உச்சிகால பூஜை வேளை
உச்சாடனை முடிந்த பின்பு
நடை சாத்தி விட்டார்கள்
உச்சந்தலை ஒழுகும் வியர்வை
தும்பிக்கையால் துடைக்கையிலே
மூஷிகனும் சிரிக்கின்றான்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவையெல்லாம் தந்தாலும்
என்னாளும் மனம் மறக்குமா ...
தாய் மடியாம் அரசமரமும்
பால் வடியும் அரசலாறும்
ஏக்க மூச்சு விட்டபடி
எழுந்து நின்ற கணபதியை
மூஷிகனும் கேட்டுவிட்டான்
முட்டாளென கேள்வியொன்றை
புலம் பெயர்ந்த அன்று முதல்
அகம் மருகும் என் குருவே
நகர்வலம் நாம் போகலாமா ?
நம்மிடத்தை காணலாமா ?
சிஷ்யன் தன் சொல்கேட்டு
சில நொடிகள் சிந்தனை -
நினைவெல்லாம் நிதம் வாழும்
ஆற்றங்கரை அதைக் காண
அடுத்த நொடி புறப்பட்டார்
அலங்கார கணபதியும்
ஆற்றங்கரை அடைந்தும் விட்டார்
அந்தோ ..
அறம் கொன்ற மாந்தர்கள்
மரம் கொன்றும் விட்டாரே .
இடைமெலிந்த மங்கையைப் போல்
நடைமெலிந்து ஓடிசலானது அரசலாறும் ..
முகம் விழுந்த தும்பிக்கையும்
அகம் விழுந்த நம்பிக்கையுமாய்
ஆங்கோர் பாறை மேலே
அமைதியாக அமர்ந்துவிட்டார்..
விசும்ப மனம் வரவில்லை ..
வினாயகமூர்த்திக்கு ..
மறுமுறை மாமனைக்கண்டால்
மனிதர் குறைத்து
மரங்கள் படைக்க
வேண்ட வேணும் ...
என நினைக்கும் நாழிகையில்
எதிர் வந்தவன் கேட்டானே ..
"என்னையா ..புள்ளையார் வேஷமா ?..
உன் மூஞ்சிக்கு பொருந்தவே இல்ல "
அலங்கார கணபதி
ஆங்கார கணபதியானார் ...
No comments:
Post a Comment