Pages

Saturday, 21 May 2016

மேதகு ச ம உ க்களே....



மாற்றத்தை எம்மக்கள் மறுத்ததனால்
உம்மிடம் மன்றாடும் நிலை வந்ததெமக்கு...

மேசையை மட்டும் தட்டாதீர்கள்
அரசு எந்திரத்தின் மனசாட்சியையும் தட்டுங்கள்..
காலில் விழுவதோடு நின்று விடாதீர்கள்.
ஒடுங்கியவனின் சத்தமும் காதில் விழ விடுங்கள்
உங்கள் சத்தங்களால் சட்டசபை நாறினாலும்
சாக்கடைகள் நாறவேண்டாம்..

மீத்தேன் வேண்டாம்
காவிரியின் நீர்த்தேன் போதும் எமக்கு...
ஆற்று மண் அள்ளாதீர்
ஆறு நம்மூர் வந்தால்
வரவேற்க வழி இல்லை நமக்கு...
சட்டைப்பைகளை நிரப்பும் வேளை...
எமது காலியான வயிறும் நினைவில் வரட்டும்

ஆ...மறந்துவிட்டேன் ஒன்றை
சட்டசபை செல்லும் நேரம்
உள்ளாடைகளை மறவாதீர்கள்
வேட்டிகள் கிழியும் நாள் வெகுதொலைவில் இல்லை..

வாழ்த்துகள்...

Wednesday, 23 December 2015

மரணத்தை ரசிக்கின்றேன் நான்.

இன்றல்ல நேற்றல்ல
நெடு நாளாய் ஒரு கனவு..
மரணம்...
மழலையின் துயில் போல்
மணித்துளிகளில் நிகழ்வதனால் 
மாறாத காதல் அதன் மேல்.

வரம் என்று கிடைக்குமென்றால்
மரணம் அதை வடிவம் செய்யும்
வரம் வேண்டும் எனக்கு.

சுகமோ சோகமோ
ஏதோ ஒரு உச்சத்தில்,
முத்தத்தின் முடிவில்
எதிரியின் மடியில்
ஏதோ விடுமுறை நாளில்
எவனோ ஒருவன் பார்க்கையில்
மரணம் எனக்கு வரவேண்டும்
ஏனென்றால்,
ரசிகன் இல்லா உச்சகாட்சி
நாடகத்தில் ருசிப்பதில்லை.

அபசகுனம் என்கிறாள் அம்மா
கடிந்து கொண்டாள் காதலி
முட்டாள் நீ என்றான் நண்பன்.
ஆயினும்
மரணத்தை ரசிக்கின்றேன் நான்.
ஏனென்றால்.
அர்த்தம் தேடும் வரிகள் தான்

கவிதையின் முற்றுபுள்ளியை ரசிக்கின்றன.....

Thursday, 17 September 2015

சற்று உள் சென்று பாருங்கள்

Image result for sad lonely man



மனம் என்னும் வீட்டில்.....

வன்மமும் விசனமும் வாசலில்
விளையாடிக் கொண்டிருக்கலாம்

இச்சைகள் கயிற்றுகட்டில் அமர்ந்து
காலாட்டிக் கொண்டிருக்கலாம்

அறிவென்னும் அரிதாரம் பூசி
ஆளுயர அசிங்கங்கள்
அலைந்து கொண்டிருக்கலாம்
..
சற்று உள் சென்று பாருங்கள்

முழங்காலில் முகம் புதைத்து
மூலை ஒன்றில் இடம் பிடித்து
வாய்ப்பு வரும் வேளை பார்த்து
வந்தேறிகளால் வாழ்விழந்த

மனிதம் அங்கே அமர்ந்திருக்கும்..