Pages

Thursday 3 November 2011

பொதுவுடைமை...





 புத்தகங்களின் குப்பையிலே
 புரண்டெழுந்தாயிற்று...
 அச்சுக் கோர்த்த எழுத்துகள்
 என் ஐயத்தை தீர்க்கவில்லை..
 கார்ல் மார்க்ஸ் கதைத்தும்
 கதை கதையாய் கருத்தை
 விதையாய் விதைத்தும்
 என் மக்கான மட மனதின்
 மதில் சுவர் தான் திறக்கவில்லை
 ஞான சூரியன் முயன்றும்
 ஞான சூனியத்தின் இருள்
 மட்டும் போகவில்லை...
பொதுவுடைமை என்றால் என்ன?
 இக் கேள்வி பிறந்த நாள் என்றோ
 என் தூக்கம் மரித்த நாள் அன்று...
 தொலைந்த தூக்கம் தேடி
 தெருவோரம் திரிகையில்
 கண்டேன் அவனை..

 நாள் முழுதும் யாசகம் பெற்று
 அவன் சேர்த்த சோற்று மூட்டை
 ஆவலாய் அவன் பிரிக்கையில்
 அதற்கும் வந்தது பங்கம்..
 மற்றொருவன் வடிவில்...

  பசி வந்து உயிர் பறிக்கையில்
  பங்கு தர ஏது மனம்...?
  தரமாட்டான் அவன் என்றே
  தலை உயர்த்தி நான் காண
  அங்கே இரு வயிறு
  பசியாறி இருந்தது...

  என் கேள்வியும் பதில்
  கண்டு நின்றது...
  எடுப்பதற்கு முன்
  கொடுப்பதே பொதுவுடைமை..
  பசியிலும் பங்கு கொள்வதே
  பொதுவுடைமை...

1 comment: