பட்டாம்பூச்சிகள் அவர்கள்..
சிறகாக வேண்டிய சீருடையே
அவர்களுக்கு சுமையாகிறது...
முகத்தில் எங்கே அந்த புன்னகை.?.
களித்திருக்க வேண்டிய வயதில்
இவர்கள் களைத்திருக்கிறார்கள்...
ஐன்ஸ்டீனும் நுயூட்டனும்
திருடிக் கொண்டார்கள் இவர்களின்
அம்புலிமாமாக்களை...
விடுமுறை நாட்களிலும்
விடாது துரத்துகின்றனவே
சிறப்பு வகுப்புகள்...
புட்டிக்கண்ணாடிகளின் வழியே தான்
பூகோளம் படிக்கும் இவர்களுக்கு
பூவுழகின் அழகு எப்படி தெரியும்..
மதிப்பெண்களின் பின்னால்
மதியிழந்து ஓடும் பெற்றோர்களே
கேளுங்கள் ...
கேளுங்கள் ...
ஆடிக்களைத்திருந்த கால்களில்
ஒட்டியிருந்த மணல் துகள்கள் தான்
அப்துல்கலாமிற்கே
அணுத்துகள்களை
அறிமுகம் செய்திருக்கும்....
ஆகவே..
எங்களின் பட்டாம்பூச்சிகளைப்
பறக்க விடுங்கள்..
இல்லையேல் ஒருநாள்..
பூக்கள் என்றால் என்னவென்று
அவை புத்தகங்களில் தேடும் நிலை வரலாம்....
No comments:
Post a Comment