Pages

Saturday, 4 October 2014

காந்தியும் கண்ணோட்டங்களும்........




வணக்கம்.

தலைப்பைப் பார்த்ததும் காந்தியை புகழ்ந்து...வரலாற்றைப் பற்றி வருடங்களின் கணக்கை சொல்லி வெறுப்பேத்தப் போகிறேன் என்று எண்ண வேண்டாம்.நிச்சயமாக இல்லை.

இது காந்தியயும், நமது கண்ணோட்டங்களையும் பற்றிய பதிவு.
இந்த பதிவினை எழுதத் தூண்டுகோலாக அமைந்தது சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தோழி ஒருவருடன் நடந்த விவாதம்..

பொதுவாகவே முழு விபரமும் தெரிகிறதோ , தெரியவில்லையோ கருத்து சொல்வதில் நம்மை அடித்து கொள்ள ஆளே கிடையாது....அப்படி சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் சொன்ன வார்த்தைகள் தான் இந்த பதிவின் அவசியமானது..

“ எனக்கு காந்திய புடிக்காது, அவர் மட்டும் இல்லைனா நாம இன்னைக்கி எங்கேயோ போய்ருப்போம்...” இவைகள் தன் அவர் சொன்ன வார்த்தைகள்.
அது அவரோட கருத்து ..அதில் என்ன தவறு? என்று நீங்கள் கேட்கலாம்,நியாயம் தான்.

 அவரிடம் “சரி உனக்கு எதனால அப்படித் தோன்றுகிறது”. என்று கேட்டதற்கு சரியான விளக்கம் தரமுடியவில்லை...அவரால் மட்டுமல்ல அவ்வாறு சொல்லும் பலரால் விளக்கம் சொல்ல முடியவில்லை..

காந்தியை பிடிக்காது என்று சொல்லும் பலரிடம் கேளுங்கள்..

காந்தி ஏன் அகிம்சையை தேர்ந்தெடுத்தார்?
கிராமப் பொருளாதாரம் என்றால் என்ன ?
சுய சார்புடைய பொருளாதாரம் என்றால் என்ன ?
இதெல்லாம் ஏன் உங்களுக்கு அபத்தமாகத் தோன்றுகிறது...?

இதையெல்லாம் கேட்டுப் பாருங்கள்...நிச்சயம் பதில் வராது...அப்படி பதில் வந்தால் அந்த நபரின் விமர்சனத்தை நிச்சயம் செவி மடுத்துக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.

விமர்சனம் என்பது நமது உரிமை என்றால் , எதையும் முழுதாக தெரிந்த பிறகு விமர்சிப்பது நமது கடமை.

“ பாகிஸ்தான் பிரிஞ்சு போனதுக்கு அவர்தான் காரணம்..சுபாஸ் தோத்துப் போனதுக்கு அவர்தான் காரணம்”இப்படி பல பேர் எங்கயாவது எதையாவது அரைகுறையாகக் கேட்டுவிட்டு காந்தியை எனக்குப் பிடிக்காது என்பது அபத்தம்

காந்தி .....பலரால் மஹாத்மாவாகவும் சிலரால் தனது சித்தாந்தங்கள் மூலம் முன்னேற்றதிற்கு தடையாகவும் நினைக்கப்படுகிற மனிதர்.,..நான் இந்த இரு தரப்பையும் சேர்ந்தவன் அல்ல..

கல்லூரி நாட்களில் அகிம்சை, கிராம பொருளாதாரம், சுய சார்புடைய உற்பத்தி இதையெல்லாம் பற்றி பேசும் போது சத்தியமாக காந்தியை கழுவி ஊற்றிய கூட்டத்தில் எனக்கும் முக்கிய பங்குண்டு.அதற்கான காரணமும் உண்டு. சுபாஷ் சந்திர போஸூக்கும் ,சே குவேராவுக்கும் ரசிகனாக இருந்த படியால் காந்திய தத்துவங்கள் பெரிதாக ஈர்க்கபடவில்லை..அதை வாசிக்கும் எண்ணமும் இல்லை..

எப்போதோ யாரோ ஒரு விவாதத்தின் போது சொன்ன வார்த்தைகள் தான்..எனது மொத்த கண்ணோட்டத்தையும் மாற்றியது...

ஒருவரை விமர்சிக்கும் முன்..அவரைத் தெரிந்து கொள்” இவைகள் தான் அந்த வார்த்தைகள்.

அதன் பிறகு காந்தியை பற்றி வாசிப்புகளின் மூலம் காந்தியை வெகு அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... இன்றும் தொடர்கின்றன அந்த வாசிப்புகள்.. அதில் காந்திக்கு எதிராக எழுதப்பட்ட புத்தகங்களும் அடங்கும்.

சரி இப்போது காந்தியைப் பற்றிய எனது கண்ணோட்டத்தினை பதிவு செய்து விடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை காந்தி, தான் வாழ்ந்த காலத்தில் தன்னால் தனது தேசத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை வெகு சிறப்பாக செய்த ஒரு மாமனிதர்...காந்தியை நான் நேசிப்பதற்கு பல விஷயங்கள் இருந்த போதும் ஒன்றினை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

காந்தியின் அகிம்சையை பற்றி...

ஒரு உதாரணத்திற்கு இப்படி வைத்துக் கொள்வோம்..நாம் எல்லாருமே நாட்டின் மேல் பற்று கொண்ட இந்தியர்கள்..ஒரு வேளை, நாளை நாட்டிற்காக உங்களது வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு வாருங்கள் என்று ஒருவர் அழைத்தால் நம்மில் எத்தனை பேர் செல்வோம்..உடனே அதெல்லாம் நாங்க போவோம் என்ற வெட்டிவிவாதங்கள் வேண்டாம்.(லோக்பால் போராட்டத்தில் நம்மில் எத்தனை பேர் கலந்து கொண்டோம் என்பது நமக்கே தெரியும்).உண்மையை சொல்வதானால் நாம் எல்லாருமே யோசிப்போம்..நன்றாக படித்து , போதுமான அளவு உலக அறிவு இருக்கும் நாமே இவ்வளவு யோசிப்போம் என்றால்..1900 ஆண்டுகளில் அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாத உழவனையும், நெசவாளனையும்
“போராட வா என்று அழைத்து கையில் துப்பாக்கி தருவது சாத்தியமா?
சாத்வீக முறையில் சிறு சிறு வெற்றிகள் மூலம் அவர்ளை  உந்திக்  கொண்டு செல்வது தான் சாத்தியம்.அதைத்தான் காந்தியும் செய்திருக்கிறார்.
இப்போதைக்கு இந்த பதிவினை இங்கே முடிக்க விரும்புகிறேன். நான் சொல்ல விழைவதெல்லாம் ஒன்று தான்..
கடவுளையும் விமர்சிக்கும் இனத்தவர்கள் நாம்..ஆனால் தகுந்த புரிதலுக்குப் பின்னால் விமர்சிப்போம்...


கண்ணோட்டங்கள் தொடரும்.......

Friday, 16 May 2014

முதல் கேள்வி- இதயம் என்ற ஒன்றினை எனக்குள் எதற்காய் படைத்தாய்..






 

இதயம் என்ற ஒன்றினை
எனக்குள் எதற்காய் படைத்தாய்...
உதிரம் அனுப்பும் எந்திரம் தானே
அதன் வடிவம் எதற்கு இத்தனை சிக்கலாய் ?
நெஞ்சின் கூட்டில் நிதமும் துடித்து
நினைவுகள் கொண்டு நிதமும் நிறைந்து
என்றோ நடந்ததை இன்று  நினைந்து
எவர் அழுதாலும் அதற்காய் கசிந்து
அனுதினம் என்னை வதைத்திடத் தானா?
இதயம் வடிக்கும் வேலையை மட்டும்
என் போல் எந்திர அறிஞன் செய்வேனானால்..

தங்கத்தில் செய்வேன் இதயம்  நான்
தசையில் செய்ததால் தான்
“தருகிறேனடி என் இதயம் “ என்றதும்
“வேண்டாம் தேவையில்லை “ என்பார்கள்
தங்கத்தில் செய்திருந்தால்
தருகிறேன் என்றதும் மறுப்பார் மிக அரிதாக...

இரும்பில் செய்வேன் இதயம்  நான்
எவர் முயன்றாலும் உடைவதற்கில்லை..

மண்ணில் செய்வேன் இதயம் நான்
எவர் உடைத்தாலும் உதிரியால் செய்யலாம்...

கோடி விண்மீன்களும்
கோள்கள் பலவும் ‘படைத்தாயாமே..
இதய வடிவம் செய்யும் வேலையில்
இப்படி கோட்டை விட்டு விட்டாயே..?

பாற்கடலில் உறங்குவதாகவோ...
பாழும் சிலுவையில் தொங்குவதாகவோ
பாசாங்கு செய்யாது பதில் சொல் எனக்கு...


வெண்ணை திருடிய போதும்
வெளிரா அம்முகம் இன்று
வெளிரக் காண்கிறேன் நான்


கடவுளின் பதில் வந்ததும் பகிர்கிறேன்.....

இனி நானே கடவுளின் வேதாளம்...





அனைவருக்கும் வணக்கம்.....
வழக்கம் போல் இந்த முறையும் கவிதைதான் எழுதி இருக்கிறேன்..ஆனால் சற்று அதிகப்படியான கற்பனையுடன்..


நம் ஒவ்வொருவருக்கும் கடவுளைப்பார்த்தால் இந்த கேள்வி கேட்க வேண்டும் என்று இருக்கும்..அப்படி சற்று கோணலாக யோசித்தபோது தோன்றிய கற்பனைதான் இந்த கவிதை..

(“நீ என்னைக்கி நேரா யோசிச்சிருக்க ..?” அதானே....கேக்குது.....கேக்குது.)... 



   







கொதிக்கும் தேனீர் ஊதி ருசித்து
கொலை கொள்ளை என செய்திகள் வாசித்து...
ஆள்பவன் முதல் ஆண்டவன் வரை
அனைவரையும் வசைபாடி
அடுத்து என்ன செய்யலாம் என்று
ஆராய்கிற வேளையில்
அழைத்தது அழைப்பு மணி,...

கதவைத் திறந்தால்...
அங்கே ஒருவன்...
“நேரமாகி விட்டது நண்பா..
கிளம்பு “என்றான்.
நம்மை போல் இவனும் கிறுக்கன் போலும்
மனதினில் சிறிய நகைப்புடன் நானும்
“யார் நீ நண்பா” என்றேன் மெதுவாய்

"கடவுளின்  தூதன்..
காலனின் கையாள்.."
அடுக்கடுக்காய் அவன் அள்ளி விடுகையில்...
நிச்சயம் இவனும் நம் ரகம் தான்...
மனதினில் எண்ணம் ஓடிடும் வேளை...


நின்றது நேரம்..
உடல் விட்டு உயிர் சென்றது தூரம்..
நினைவு திரும்பி நான்
விழித்த வேளை..
விடுதலை என்பதை உணர்ந்தேன் நான்...
மரணம் என்பது இத்தனை சுலபமா...

சுற்றம் அழுத சத்தம் மட்டும்
காற்றில் கலந்து காதினை அடைந்தது..

வங்கியில் பணம்
வாங்கிய வீடு
வரிசையில் நின்று வென்ற என் காதலி...
அத்தனையும் தொலைத்து

அரைமனதாக அருகினில் பார்த்தால்....
அருகில் அமர்ந்து புன்னகை செய்தான்..
வாசலில் நின்று வசனம் சொன்னவன்..

மிதந்து சென்ற வாகனம்
மெதுவாய் நின்றது..
ஏன்? என்று நான் கேட்கும் முன்பே..
அமெரிக்க உளவு செயற்கைகோள்
அங்கே பழுதாகிப் போனதால்..
போக்குவரத்து நெரிசலாம் பாதையில்..
பதில் வந்தது...

பேசிப்பேசியே காலம் கொன்ற இனமல்லவா..
பேச்சுக் கொடுத்தேன் காலனின் தூதனிடம்...
நரகம் தான் நமக்கு என்று நிச்சயம் தெரியும்- இருந்தும்
நப்பாசை என்பது  நம்முடன் பிறந்ததால்

சொர்க்கம் இன்னும் எவ்வளவு தூரம்..?- நான்
“சொர்க்கத்தை கடந்து விட்டோம் நாம்” -அவன்

வானுலகத்தின் அரசியல் நிலை என்ன...
தூதனின் வாய் திறக்க முயன்றேன் நான்...
முறைப்பான் என்று நினைத்தேன் நான்..
முறுவலித்தவன் சொன்னான்...
முப்பெரும் தேவியும்
முப்பத்துமூன்று விழுக்காடு கேட்க
கடைசியில் காலனின் உதவியால்
அமைந்ததாம் தொங்கு பாராளுமன்றம்...
பேசிமுடிக்கையில் கடவுளின் மன்றம் அடைந்தேன் நான்..

"பொய்கள் கொண்டு பூமியை நிறைத்தேன்..
பொறாமை கொண்டேன் நண்பன் வெற்றியில்
கவிதையின் பெயரில் பலரைக் கொன்றேன்..
கடவுளை பல நாள் காறி உமிழ்ந்தேன்
காதலி அருகினில் இருந்தும் கூட
அவள் தோழியின் அழகினை கண்களில் கவர்ந்தேன்.".
பட்டியல் நீண்டது என் பாவ செயல்களால் (?)

கடவுள் பார்த்தான் என்னை..
"எங்கே அனுப்ப  நான் உன்னை.."....
கேள்வியை அவன் முடிக்கும் முன்னே..

அனுப்பும் வேலையை அப்புறம் பார்க்கலாம்..
அடுக்கடுக்காய் மனம் துளைக்கும்
கேள்விகள் உண்டு எனக்கு...
பதில் சொல் முதலில் நீ

மாலை சூடி..
பாமாலை பாடி
பணிவோடு தன் பாதம் பணிந்த
மானிடர்களை மட்டும்
இதுவரை கண்டவன்..
தன் படைப்பின் தவறாய் கண்டான் என்னை..

"கேள்"..என்றான்......

அந்த ஒற்றை வரியில் தொற்றிக் கொண்டேன் நான்..


இனி நானே கடவுளின் வேதாளம்...



அடுத்த பதிவுகலெல்லாம் கேள்வி-பதில்களின் தொகுப்பு