Pages

Tuesday, 16 April 2013

தேனீர்க்கடை


பழையதானாலும் பண்பலையில் கேட்கையில்
இனிக்கும் அந்த பாடல்கள்...
ஊனமான கால்களானாலும்
ஓயாமல் ஆடிக் கொண்டிருக்கும்
அந்த மேசைகள்....
பல இதழ்கள் தழுவியும்
பல விரல்கள் வருடியும்
கற்பிலக்காத கண்ணாடிக்
குவளைகள்...
நடுவே அவன்..
தேநீர் கலக்கும்
திடமனிதன்....

வியர்வை நீரில்
விபூதி குலைத்து
நெற்றிப் பரப்பில்
நேராக நீவி
வடிகட்டியின் இடையை
வளைக்கும் அவன் சாகச விரல்களிடம்
வீணையை மீட்டும் லாவக விரல்களும்
தோற்கலாம்.....

அடடா………
வென்னீர் கலக்கையில் கர்ணனாகிறான்..
வெண்பால் கலக்கையில் கருமியின்
புதல்வனாகிறான்...
இருந்தாலும் இனிக்கிறது இதழோரமாய்
அவன் தந்த அரைக்குவளை தேநீர்...

தேநீர் மிதக்கும் குவளை ஏந்தி....
"இதில் முன்னால் குடித்தவனும்
பின்னால் குடிப்பவனும்
என் சாதிக்காரனா ?":  
எவனுமே கேட்பதில்லை இங்கே...

" ஓட்டுப் போட்டவனெல்லாம்
 ஓட்டாண்டிதேன்..."
எங்கோ கேட்கும் ஒரு குரல்
" சரிதான் அண்ணாச்சி"
பதிலாய் ஒலிக்கும் மறுகுரல்

முக்கால் வினாடி முன்பு வரை
முகம் தெரியாத இருவர் நடுவே
முளைத்து நிற்கும்
திடீர் நட்பு.....

புகை மண்டலம் நடுவே
புத்துணர்வு மணம் பரப்பும்
ஒரு பூக்கூடை
இந்த தேனீர்க்கடை.......

No comments:

Post a Comment