கோயம்பேடு புற நகர் பேருந்து நிலையம்...
திருநெல்வேலி, நாகர்கோயில் என்று பெயர் பலகையுடன் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை கடந்து சென்று கொண்டே இருக்கையில் "சாதாரண பஸ்ல போலாமா? இல்ல ஏ.சி (குளிர் சாதன வசதி கொண்ட) பஸ்ல போலாமா?"... ஒரே குழப்பமாக இருந்தது..
"வர்றது பத்து நாள் லீவுக்கு... அதுலயும் பாதிய தூங்கியே கழிச்சிடு" இப்படி அம்மாவிடம் வசை வாங்குவதை விட ஐநூறு ரூபாயானாலும் பரவாயில்லை என்று குளிர் சாதன வசதி கொண்ட பேருந்தில் பயணச்சீட்டு வாங்கி உட்கார்ந்து..."சரி..ஸ்ரீதரா இன்னும் ஏன் முழிச்சிற்றுக்கே..தூங்குனு". சற்று கண் அய்ர்ந்ததுமே ஆரம்பித்தது..பஞ்சாயத்து....
"யோவ் யாரக்கேட்டுயா என் பொருள எடுத்து கீழ வச்ச?" ஒரு கடுமையான குரல்
" அய்யயோ நான் யார் பொருளையும் எடுத்து எங்கேயும் வைக்கலைங்க" அலறியவாரே நான் எழுந்து உட்காரும் முன்பே..
"அப்படித்தான்யா வைப்பேன் ..என் சீட்ல எதுக்குய்ய நீ வச்ச பொருளை" இது என் பக்கத்து இருக்கைக்காரர்..நடிகர் மன்சூர் அலிகானின் தூரத்து உறவினர் போல் ஒரு உடல் வாகுடன் முகத்தில் பாதியை மறைத்திருந்த மீசையை தடவியவாரே பேசிக்கொண்டிருந்தார்...
"இவரு எப்ப நம்ம பக்கத்துல உட்கார்ந்தார்" என்று யோசிக்கும் முன்பே....
" நான் யாருன்னு தெரியுமா...வாரண்ட்டுக்குப் போயிற்றுக்க போலீஸூ, எங்ககிட்டயே நீ இவ்வளவு திமிரா பேசிறியா" இது பொருளுக்கு சொந்தக்காரர்...
" அய்யோ போலீஸ்........கும்புடுறேன் சாமீ" என்று இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு ஒரு சலாம் எதிர்பார்த்தவருக்கு
"அதுக்கு..என் சீட்ல கொண்டு வந்து பொருளை வைப்பீயா?" என்று மாண்புமிகு பக்கத்து இருக்கை பதிலளித்தது..
" என்ன நீ எதுத்து பேசிட்டே இருக்க...யோவ் கண்டக்டர் இங்க வாய்யா" என்று காவல்துறை அழைக்க பணப்பையை தூக்கிக் கொண்டு கங்காருவைப் போல் ஓடி வந்த நடத்துனரைப் பார்க்கையில் சற்றே பரிதாபமாக இருந்தது...
" என்ன சார்...பிரச்சனை......" இது நடத்துனர்..
" என் சீட்ல இவன் உட்கார்ந்துருக்கான்..." இது காவல்துறை..
"சார் பாத்து பேசுங்க ...அவன் இவன்லாம் பேசதீங்க...இது என் சீட்டு"
" உனகென்னடா மரியாதை ஒரு போலீஸ்காரன் பொருளையே எடுத்து கீழ வச்சிட்டு...திமிரா பதில் சொல்லுவ..அத நான் கேட்டுட்டு இருக்கனுமா?" கன்னம் துடிக்க, தொண்டை நரம்புகள் வெடிக்க கத்தினார் காவல்துறை நண்பர்,,,
அடுத்த சில மணி நேரத்திற்கு தமிழில் இருக்கும் அத்தனை மூன்றாம் தர வார்த்தைகளும் பேருந்தை வலம் வந்தன...
" செம்மொழியான தமிழ்மொழியாம்...." மனதிற்குள் ஏனோ இந்த பாடல் ரீங்காரமிட்டது..
ஒரு வழியாக ஐ.நா சபை வரை செல்ல இருந்த பிரச்சனையை அங்கேயே முடித்து வைக்க போராடி அதில் வெற்றியும் பெற்றார் நடத்துனர்...
இறுதியாக என் இருக்கைக்கு முன் இருக்கையில் காவல்துறைக்கு இடம் கிடைக்க...பேருந்து சற்று அமைதியானது..ஆனால் இது புயலுக்கு பிந்தைய அமைதியா,,இல்லை புயலுக்கு முந்தைய அமைதியா என்று ஒரு குழப்பம் அனைவருக்கும் இருந்தது உண்மை...
ஆனாலும் இவ்வளவு பெரிய சண்டை வர்ற அளவுக்கு அப்படி என்ன பொருளை எடுத்து கீழ வச்சுருப்பாய்ங்க...சரி..நமக்கெதுக்கு வம்பு... தூங்குவோம் என்று எண்ணிய வேளையில்...
" தம்பி எந்த ஊருக்குப் போறீக?" சற்று தணிவான குரலில் பக்கத்து இருக்கை நண்பர் கேட்க...
"கோவில்பட்டி" என்றேன் நான்...
" பாத்தீங்களா தம்பி...பப்ளிக்கு ஒரு மரியாதையே இல்லை...இந்த நாட்டுல...எப்படி பேசுறாய்ங்க பாருங்க" என்க
எல்லை கோட்டுக்கு வெளியே எட்டிப்பார்க்கும் படை வீரன் போல் பின் இருக்கையை எட்டிப் பார்த்தது காவல்துறை..
" அடடா..இவரு நம்மளையும் ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போகாம விடமாட்டாரு போல இருக்கே..."
அப்படி இல்ல சார்..நீங்க அவர் பொருள எடுத்து கீழ வச்சீங்கள்ல அந்த கோபத்துல பேசிருப்பாரு...என்று நழுவ முயற்சித்தேன்...
இப்போது காவல்துறை அமைதியாக திரும்பிவிட்டது..
இருந்தாலும் என் குழப்பம் இன்னும் தீரவில்லை..அப்படி என்ன பொருள் அது...சரி கேட்டுவிடுவோம்...
" அப்படி என்ன சார் பொருள் அது...?" கடைசியாக கேட்டே விட்டேன்...
" அது ஏதோ இட்லி பொட்டலம் மாதிரி இருந்தது தம்பி.." என்றவாரே அவர் குறட்டை விடத்துவங்க,,
" என்னது இட்லி பொட்டலமா..." சத்தமில்லாமல் முன் இருக்கையை எட்டிப் பார்க்க
சாம்பாரில் குழைத்து இட்லியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது காவல்துறை..
அடப்பாவிகளா...இட்லிக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா....
" கோவில்பட்டி உள்ள போகாது எல்லாரும் பைபாஸ் ரோட்ல இறங்குங்க " என்ற நடத்துநரின் குரல் கேட்டு எழுந்தேன்..
இப்போது காவல்துறையும், என் பக்கத்து இருக்கையும் ஒரே குரலில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தனர்...
"எவ்வளவு சுகமா தூங்குராய்ங்க.... நீங்கலாம் நல்லாவே இருக்க மாட்டீங்கயா யோவ்".......
No comments:
Post a Comment