Pages

Friday 21 September 2012

மாண்புமிகு மதராஸி.

ஆகஸ்ட் 28,2009...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்....


பெட்டியையும் பயணச்சீட்டையும் மீண்டும் ஒரு முறை சரிபாத்துக் கொள்கிறான் குமரன்.....பொறியியலில் பட்டம் பெற்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை கிடைத்து இன்று வட இந்தியாவில் ஒரு கிளையில் வேலையில் சேர்வதற்காக கிளம்பிக் கொண்டிருக்கும் இளைஞன். தமிழ் நாட்டை விட்டு வெளியே செல்வது இதுவே முதல் முறை..அவனது வண்டி நடைமேடையை அடைந்து விட்டதாக அறிவிப்பு வந்ததும் அதில் சென்று ஏறி அமர்கிறான்.இது தான் அவன் எதிர்பார்த்த தருணம்.....

இன்றிலிருந்து வாழ்வில் ஒரு சகாப்தம் துவங்குகிறது...சொந்த வீடு, கார், காதலி என்று அவன் மனம் வேகமாக பயணிக்க அதை விட வேகமாக பயணிக்கிறது வண்டி..பயணச் சீட்டு பரிசோதகர் வந்து அவனை உலுக்கி எழுப்புவதற்குள் தான் வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் பொது மேலாளராகவே ஆகி இருந்தான் கற்பனையில்..

" ஆப்கா டிக்கெட்?" ( உங்களுடைய டிக்கெட் ?)  என்று முதல் ஹிந்தி வாக்கியம் காதில் விழுந்ததும் கற்பனை கலைந்து நிஜ உலகிற்கு வந்தான்..

" வாட்?" என்று ஆங்கிலத்தில் இவன் கேட்க மேலும் கீழுமாக ஒருமுறை பார்த்துவிட்டு..

" டிக்கெட்" என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் ஏளனமாக அவர் கேட்பது புரிந்ததும் அதை எடுத்து நீட்ட அதில் எதோ கிறுக்கிவிட்டு அவர் நீட்டினார்..அதை பெற்றுக் கொண்டு அவரிடம் எப்போது தான் சேரவேண்டிய இடம் வரும் என்று கேட்க நினைத்தவனை ஏதோ தடுத்தது.. எப்படிக் கேட்பது..ஆங்கிலத்திலா, தமிழிலா...



சுற்றி இருந்த அத்தனை பேரும் ஹிந்தியில் சகஜமாக உரையாடிக் கொண்டிருக்க தான் மட்டும் தனிமைப்பட்டதாகத் தோன்றியது...உணவு பரிமாறுபவன் வரை அத்தனை பேரும் ஹிந்தியில் பேசி நோகடித்தனர்..சென்னையைத் தாண்டும் வரை இருந்த தன்னம்பிக்கை இப்போது சற்று இறங்கி விட்டதாகத் தோன்றியது....



" கொய்யால, தமிழ் நாட்டுல இருக்குற வரைக்கும் ஒண்ணும் தெரியல, ஆனா இப்போ இந்த ஹிந்தி வாயனுங்க கிட்ட எப்படி வண்டி ஓட்டுறதுனே தெரியலயேடா குமரா, சரி சமாளிப்போம்...  " தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் சிறிது பீதி ஆட்கொண்டே இருந்தது அடிவயிற்றில்.




எப்படியோ பயணத்தை சமாளித்து ஊர் வந்து இறங்கியவனுக்கு வரவேற்க வட இந்திய குளிரைத்தவிர நிலையத்தில் யாரும் இல்லை..வெளியே வந்தால் இவனை அழைத்து செல்வதற்காக வர வேண்டிய வண்டி எதுவும் வரவில்லை...தொடர்புக்கு என்று கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்த போது..தேன் வடியும் குரலில் ஒரு பெண் ஆங்கிலத்தில் மன்னிப்புக் கோரினாள்...ஏதாவது வண்டியைப் பிடித்து வந்து சேரும் படி கேட்டுக் கொண்டு விலாசம் தர. அவளை கடிந்து கொள்ள மனம் வரவில்லை....

எழுதிக் கொண்ட விலாசத்தைக் கையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தவன் கண்டது..

எங்கே பார்த்தாலும் பாக்கு மெல்லும் வாய்கள்...கிறுக்கலாக மீண்டும் ஹிந்தி,,

"போச்சுடா, மறுபடியும் ஹிந்தியா..."மனம் சொன்னது..

" கஹான் ஜானாஹை ஸாப்" ( எங்க போகனும் சார்?)  ஆட்டோக்காரன் கேட்க...திரு திருவென்று விழித்தான்..வாயைத்திறப்பதற்குள் அடுத்த கேள்வி வந்தது..

"மதராஸி கே கியா?, ஹிந்தி மாலும் நெஹி ஓகானா" ( மதராஸியா நீங்க, அப்போ ஹிந்தி தெரியாது ) ஆட்டோக்காரன் பேசிக்கொண்டே இருக்க

" என்ன கேக்குறானே புரியலயே, மதராஸி, ஹிந்தின்றானே ஒரு வேல நம்மல ஹிந்தி தெரியலைனு கலாய்க்கிறானோ,கலாய்ச்சாலும் ஒன்னும் செய்ய முடியாதே இப்போ.." நினைத்துக் கொண்டே கையில் இருந்த காகிதத்தை நீட்ட அதை வாங்கி படித்து விட்டு நக்கலாய் சிரித்து கொண்டே

" ஃபைவ் ஹண்டிரட்" என்று கையில் ஐந்து விரல்களை விரித்து காட்ட குபீரென்றது குமரனுக்கு..ஐநூறா, நம்ம ஊரா இருந்த பேரம் பேசிருக்கலாம்..இங்க இவங்கிட்ட் என்ன மொழியில பேரம் பேசுறது..சரி போவோம்," ,என்றவாரே ஏறி அமர்ந்து கொண்டான்..இறங்கியதும் அவன் கையில் ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினான்.
ஹிந்தி தெரியாதற்காக குமரன் கட்டிய முதல் அபராதம் அது..

வாசலில் காவலுக்கு நிற்கும் காவலாளி முதல்,இருக்கும் இடத்தை சுத்தப்படுத்த வரும் கடைநிலை ஊழியன் வரை யார் ஹிந்தி பேசினாலும் குமரனால் கொடுக்க முடிந்த ஒரே பதில்..." ஈஈஈ" என்று சிரிப்பது மட்டும் தான்...


கற்பனை போல் இருந்தாலும் இன்றைய நிலையில் ஒரு தமிழனின் நிலை இது தான்... ஏன் இந்த நிலை..?

எனது வட இந்திய நண்பர்களே என்னிடம் பல முறை சொல்லி இருக்கிறார்கள்,,
ஆங்கிலத்தை மிகத் தெளிவாக உச்சரிப்பவர்கள் தமிழர்கள் மட்டுமே,,அன்னிய மொழியை அழகாகப் பேசத்தெரிந்த நமக்கு நாம் சார்ந்திருக்கும் ஒரு தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் மொழி தெரியவில்லை ஏன்...?

இதற்கான பதிலைத் தேட காலச் சக்கரத்தை சற்று பின்னோக்கி சுழற்ற வேண்டும்...

கி.பி 1937 - ஆங்கிலேயர்கள் முதல் முறையாக நிர்வாக வசதி என்று சொல்லி ஹிந்தியை நம் தேசிய மொழியாக்க முயற்சி செய்கிறார்கள். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு பிறக்கிறது. பெரியாரின் தலைமையில் போராட்டங்கள் வலுக்கின்றன.. " குடி அரசு"
பத்திரிக்கையில் "ஹிந்தி வீழ்க "என்ற ஒரு தலையங்கமே எழுதப்படுகிறது...அரசு பின்வாங்குகிறது..


சுதந்திரத்திற்குப் பின்னால்..கி.பி 1948-49 ல் ஹிந்தியை கட்டாயாமாக அனைவரும் படிக்க வேண்டும் என்று சட்டமாக்கப் பார்க்கிறார்கள்..மீண்டும் எதிர்ப்பு தமிழ் நாட்டிலிருந்து...இம்முறை மிகத் தீவிரமாக...முயற்சி மீண்டும் தோற்கிறது..

1952 லிருந்து 1959 வரை ஹிந்தியை தமிழகத்தில் பரப்பும் அத்தனை முயற்சிகளும் தோற்கின்றன...

1967 மும்மொழிக் கொள்கையை அரசு அறிவிக்கிறது...இதற்கும் ஏதிர்ப்பு வலுக்கவே இறுதியாக இந்திரா காந்தி அம்மையார் பிரதமரானதும் மும்மொழிக்  கொள்கையும் கைவிடப்பட்டு ஹிந்தி திணிப்பு நிறுத்தப்படுகிறது..ஆனால் இந்த வெற்றிக்காக நாம் இழந்தது பல உயிர்களை.சாதி, மதம் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் மாணவர்களும் பெண்களும் இறங்கிப் போராடிய பின்னர்....ஆங்கிலம் இணைப்பு மொழியாக நிற்க, ஹிந்தி வெறும் அலுவலக மொழியாக ஆக்கப்படுகிறது..

இங்கே ஒரு செய்தியை சொல்லியாக வேண்டும்..காமராஜர் என்ற நல்ல தலைவர் நமது திராவிடத்திருடர்களிடம் தோற்றுப் போனது இந்த மொழி மோதலில் தான்...

அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ராஜிவ்காந்தி மறுபடியும் ஹிந்தியை நவோதயப் பள்ளிகள் மூலம் திணிக்கக் கையில் எடுக்க மீண்டும் மூள்கிறது மொழிப் போர்....வெற்றி நமக்குத்தான்....இந்தியாவிலேயே நவோதயப்பள்ளிகள் இல்லாத மாநிலம் தமிழகம் மட்டுமே ...


இந்த சரித்திரத்தை சற்று கவனித்தால் தெரியும்...ஹிந்தியின் மேல் நமக்கிறுந்த தீராத வெறுப்பு...இதன் காரணம் என்ன...?

முதல் காரணம்..
" திணிக்கப்பட்டால் தாய்ப்பால் கூட கசக்கும் தமிழனுக்கு..இது மறுக்க முடியாத உண்மை..வட இந்தியர்கள் நம்மேல் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக நினைத்தார்கள் நம்மவர்கள்..உண்மை தான்..வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது...இது தான் ஹிந்தி மேல் நமக்கான கோபத்திற்கு மூல காரணம்..

அடுத்த காரணம் மொழி ஆதிக்கம் அரசியலாக்கப்பட்டது நம்மவர்களால்... இதையும் நம்மால் மறுக்க முடியாது..

சுதந்திர இந்தியாவில் அனைவரும் அவரவர் இடத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த வேளையில் அப்போது நடந்தது எல்லாம் சரியே..ஒரு வேளை ஹிந்தி நம்மீது திணிக்கப்பட்டு இருந்தால் நாம் நமது சுயத்தை இழந்து விடுவோம் என்று நமது பாட்டன்மார்கள் பயந்தது சரியே....

ஆனால்....இவை எல்லாம் நடந்து நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன..

"உலகமயமாக்கல்" என்று நமது சந்தையின் சன்னல்களை என்று திறந்துவிட்டொமோ அன்றே, தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவன் இந்தியாவின் எந்த மூலைக்கும் சென்று பொருள் தேடத் தயாராக இருக்க வேண்டும்..அப்போது நம்மைத் தடுப்பது ஹிந்தி அறியாமை..ஒரு மொழி என்ற நிலையைத் தாண்டி இன்று ஒரு தகுதியாகி நம் முன் நின்று பயமுறுத்துகிறது..
நம்முடன் ஒப்பிடும் போது ஆந்திரா, கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சற்று தெளிந்த நிலையில் இருக்கிறார்கள்..தகுதி என்று வரும் போது அதை வளர்த்துகொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள்..நாம் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று ஒடிக் கொண்டிருக்கிறோம்...

அடுத்து நாம் மொழிகளுக்கு தரும் முக்கியத்துவம் எந்த அளவில் இருக்கிறது என்று பார்த்தால்,,ஆங்கிலம் என்பது மொழி என்ற நிலையைத்தாண்டி அது ஒரு அறிவு என்ற நிலையை அடைந்து பல ஆண்டுகளாகிறது..காரணம் அதன் மேல் நமக்குள்ள மோகம்...

அடுத்து சமஸ்கிருதம்..வேதங்கள் எழுதப்பட்டு விட்டன என்ற ஒரே காரணத்திற்காக இதுவும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது,, (இன்றும் சில கோவில்களில் " இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று எழுதப்பட்டிருப்பதைப்பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது..நியாயமாக நாம் நமது மொழியை நேசித்திருந்தால் தமிழ்னாட்டில் கோவிலில் "இங்கு சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று தானே எழுதப்பட்டிருக்க வேண்டும்..)

இப்படி எத்தனையோ காரணங்களுக்காக ஒரு அன்னிய மொழியையே ஏற்றுக் கொண்ட நாம், நாம் சார்ந்திருக்கும், நாம் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு தேசத்தின் அலுவலக மொழியை அறியாதிருப்பது எந்த விதத்தில் நியாயம்..?

பதிலை வாசிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.....
.

இப்போது மீண்டும் குமரனை சந்திக்கலாம்...

செப்டெம்பர் 21,2012...

சரளமாக ஹிந்தி பேசும் குமரனை மதராஸி என்று அழைப்பவர்கள் ...இப்பொதெல்லாம் குறைந்து விட்டார்கள்..இப்போதைக்கு அவனை ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுவது அவனது உழைப்பும், அழகான மீசையும் தான்...

Saturday 15 September 2012

பட்டாம்பூச்சிகளை பறக்க விடுங்கள்....








ள்ளி முடிந்து பறந்து வரும்
பட்டாம்பூச்சிகள் அவர்கள்..
சிறகாக வேண்டிய சீருடையே
அவர்களுக்கு சுமையாகிறது...

முகத்தில் எங்கே அந்த புன்னகை.?.
களித்திருக்க வேண்டிய வயதில்
இவர்கள் களைத்திருக்கிறார்கள்...

ன்ஸ்டீனும் நுயூட்டனும்
திருடிக் கொண்டார்கள் இவர்களின்
அம்புலிமாமாக்களை...

விடுமுறை நாட்களிலும்
விடாது துரத்துகின்றனவே
சிறப்பு வகுப்புகள்...

புட்டிக்கண்ணாடிகளின் வழியே தான்
பூகோளம் படிக்கும் இவர்களுக்கு
பூவுழகின் அழகு எப்படி தெரியும்..

மதிப்பெண்களின் பின்னால்
மதியிழந்து ஓடும் பெற்றோர்களே 
கேளுங்கள் ...

ஆடிக்களைத்திருந்த கால்களில்
ஒட்டியிருந்த மணல் துகள்கள் தான்
அப்துல்கலாமிற்கே
அணுத்துகள்களை
அறிமுகம் செய்திருக்கும்....

ஆகவே..

எங்களின் பட்டாம்பூச்சிகளைப்
பறக்க விடுங்கள்..
இல்லையேல் ஒருநாள்..
பூக்கள் என்றால் என்னவென்று
அவை புத்தகங்களில் தேடும் நிலை வரலாம்....

Friday 14 September 2012

சாதியமும், மனிதமும்....









" சாதிகள் இல்லையடி பாப்பா..
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.."

இந்த பாடலை பள்ளியில் கற்றுக் கொள்ளும் முன்பே " நீ இந்த சாதியைச் சார்ந்தவன் " என்று சுற்றத்தார் கற்றுத்
தரும் தென் தமிழகத்தின் ஒரு ஊரில் பிறந்தவன் நான்..சமுதாயத்தின் எல்லா அடுக்குகளிலும் இந்த சாதியின் வேர்களைப் பார்த்தவன்...கண்ணெதிரே பல முறை சாதி வெறி தன் கோர முகம் காட்டி இருக்கிறது.