Pages

Friday, 14 September 2012

சாதியமும், மனிதமும்....









" சாதிகள் இல்லையடி பாப்பா..
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.."

இந்த பாடலை பள்ளியில் கற்றுக் கொள்ளும் முன்பே " நீ இந்த சாதியைச் சார்ந்தவன் " என்று சுற்றத்தார் கற்றுத்
தரும் தென் தமிழகத்தின் ஒரு ஊரில் பிறந்தவன் நான்..சமுதாயத்தின் எல்லா அடுக்குகளிலும் இந்த சாதியின் வேர்களைப் பார்த்தவன்...கண்ணெதிரே பல முறை சாதி வெறி தன் கோர முகம் காட்டி இருக்கிறது.


காலத்தின் எல்லா மாற்றங்களையும் தாண்டி நம்மிடையே இன்றும் நிலைத்து நிற்கும் பழமை காதல் மட்டுமல்ல...இந்த சாதியும் தான்...

அப்படி என்ன இதற்கு சக்தி.? .
எங்கு இருக்கிறது இதன் ஆணி வேர் ?...
இத்தனை காலம் இது நிலைத்து நிற்க யார் காரணம்?..எது காரணம்?..

எனக்கு புரிந்தவரை நான் ஆராய்ந்த வரை, அனுபவப்பட்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

"படிப்பறிவில்லாதவர்களிடம் மட்டும் தான் சாதி வெறி இருக்கும்" என்ற எண்ணத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்...

எனக்கு சாதி வெறியின் முதல் அடிச்சுவற்றை அறிமுகப்படுத்தியதே ஒரு ஆசிரியை தான்..பள்ளியின் வகுப்பில் ஒரு நாள்,,புதிதாக வந்த ஆசிரியை அனைவரையும் வருகைபதிவேட்டில் இருக்கும் வரிசைப்படி அழைப்பது வழக்கம்..ஆனால் அன்று ஏதோ ஒரு மாற்றம்..புதிதாக வந்த ஆசிரியை குறிப்பிட்ட சில மாணவர்களை மட்டும் எழுப்பி விசாரித்ததில் எனக்கு சந்தேகம் வராமல் இருக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல...அவர்கள் சென்ற பிறகு அதே வருகைப் பதிவேட்டின் பக்கங்களை புரட்டும் போது தான் தெரிந்து கொண்டேன்..வருகைப் பதிவேட்டில் சாதிக்கென்று ஒரு இடம் இருப்பதாகவும்..அவர்கள் அனைவரும் ஒரே சாதியைச் சேந்தவர்கள் என்று. அதற்காக
அத்தனை ஆசிரியர் பெருமக்களையும் குறை சொல்வதென்பது மேலே மிதக்கும் குப்பைக்காக கங்கையைப் பழிப்பது போல் ஆகும்..இருந்தாலும் சற்று கூர்ந்து கவனித்தால் கண்டுவிடலாம் ஒரு உண்மையை....சாதிவெறி என்ற இந்த நோய் சமூகத்தின் தலை எழுத்தை கரும்பலகையில் மாற்றி எழும் ஆசிரியர் தொழில் வரை பரவி இருக்கிறது என்பதை...

எங்கிருந்து துவங்குகிறது இந்த சாதியின் பயணம் ஒரு மனிதனின் வாழ்வில்...

என்னதான் நாம் இன்று கணிப்பொறி திரையில் கணிதம் படித்தாலும் எல்லா மனிதனுக்கும் தான் என்ன சாதியைச் சேர்ந்தவன் என்பது அவனுக்கே தெரியாமல் கற்பிக்கப்படுகிறது...செட்டியார்களின் திருமணங்களில்,பிராமணர்கள் அணிந்திருக்கும் பூனூலில் என்று ஏதோ ஒரு அடியாளம் அவனுக்கு மற்றவர்களில் இருந்து நான் மாறுபட்டவன் என்று கற்பிக்கப்படுகிறது அவனுக்கு..பண்பாடாகக் கற்பிக்கப் பட வேண்டிய சில பழக்கங்கள் கூட இப்படி சாதியின் அடியாளமாய் காட்டப்படுவது நம் முன்னோர்கள் விட்டு சென்ற சாபம் தான்...  பூனூலும்,கலாசார திருமணங்களும் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை..ஆனால் அதற்கான உண்மையான அர்த்தம் நமக்கு கற்பிக்கப்படுவதில்லை...அழகான பண்பாட்டின் அடையாளங்கள்,சாதிய கலாச்சாரங்களாய் மாறுவது தான் குறை..

கடவுள்.....,இதை அடுத்த காரணமாகப் பார்க்கிறேன் நான்...சற்று குழப்பமாக இருக்கும்..படைத்தவனுக்கும் பாகுபாட்டிற்கும் என்ன உறவு என்று.? .இது படைத்தவனின் குற்றம் அன்று...நமது குற்றம்..இன்றும் சில குறிப்பிட்ட சமூகத்திற்கு பாத்தியப்பட்டவை என்ற முகவரியுடன் வீற்றிருக்கும் கோவில்களைப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை...
கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை...அவை குறிப்பிட்ட சாதியின் பலத்தையோ, செருக்கையோ காட்டும் கூடாரங்களாக மாற வேண்டாம் என்பதே என் விருப்பம்...

சுதந்திரப் போராட்டத் தியாகிகளையே சாதி என்னும் சாக்கடைக்குள் தள்ளி இருக்கும் நமது குறுகிய மனப்பான்மை,தமிழகத்தின் பேருந்துகளின் பெயர்கள் மாற்றப்பட்டதே சில சிறுமனம் கொண்ட சில்லறைகளால் தான்...

அடுத்து...வழிகாட்டிகளாய் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் தவறாகவே நம்மை வழி நடத்தி இருக்கிறார்கள்.." நீ ஒரு திராவிடன்" என்று எனக்கு கற்றுத்தந்தவர்கள், அதை நினைத்துப் பெருமைப்படும் போது பார்ப்பனனை எதிர்ப்பதே திராவிடனின் தலையாய கடமை என்று கற்றுத்தந்தார்கள் எனக்கு....திராவிடக் கொள்கைகளை நான் சந்தேகிக்க ஆரம்பித்த பின்பு தான் எனக்கு பார்ப்பன எதிர்ப்பின் மடத்தனமே புரிந்தது..

இட ஒதிக்கீடு,..இது ஒரு காச நோய்..குணப்படுத்த மருந்து இருந்தும்..அதை குணப்படுத்தவே விரும்பாமல் நாம் விட்டுவிட்ட ஒரு நோய்...6000 ரூபாய்களை கல்லூரி கட்டணமாக செலுத்திவிட்டு, 12000 ரூபாய்களை கல்வி உதவித்தொகையாக நான்கு வருடமும் பெற்று அதில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு நண்பனையும் நான் பார்த்திருக்கிறேன், கல்விக்கடனில் படித்து படித்து கடனாளியாய் பட்டம் வாங்கிய உயர்வகுப்பு நண்பனையும் நான் அறிவேன்...பொருளாதார அடிப்படையில் இருந்திருந்தால் அருமருந்தாய் இருந்திருக்கும் ஒரு திட்டம்...தற்போது நமது சமூகத்தில் வெறுப்பை உருவாக்கும் ஒரு விஷமாக மாறிப் போனது....

அழிக்க நினைத்து இந்த சாதியிடம் தோற்றுப் போனவர்கள் மிக அதிகம்..அதனால் இதை அழிக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை..இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் போல் தான் சாதியை இந்த சமூகத்தில் பார்க்கிறேன் நான்..அதன் விளைவுகளை கட்ட்டுபடுத்த முடியும்....   

.  எப்படியென்றால்....  இந்த சாதி விசயத்தில், மனிதனின் மனதின் பல வேறு திரிந்த தோற்றங்களைப் பார்க்கிறேன் நான்...எந்த ஒரு மனிதனும் தனி மனிதனாக சிந்திக்கும் பொழுது சாதி அவனுக்கு முக்கிய்மாகத் தெரிவதில்லை...எந்த சாதியைச் சேர்ந்தவனும் மற்றொரு சாதியை சேர்ந்தவனின் பள்ளியில் நல்ல கல்வி கிடைக்கும் என்றால் தனது பிள்ளையை அங்கே சேர்க்கத் தயங்குவதில்லை..பொருளாதாரமும், கல்வியும் அவனுக்கு அங்கே சாதியை பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன....ஆனால் அதே மனிதன் தன்னை ஒரு கூட்டமாக சேர்த்து பார்க்கும் போதும், தன்னை ஒரு சமூகத்தின் அங்கமாக நினைக்கும் போது தான் ஆரம்பிக்கிறது பிரச்சனை...உதாரணமாக..காதல் திருமணங்களில் பல பெற்றோரின் சம்மதத்தை பெற முடிவதில்லை..ஏன்..?......பிள்ளைகளின் மகிழ்விற்காக என்று சம்மதிக்க நினைக்குக்கும் பெற்றோர் கூட சுற்றம் என்ன சொல்லும் என்று பயந்தே எதிர்க்கின்றனர்...இப்படியாக தனி மனிதனாக இருக்கும் பொழுது தூசியை போல் தோன்றும் சாதி கூட்டமாக சேர்ந்ததும் மதிப்பைப் பெற்று விடுகிறது....

ஆகவே குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருப்பதை விட மனிதனாக இருப்பது மாண்புமிகுந்தது என்று உணர வேண்டும்..
இனிமேல் நம் கோவில்கள், கடவுளுக்கும், அரசாங்கத்துக்கும் மட்டும் சொந்தமாக இருக்க வேண்டும்...பூனூல் அணியும் மழலை நம்மிடம் "இதை நான் அணிகிறேன்?"  என்று கேட்டால்..
கற்றவன் அணிய வேண்டும் அதை என்று கற்றுக் கொடுங்கள்...
என்னைப் பொறுத்தவரை சாதியை இந்த தலைமுறையில் அழிக்க முடியாது...அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு விடாமல் தடுக்கலாம்...அது தான் ஒரே வழி...அடுத்த தலைமுறை...மனிதனாய் வாழட்டும்...


கனவு மெய்ப்பட வேண்டும்...

2 comments:

  1. starting e super machi.nethiyadi.padipavargal manadhai uruthinalum unmai idhuve..

    ReplyDelete
  2. நம்மிடம் இருக்கும் பெரும்பாலான அறிவுஜீவிகள் சாதி,மதம், இனம் ஆகியவைகள் கடவுளால் படைக்கப்பட்டவை என்றுதான் நினைக்கிறார்கள். மனிதன் தன்னை சீர்படுத்திகொள்ளதான் சாதி,மதங்களை பயன்படுத்தவேண்டும்.மாறாக சாதிக்காக நம் என்று நினைத்து சீரழிய கூடாது. நமது ஆழ் மனத்தின் சிந்தனை நம்மை சுற்றியுள்ள படிமங்களையும், குறியீடுகளையும் சார்ந்தது. அதில் பெரும்பாலும் மத குறியீடுகளும், சாதி படிமங்களும் மிக அதிகம்.அதை கடந்து செல்ல நம்மால் முடிந்ததை செய்வோம்.

    ReplyDelete