Pages

Sunday 23 December 2012

பேய் அரசாள பிணம் தின்னும் சாத்திரங்கள்....




சிறிய இடைவேளைக்குப் பிறகு அனைவருக்கும் வணக்கம்....
                                   
                   இந்த பதிவினை எழுதத் துவங்கும் இந்த வினாடி.. எங்கோ வசிக்கும் என் சகோதரியோ,என் தோழியோ இந்த வினாடி பாதுகாப்பாக இருக்கிறாளா? என்ற பயத்தில் விரல்கள் நடுங்குவதை உணர்கிறேன்..தலை நகர் டெல்லியில் நடைபெற்ற சமபவத்தின் வினையாக இருக்கலாம்......மாணவர் அமைப்புகள், மகளிர் சங்கங்கள், ஊடகங்கள் என போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்....

ஏற்கனவே அனைவருக்கும் கண்கள் விழித்திருப்பதால், டெல்லி சம்பவத்தைப் பற்றி நான் எழுதப் போவதில்லை..

ஆனால்..

போராடிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்,

" கிறிஸ்துமஸ், இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என அத்தனையும் தாண்டி இந்த பிரச்சனையின் தீவிரம் குறையாமல் இருக்கட்டும்...மறதி என்ற தேசிய வியாதி இந்த பிரச்சனையிலாவது உங்களை பீடிக்காமல் இருக்கட்டும்....."

இனி எனது கருத்தினைப் பதிவு செய்கிறேன்...


"இந்தியாவிற்கு சுயாட்சி வழங்குவதா?

என்ன விளையாடுகிறீர்களா ?

முதலில் சுயாட்சி என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியுமா? அவ்வளவு ஏன், குறைந்தது தங்களுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தையாவது அவர்களால் உருவாக்கி கொள்ள முடியுமா?"...

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க இங்கிலாந்து முடிவு செய்த போது, இந்த நையாண்டி வரிகளை உதிர்த்தவர் பர்க்கன்ஹட் என்ற ஆங்கிலேயர்...
இதை  கேட்கும் போது இரத்தம் கொதிக்கத்தான் செய்கிறது..ஆனால் நடப்பதை பார்த்தால் ஒரு வேளை உண்மையைத் தான் சற்று மிகைப்படுத்தி சொல்லி இருக்கிறாரோ என்றே தோன்றுகிறது...

ஆம்...

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு...

சில நாட்களில் இந்திய பாராளுமன்றத்த்தில் நிறைவேற உள்ள ஒரு சட்ட மசோதா...

எதற்காக இந்த இட ஒதுக்கீடு...

தாழ்த்தப்பட்டவர்கள் பெரிய பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்பதாலா?..

இல்லை....., படிப்பு, திறமை இவற்றினை விட தாழ்த்தப்பட்டவர்கள் என்ற தகுதி பதவி உயர்வுக்கு முக்கியம் என்று கருதுவதாலா...?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியப்போவதே இல்லை...

எவ்வளவு யோசித்த போதும் ஒன்று மட்டும் விளங்கவே இல்லை...

.ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்று வேலையில் அமர்ந்திருக்கும் ஒருவனுக்குத் தானே மறுபடியும் உதவப் போகிறார்கள்..நடக்க முடியாதவனை தூக்கிவிடுவதில் தவறில்லை தான்...ஆனால் நடப்பவனுக்கு கால்கள் வலிக்கும் என்று மோட்டார் வாகனம் வாங்கித்தருவேன், அதுவும் அடுத்தவன் காசில் என்றால் என்ன நியாயம்..

வர்ணாசிர முறை எந்த அளவிற்கு தவறானதோ, அந்த அளவிற்கு தவறானது இந்த சட்டம்...

அம்பேத்கரே இருந்தால் கூட இந்த சட்டத்திற்காக மகிழ்வாரா என்பது சந்தேகமே....

ஏனென்றால்..

இந்த சட்டத்தினால், வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் செருப்பு தைப்பவனுக்கோ, முடி வெட்டுபவனுக்கோ என்ன கிடைக்கும்...?

எதுவும் கிடைக்காது என்பதே உண்மை...

ஏழை ஏழையாகவே இருப்பான் , பணக்காரன் பணக்காரனாகிக் கொண்டே செல்வான் தாழ்த்தப்பட்டவன் என்ற தகுதியுடன்...

1950 ல் இந்த சட்டத்தை கொண்டு வந்திருந்தால் அது நியாயம்..அப்போது தாழ்த்தப்படவர்கள் என்பவர்கள் முன்னேற்றக் காற்றினை சுவாசிக்கப் போராடிக் கொண்டிருந்தனர்...ஆனால் இன்று எல்லா துறைகளிலும் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் கணிசமாக இருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு சட்டம் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்..100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒடும் 10 பேரில் , ஒருவன் மட்டும் 50 மீட்டர் தூரம் ஒடினால் போதும் என்பது போல் இருக்கிறது,,,இந்த சட்டம்...

விலைவாசி விண்ணை முட்டுகிறது...
தினமும் உயர்கிறது எரிபொருள் விலை...அடுப்பு எரிகிறதோ இல்லையோ உழைப்பவன் வயிறு எரிகிறது தினமும்...
ஊழலில் உலகமே நம்மைக் கண்டு வியந்து போய் இருக்கிறது...

இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருக்க இந்த சட்டத்தினை இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற என்ன காரணம்...?
 
வேறு என்ன ஓட்டு வங்கிதான்...இன்னும் எத்தனை காலம் தான் ஒதுக்கீட்டினால் ஓட்டு வாங்குவார்களோ..?

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இப்படி ஒரு ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அன்னிய நேரடி முதலீட்டு பிரச்சனையில் அரசினை ஆதரிப்பதாக அறிவித்தார்...செல்வி.மாயவதி...அடடா......என்ன ஒரு பெருந்தன்மை...தேசத்தை புதைக்க குழி தோண்ட ஒப்புக் கொண்டால், அதன் குரல்வளையை நெறித்துக் கொல்ல உதவுவாராம்....

எப்படியோ அன்னிய நேரடி முதலீடு,பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இரண்டும் நிறைவேற வழிவகை செய்தாயிற்று....சரிதான்..

இனி இந்த நாட்டில்... "பேய் அரசாள பிணம் தின்னும் சாத்திரங்கள்.".