Pages

Friday, 14 August 2015

புழுதி புரட்டி சாமியார்

இடை மேலே உடை இன்றி
எவரும் ஒரு துனை இன்றி
நதியாடும் ஓடம் போல்
நடந்து வரும் இவன் யாரோ..

பருவம் கொண்ட பெண்களெல்லாம்
அவன் கோலம் கண்டு நகைக்கின்றார்
கோலங்களை வென்றவன்தான்
காலங்களை வெல்கின்றான்- என
உலகளந்த தத்துவத்தை
ஒரு நொடியில் கடக்கின்றான்

அந்தோ..
கால் இரண்டும் சோர்ந்தனவோ
களைப்பு வந்து சேர்ந்ததுவோ
தள்ளாடும் நடை நடந்தவன்
தவறி அங்கே விழுந்துவிட்டான்

வலி என்பதே அவன் வாழ்வில்
புதியதொரு பாடம் தானே
புன்னகைத்து எழுகின்றான்
மறுபடியும் விழுகின்றான்
மணல் அள்ளி சிரிக்கின்றான்’
மண்மகளை ருசிக்கின்றான்
ஆட்டமெல்லாம் முடிந்தபின்னே
அடைக்கலம் அவள் தானே

வசை துறந்த ரமணனோ- இல்லை
திசையணிந்த சமணனோ
ஆசை கொன்ற புத்தனோ- இல்லை
ஆடை மறந்த சித்தனோ..

யாரிவன்...

டேய் புழுதி புரட்டி சாமியாரே “

குரல் முன்னால் வர
அவள் பின்னால் வருகிறாள்

மண்ணை பாத்தா என்னையே
மறப்பான் என் மவன்”

முத்தை அள்ளும் சிப்பி அவள்
முத்தமிட்டு அள்ளிவிட்டாள்..
இடைமேலே அமர்த்திவிட்டாள்..

இக்கவிதையின் நாயகனை...


ஸ்ரீ


No comments:

Post a Comment