த போது..தேன் வடியும் குரலில் ஒரு பெண் ஆங்கிலத்தில் மன்னிப்புக் கோரினாள்...ஏதாவது வண்டியைப் பிடித்து வந்து சேரும் படி கேட்டுக் கொண்டு விலாசம் தர. அவளை கடிந்து கொள்ள மனம் வரவில்லை....

எழுதிக் கொண்ட விலாசத்தைக் கையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தவன் கண்டது..

எங்கே பார்த்தாலும் பாக்கு மெல்லும் வாய்கள்...கிறுக்கலாக மீண்டும் ஹிந்தி,,

"போச்சுடா, மறுபடியும் ஹிந்தியா..."மனம் சொன்னது..

" கஹான் ஜானாஹை ஸாப்" ( எங்க போகனும் சார்?)  ஆட்டோக்காரன் கேட்க...திரு திருவென்று விழித்தான்..வாயைத்திறப்பதற்குள் அடுத்த கேள்வி வந்தது..

"மதராஸி கே கியா?, ஹிந்தி மாலும் நெஹி ஓகானா" ( மதராஸியா நீங்க, அப்போ ஹிந்தி தெரியாது ) ஆட்டோக்காரன் பேசிக்கொண்டே இருக்க

" என்ன கேக்குறானே புரியலயே, மதராஸி, ஹிந்தின்றானே ஒரு வேல நம்மல ஹிந்தி தெரியலைனு கலாய்க்கிறானோ,கலாய்ச்சாலும் ஒன்னும் செய்ய முடியாதே இப்போ.." நினைத்துக் கொண்டே கையில் இருந்த காகிதத்தை நீட்ட அதை வாங்கி படித்து விட்டு நக்கலாய் சிரித்து கொண்டே

" ஃபைவ் ஹண்டிரட்" என்று கையில் ஐந்து விரல்களை விரித்து காட்ட குபீரென்றது குமரனுக்கு..ஐநூறா, நம்ம ஊரா இருந்த பேரம் பேசிருக்கலாம்..இங்க இவங்கிட்ட் என்ன மொழியில பேரம் பேசுறது..சரி போவோம்," ,என்றவாரே ஏறி அமர்ந்து கொண்டான்..இறங்கியதும் அவன் கையில் ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினான்.
ஹிந்தி தெரியாதற்காக குமரன் கட்டிய முதல் அபராதம் அது..

வாசலில் காவலுக்கு நிற்கும் காவலாளி முதல்,இருக்கும் இடத்தை சுத்தப்படுத்த வரும் கடைநிலை ஊழியன் வரை யார் ஹிந்தி பேசினாலும் குமரனால் கொடுக்க முடிந்த ஒரே பதில்..." ஈஈஈ" என்று சிரிப்பது மட்டும் தான்...


கற்பனை போல் இருந்தாலும் இன்றைய நிலையில் ஒரு தமிழனின் நிலை இது தான்... ஏன் இந்த நிலை..?

எனது வட இந்திய நண்பர்களே என்னிடம் பல முறை சொல்லி இருக்கிறார்கள்,,
ஆங்கிலத்தை மிகத் தெளிவாக உச்சரிப்பவர்கள் தமிழர்கள் மட்டுமே,,அன்னிய மொழியை அழகாகப் பேசத்தெரிந்த நமக்கு நாம் சார்ந்திருக்கும் ஒரு தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் மொழி தெரியவில்லை ஏன்...?

இதற்கான பதிலைத் தேட காலச் சக்கரத்தை சற்று பின்னோக்கி சுழற்ற வேண்டும்...

கி.பி 1937 - ஆங்கிலேயர்கள் முதல் முறையாக நிர்வாக வசதி என்று சொல்லி ஹிந்தியை நம் தேசிய மொழியாக்க முயற்சி செய்கிறார்கள். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு பிறக்கிறது. பெரியாரின் தலைமையில் போராட்டங்கள் வலுக்கின்றன.. " குடி அரசு"
பத்திரிக்கையில் "ஹிந்தி வீழ்க "என்ற ஒரு தலையங்கமே எழுதப்படுகிறது...அரசு பின்வாங்குகிறது..


சுதந்திரத்திற்குப் பின்னால்..கி.பி 1948-49 ல் ஹிந்தியை கட்டாயாமாக அனைவரும் படிக்க வேண்டும் என்று சட்டமாக்கப் பார்க்கிறார்கள்..மீண்டும் எதிர்ப்பு தமிழ் நாட்டிலிருந்து...இம்முறை மிகத் தீவிரமாக...முயற்சி மீண்டும் தோற்கிறது..

1952 லிருந்து 1959 வரை ஹிந்தியை தமிழகத்தில் பரப்பும் அத்தனை முயற்சிகளும் தோற்கின்றன...

1967 மும்மொழிக் கொள்கையை அரசு அறிவிக்கிறது...இதற்கும் ஏதிர்ப்பு வலுக்கவே இறுதியாக இந்திரா காந்தி அம்மையார் பிரதமரானதும் மும்மொழிக்  கொள்கையும் கைவிடப்பட்டு ஹிந்தி திணிப்பு நிறுத்தப்படுகிறது..ஆனால் இந்த வெற்றிக்காக நாம் இழந்தது பல உயிர்களை.சாதி, மதம் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் மாணவர்களும் பெண்களும் இறங்கிப் போராடிய பின்னர்....ஆங்கிலம் இணைப்பு மொழியாக நிற்க, ஹிந்தி வெறும் அலுவலக மொழியாக ஆக்கப்படுகிறது..

இங்கே ஒரு செய்தியை சொல்லியாக வேண்டும்..காமராஜர் என்ற நல்ல தலைவர் நமது திராவிடத்திருடர்களிடம் தோற்றுப் போனது இந்த மொழி மோதலில் தான்...

அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ராஜிவ்காந்தி மறுபடியும் ஹிந்தியை நவோதயப் பள்ளிகள் மூலம் திணிக்கக் கையில் எடுக்க மீண்டும் மூள்கிறது மொழிப் போர்....வெற்றி நமக்குத்தான்....இந்தியாவிலேயே நவோதயப்பள்ளிகள் இல்லாத மாநிலம் தமிழகம் மட்டுமே ...


இந்த சரித்திரத்தை சற்று கவனித்தால் தெரியும்...ஹிந்தியின் மேல் நமக்கிறுந்த தீராத வெறுப்பு...இதன் காரணம் என்ன...?

முதல் காரணம்..
" திணிக்கப்பட்டால் தாய்ப்பால் கூட கசக்கும் தமிழனுக்கு..இது மறுக்க முடியாத உண்மை..வட இந்தியர்கள் நம்மேல் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக நினைத்தார்கள் நம்மவர்கள்..உண்மை தான்..வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது...இது தான் ஹிந்தி மேல் நமக்கான கோபத்திற்கு மூல காரணம்..

அடுத்த காரணம் மொழி ஆதிக்கம் அரசியலாக்கப்பட்டது நம்மவர்களால்... இதையும் நம்மால் மறுக்க முடியாது..

சுதந்திர இந்தியாவில் அனைவரும் அவரவர் இடத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த வேளையில் அப்போது நடந்தது எல்லாம் சரியே..ஒரு வேளை ஹிந்தி நம்மீது திணிக்கப்பட்டு இருந்தால் நாம் நமது சுயத்தை இழந்து விடுவோம் என்று நமது பாட்டன்மார்கள் பயந்தது சரியே....

ஆனால்....இவை எல்லாம் நடந்து நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன..

"உலகமயமாக்கல்" என்று நமது சந்தையின் சன்னல்களை என்று திறந்துவிட்டொமோ அன்றே, தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவன் இந்தியாவின் எந்த மூலைக்கும் சென்று பொருள் தேடத் தயாராக இருக்க வேண்டும்..அப்போது நம்மைத் தடுப்பது ஹிந்தி அறியாமை..ஒரு மொழி என்ற நிலையைத் தாண்டி இன்று ஒரு தகுதியாகி நம் முன் நின்று பயமுறுத்துகிறது..
நம்முடன் ஒப்பிடும் போது ஆந்திரா, கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சற்று தெளிந்த நிலையில் இருக்கிறார்கள்..தகுதி என்று வரும் போது அதை வளர்த்துகொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள்..நாம் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று ஒடிக் கொண்டிருக்கிறோம்...

அடுத்து நாம் மொழிகளுக்கு தரும் முக்கியத்துவம் எந்த அளவில் இருக்கிறது என்று பார்த்தால்,,ஆங்கிலம் என்பது மொழி என்ற நிலையைத்தாண்டி அது ஒரு அறிவு என்ற நிலையை அடைந்து பல ஆண்டுகளாகிறது..காரணம் அதன் மேல் நமக்குள்ள மோகம்...

அடுத்து சமஸ்கிருதம்..வேதங்கள் எழுதப்பட்டு விட்டன என்ற ஒரே காரணத்திற்காக இதுவும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது,, (இன்றும் சில கோவில்களில் " இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று எழுதப்பட்டிருப்பதைப்பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது..நியாயமாக நாம் நமது மொழியை நேசித்திருந்தால் தமிழ்னாட்டில் கோவிலில் "இங்கு சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று தானே எழுதப்பட்டிருக்க வேண்டும்..)

இப்படி எத்தனையோ காரணங்களுக்காக ஒரு அன்னிய மொழியையே ஏற்றுக் கொண்ட நாம், நாம் சார்ந்திருக்கும், நாம் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு தேசத்தின் அலுவலக மொழியை அறியாதிருப்பது எந்த விதத்தில் நியாயம்..?

பதிலை வாசிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.....
.

இப்போது மீண்டும் குமரனை சந்திக்கலாம்...

செப்டெம்பர் 21,2012...

சரளமாக ஹிந்தி பேசும் குமரனை மதராஸி என்று அழைப்பவர்கள் ...இப்பொதெல்லாம் குறைந்து விட்டார்கள்..இப்போதைக்கு அவனை ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுவது அவனது உழைப்பும், அழகான மீசையும் தான்...