Pages

Tuesday, 15 November 2011

தாய்.......




பேருந்தின் தடதடவென்ற சத்தம் அனைவருக்கும் கேட்டது வேலுவிற்கோ அதைவிட அதிகமாய் அதை விட வலிமையாய் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது..அவனது இதயத்தின் சத்தம்...அதை சத்தம் என்று சொல்வதை விட அழுகை என்று சொல்வதே சரியாக இருக்கும்...அடக்கமுடியாத அழுகை. கண்களில் முட்டிக் கொண்டு நிற்கும் கண்ணீரினை கட்டுப்படுத்த எப்படியோ போராடிக் கொண்டிருந்தான்..அந்த போராட்டத்தில் நிச்சயம் தோற்றுவிடுவோம் என்றே தோன்றியது..

 " அப்பா,பசிக்குது.." குழந்தையின் குரல் குலைத்தது அவன் அமைதியை..

" இரும்மா..இன்னும் செத்த நேரம் தான் ஊரருக்குப் போய் சாப்டலாம் என்ன.." என்றவாரே தலையை தடவிக் கொடுத்தான்...

 " சரிப்பா என்றவாரே அவன் மடியில் தலை சாய்த்து படுக்கத் துவங்கியது..அவன் குழந்தை..இப்படித்தான் எத்தனையோ நாள் அவனும் உறங்கியிருப்பான் அவன் தாய் மடியில்..
அந்த ஸ்பரிசம்...அதன் மென்மை..அந்த வாசம்..அத்தனையும் இன்று பொய்யாகிப் போனது..
அவள் மடியில் எத்தனையோ நாட்கள் பசி மறந்து தூக்கம் துறந்து இரவு பகல் பாராமல் ஆடியிருக்கிறான்...அவன் தடுக்கி விழுந்து நடக்கத் துவங்கிய நாள் முதல் அத்தனையும் அவள் கண் முன்னாலே தான் நடந்தேறி இருந்தன..இன்றோடு அவளைப் பிரிவதென்பது அத்தனை சுலபமல்ல..அவனுக்கு..

" அப்பா, வர்ற திருவிழாவுக்கு புது சட்டை எப்போ எடுக்கப் போறோம்..." ஏதுமறியா குழந்தை கேட்டது..

" போவோம்மா" ஒற்றை வரியில் பதில் சொன்னான்..

" அம்மா சொன்னா, இன்னும் ரெண்டு நாள்ல அப்பாவுக்குப் பணம் வரும் உடனே போலாம்னு..நீ சொல்லுப்பா..எப்ப போவோம்..." குழந்தை அடம் பிடிக்கும் பாணியில் கேட்க அதை அதட்டும் அளவு கூட மனதில் பலம் இல்லை அவனிடம்...அதனால்..

" ஆமாம்மா,போலாம்.." என்றான்..மகிழ்வாய் குழந்தை அவனது கன்னத்தை தடவிவிட்டு மறுபடியும் மடியில் படுத்துக் கொண்டது..

 "பணம் வரும் உண்மை தான் ஆனால் அது எப்படி வருகிறது தெரியுமா..அதற்கு நான் தந்த விலை என்ன தெரியுமா..." இதை கேட்க நினைத்தான் ஆனால் கேட்க வேண்டியர்வகளிடமே ஊமையாய் இருந்துவிட்டு குழந்தையிடம் கேட்பதால் என்ன பயன்...கண்கள் கலங்கிப் போயின...

" கரிசப்பட்டி இறங்கு" என்று நடத்துனர் குரல் கேட்டு மடியில் உறங்கிய குழந்தையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டியவாறே இறங்கினான்...
ஒரு கையில் அந்த காகிதம் இருந்தது...அது ஒரு பத்திரம்...அது அவன் உதிரம் குடித்த காகிதம் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்...

இறங்கி நடந்தான்...நடக்கும் போது கால்கள் ஏனோ இன்று தன்னிச்சையாய் செயல்படுவதாய்
உணர்ந்தான்...அவனது கால்கள் அவனது விருப்பம் கேளாமலே அவனை இழுத்துச் சென்றன..
அவன் தாயிடம்..அவனை பெற்றவளிடம் அல்ல..அவனை வளர்த்தவளாக அவன் நினைப்பவளிடம்..
அதோ,பசுமை சேலை கட்டி பாங்காக அமர்ந்திருந்தாள்....இவன் வந்ததும்

" மகனே நலமா?" என்பது போல் தன் கதிர் என்னும் கரம் நீட்டி கேட்கிறாள்..
" இல்லை" என்பது போல் தலையசைக்கிறான்..
" ஏன்"என்று கேட்டு விடுவாளோ அப்படிக் கேட்டால் என்ன பதில் சொல்வதென்று யோசிக்கும் போதே இதயம் சுக்கு நூறாய் உடைந்துவிடும் போலிருந்தது...நல்ல வேலை அவள் கேட்கவில்லை அதை..

" எல்லாம் தெரியும் எனக்கு"..என்பது போல் மீண்டும் கதிர்களால் தலை அசைக்கிறாள்..
" என்னை மன்னித்துவிடும்மா.." என்கிறான் அவன்...
" நீ தவறு செய்தால் தானே உன்னை நான் மன்னிப்பதற்கு, நீ என்ன செய்வாய் பாவம்..உன் மீது நான் எப்போதும் கோபம் கொள்ள மாட்டேன் என்பது போல் அவள் தன் வரப்பு விரல்களால் அவன் பாதம் வருடுகிறாள்..எப்பொதும் தாய் தாய்தான்..

"நான் தவறு செய்யவில்லை அம்மா..பாவம் செய்துவிட்டேன் ஆனால் செய்த பாவத்தை உன்னிடம் எப்படி சொல்வேன்..."மனம் குமுறி அவன் அழுகையிடம் தோற்றுப் போகும் முன் அவன் குழந்தை அவனை முந்திக் கொண்டது...

" அப்பா பசிக்குது " என்றவாறே அழத் துவங்க அவன் வீட்டை நோக்கி நடக்கத்துவங்கினான்...

 வீட்டின் முற்றத்தில் குருவம்மாள் காத்திருந்தாள், அவன் மனைவி, அவனில் செம்பாதி...
அவன் மனம் படும் பாட்டை அறிந்தவள்..குழந்தையை அவனது நடுங்கும் கரங்களில் இருந்து வாங்கிக் கொண்டு அதற்கு சோறூட்டிவிட அது சாப்பிட்டவாறே மீண்டும் உறங்கிப் போனது..

அவனைத்தேடிக் கொண்டு அவள் வீட்டின் கொல்லைப்பக்கம் வர...அங்கே வானத்தை வெறித்தவாறே அமர்ந்திருந்தான் அவன்..

 அவன் தோள்களில் ஆதரவாய் கைவைக்க அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டுக் கொண்டு வெளியே வந்தது..குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதவனை ஆதரவாக மார்பில் சாய்த்து கொண்டாள் அவள்..அவளுக்குத் தெரியும் அவன் அழுகையின் காரணம்..

" விடுய்யா உன் கஷ்டம் எனக்குப் புரியுது ஆனா நல்ல யோசிச்சுப்பாரு..அந்த கம்பனி கட்டுறதுக்காக நம்ம நெலத்த மட்டுமா எழுதி வாங்கிருக்காங்க..எல்லார் நெலத்தையும் தான் எழுதி வாங்கிட்டாங்க...அதுவுமில்லாம அங்க உனக்கும் எனக்கும் வேலை போட்டுத்தருவாங்கனு நம்ம பிரசிடண்டடு சொன்னாருல்ல..இன்னும் எத்தன நாளைக்குத்தான் இந்த மண்ணையே கட்டிகிட்டு அழுவுறது...கரும்பு போடாலும் நெல்லு போட்டாலும் கைய்யுக்கும் மொய்யும்க்குமே காண மாட்டேங்குது.." அவன் தலையை வாஞ்சையாகத் தடவியவாறே அவள் சொன்னாள்..

" அது தெரியும் புள்ள..ஆனா அந்த நெலம் எங்கத்தா மாதிரி...நான் பொறந்துதுல இருந்து எங்கத்தா மடியில கெடந்தத விட அந்த நெலத்துல கெடந்தது தான் அதிகம்..அப்படிப்பட்ட என் நெலத்த என் கையாலயே மலடினு எழுதித்தர வச்சிட்டாங்களேனு நெனைக்குறப்ப தான் ஈரக்கொலயே அறுந்துரும் போல இருக்கு..." என்றவாறே மறுபடியும் அழத்துவங்கினான்..அவனது கண்ணீரை தன் முந்தானையால் அவள் துடைத்துவிட அதே நேரத்தில் அவளது கண்ணீர் கன்னங்கள் வழியே வழிந்தோடிக் கொண்டிருந்தது...

இதை எல்லாம் கவனிப்பதற்கு நேரமில்லாமல் தனது அடுத்த விரிவாக்கப் பணிக்காக தனது பண பலம்,ஆட்சி பலம் கொண்டு "வேதனாயகம் உருக்கு ஆலை" வேலுவை போல இன்னும் பல விவசாயிகளிடம் அவர்களது விளைநிலம், தரிசு நிலம் தான் என்று எழுதிவாங்கிக் கொண்டிருந்தது.....