Pages

Wednesday, 23 December 2015

மரணத்தை ரசிக்கின்றேன் நான்.

இன்றல்ல நேற்றல்ல
நெடு நாளாய் ஒரு கனவு..
மரணம்...
மழலையின் துயில் போல்
மணித்துளிகளில் நிகழ்வதனால் 
மாறாத காதல் அதன் மேல்.

வரம் என்று கிடைக்குமென்றால்
மரணம் அதை வடிவம் செய்யும்
வரம் வேண்டும் எனக்கு.

சுகமோ சோகமோ
ஏதோ ஒரு உச்சத்தில்,
முத்தத்தின் முடிவில்
எதிரியின் மடியில்
ஏதோ விடுமுறை நாளில்
எவனோ ஒருவன் பார்க்கையில்
மரணம் எனக்கு வரவேண்டும்
ஏனென்றால்,
ரசிகன் இல்லா உச்சகாட்சி
நாடகத்தில் ருசிப்பதில்லை.

அபசகுனம் என்கிறாள் அம்மா
கடிந்து கொண்டாள் காதலி
முட்டாள் நீ என்றான் நண்பன்.
ஆயினும்
மரணத்தை ரசிக்கின்றேன் நான்.
ஏனென்றால்.
அர்த்தம் தேடும் வரிகள் தான்

கவிதையின் முற்றுபுள்ளியை ரசிக்கின்றன.....

Thursday, 17 September 2015

சற்று உள் சென்று பாருங்கள்

Image result for sad lonely man



மனம் என்னும் வீட்டில்.....

வன்மமும் விசனமும் வாசலில்
விளையாடிக் கொண்டிருக்கலாம்

இச்சைகள் கயிற்றுகட்டில் அமர்ந்து
காலாட்டிக் கொண்டிருக்கலாம்

அறிவென்னும் அரிதாரம் பூசி
ஆளுயர அசிங்கங்கள்
அலைந்து கொண்டிருக்கலாம்
..
சற்று உள் சென்று பாருங்கள்

முழங்காலில் முகம் புதைத்து
மூலை ஒன்றில் இடம் பிடித்து
வாய்ப்பு வரும் வேளை பார்த்து
வந்தேறிகளால் வாழ்விழந்த

மனிதம் அங்கே அமர்ந்திருக்கும்..

Friday, 11 September 2015

ஆற்றங்கரையும் அலங்காரகணபதியும் ...













உச்சிகால பூஜை வேளை
உச்சாடனை முடிந்த பின்பு
நடை சாத்தி விட்டார்கள்

உச்சந்தலை ஒழுகும் வியர்வை
தும்பிக்கையால் துடைக்கையிலே
மூஷிகனும் சிரிக்கின்றான்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவையெல்லாம் தந்தாலும்
என்னாளும் மனம் மறக்குமா ...
தாய் மடியாம் அரசமரமும்
பால் வடியும் அரசலாறும்

ஏக்க மூச்சு விட்டபடி
எழுந்து நின்ற கணபதியை
மூஷிகனும் கேட்டுவிட்டான்
முட்டாளென கேள்வியொன்றை

புலம் பெயர்ந்த அன்று முதல்
அகம் மருகும் என் குருவே
நகர்வலம் நாம் போகலாமா ?
நம்மிடத்தை காணலாமா ?

சிஷ்யன் தன் சொல்கேட்டு
சில நொடிகள் சிந்தனை -
நினைவெல்லாம் நிதம் வாழும்
ஆற்றங்கரை அதைக் காண
அடுத்த நொடி புறப்பட்டார்
அலங்கார கணபதியும்

ஆற்றங்கரை அடைந்தும் விட்டார்

அந்தோ ..

அறம் கொன்ற  மாந்தர்கள்
மரம்  கொன்றும் விட்டாரே .
இடைமெலிந்த மங்கையைப் போல்
நடைமெலிந்து ஓடிசலானது அரசலாறும் ..

முகம் விழுந்த தும்பிக்கையும்
அகம் விழுந்த நம்பிக்கையுமாய்
ஆங்கோர் பாறை மேலே
அமைதியாக அமர்ந்துவிட்டார்..

விசும்ப மனம் வரவில்லை ..
வினாயகமூர்த்திக்கு ..
மறுமுறை மாமனைக்கண்டால்
மனிதர் குறைத்து
மரங்கள் படைக்க
வேண்ட வேணும் ...
என நினைக்கும் நாழிகையில்
எதிர் வந்தவன் கேட்டானே   ..

"என்னையா ..புள்ளையார் வேஷமா ?..
உன் மூஞ்சிக்கு பொருந்தவே இல்ல "

அலங்கார கணபதி
ஆங்கார கணபதியானார் ...