Pages

Saturday 27 October 2018

நான் யார் ?

கவிதைகள்

 நான் யார் ?

ஆதிக்கவெறி கொண்ட மிருகமா நீ ?
ஆச்சார வெறி கொண்ட அடிமையா நீ ?
திராவிடனா ?
ஆரியனா ?
ஒடுக்கியவனா ?
ஒடுங்கியவனா ?
எவனடா  நீ ? என்போரே ,கேளும்

மயக்கத்தின் விளிம்பில் நிற்கும்  நான்
உளறினால் கவிஞன்
கிறுக்கினால் ஓவியன்
கத்தினால் பாடகன்
பொய் சொன்னால் இலக்கியவாதி
மெய் சொன்னால் குடிகாரன்
மயக்கம் தெளிந்தால் சம்சாரி

எம் அடையாளம் யாம் அடையவிரும்புவது
நீர் அளிப்பதென்று.









Tuesday 18 September 2018

குறியின்றி பிறந்திருக்கலாம் நான்

கண்ணகி தேசத்தில் ஓர் நாள்
கதிரவன் இளைப்பாரச் சென்றதால்
எங்கும் இருள் மயம்
அதிரங்கள் அதிர நடக்கின்றாள் அவள்
வழிகின்றன வியர்வை மணம்
சாலையின் குப்பை மணம்
ஆள்பவரின் ஆசியுடன்
தெருவெங்கும் சாராய மணம்
வெறிக்கின்ற இருளின் கண்கள்
அத்தனையும் கடந்தாக வேண்டும்
அரை மணித்துளியில்
உடலைக் காப்பது உடன் பிறந்த
ஓர் ஆதி உணர்வு
பெண்ணாய் பிறந்தால் அது பீதியுணர்வு
குறிகளுக்கு அஞ்சியே நகர்கின்றன அவள் நொடிகள்
தெருவின் திருப்பங்களில்
அவள் வாழ்வின் திருப்பங்கள் ஒளிந்திருக்கலாம்
பேருந்தில் உரசியவன் நாற்றம்
கழுத்தோரம் எரிகிறது
இதோ வீடு
பாதுகாப்பின் கூடு
நுழைந்ததும் வருகிறது மூச்சு
சிறுநீரின் அழுத்தலோடு
கழிக்கையில் இன்றும் தோன்றுகிறது
"கண்ணகியாம்
கற்பாம்
மயிராம்
குறியின்றி பிறந்திருக்கலாம் நான்."

Saturday 5 August 2017

அவளின் வேண்டுதல்கள் அத்தனை நீளமா

அடிப் பிரதக்ஷணம் செய்யும் அவளைத் தெரியும் எனக்கு

வெள்ளிக்கிழமைகளில்
அவள் வருகைக்காக காத்திருப்பது போல் ஏங்கி நிற்கின்றன சன்னிதியின் கற்கள்

எத்தனை அடிகள் நடந்திருப்பாள்
எண்ணிக் கொண்டேனும் நடந்திருப்பாளா
எதற்காக நடக்கின்றாள்

அவளின் வேண்டுதல்கள் அத்தனை நீளமா
எங்கோ இருக்கும் கடவுளே
சற்று இறங்கித்தான் வந்துவிடேன்
அவள் எதிர்திசையில் நடக்கும் முன்னால்