Pages

Monday, 30 September 2013

"மதசார்பின்மை"-ஒரு பகட்டான வார்த்தை

அனைவருக்கும் வணக்கம்...பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது..உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பொதுத்தேர்தல்...இந்தியா இன்னமும் ஜனநாயகத்தின் பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றது என்று பறை சாற்றும் ஒரு நிகழ்வு..இதில் பல சர்ச்சைகளுக்குப் பிறகு  ராகுல் காந்தியையும் நரேந்திரமோடியையும் தத்தம் வாரிசுகளாக காட்டிக் கொண்டுள்ளன நாட்டின் இரு பெரும் கட்சிகள்....முன்னவர் சக்திவாய்ந்த ஒரு அரசியல் குடும்பத்தின் வாரிசு...பின்னவர் வழிவழியாய் இந்துத்துவா கொள்கையின் வாரிசு,,நான் இந்த பதிவில் பேசப்போவது இவர்களைப் பற்றியல்ல...இவர்கள் இருவருக்கும் பொதுவாக, அதே சமயம் ஒருவருக்கு நேர்மறையாகவும் ஒருவருக்கு எதிர் மறையாகவும் விளங்கும் ஒரு தத்துவம் பற்ற்றியது,,,

வாழையடி வாழையாக வரிக்கு வரி காங்கிரஸ் கூறும் ஒரு வார்த்தை....காந்தியின் கனவு...

,"மதசார்பின்மை"...மதசார்பற்ற ஒரு தேசம்...

 "மதசார்பற்ற,சமத்துவ, ஜனநாயக தேசம்..."இதுதான் இந்திய அரசியலமைப்பின் முகவுரை....ஆனால் மதசார்பின்ன்மை என்பது எந்த வரையில் நடைமுறையில் உள்ளது...?நம் மக்கள் மத சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்கிறார்கள்..?

"இது என்ன கேள்வி...நாங்கள் எல்லாம் ..சகோதரர்கள் போல் வாழ்கிறோம் என்று மேடைவாதம் செய்யும் நணபர்களுக்கு,..
."உண்மையில் நீங்கள் மற்றவர்களை சகித்துக் கொண்டு வாழவில்லை..கண்டு கொள்ளாமல் வாழ்கிறீர்கள் என்பது தான் உண்மை..."

மத சார்பின்மை என்பது. அரசியல், நிர்வாகம், நீதி இவற்றில் எல்லாம் மதத்தின் பெயரால் எந்த விதமான பாரபட்சமும் பாராமல் இருப்பது..ஆனால் நம்மூரில் மத சார்பின்மை என்பது நமது அறிவுஜீவிகளைப் பொறுத்த வரையில் பெரும்பான்மையினரையை (இந்துக்களை) திட்டித் தீர்ப்பது..,தன்னை ஒரு சிறுபான்மையின காவலனாகக் காட்டிகொள்வது...

எங்கிருந்து துவங்குகிறது இந்த பிரிவின் கதை..

இந்தியாவைப் பொறுத்தவரை இந்துக்கள் தான் ஆதிகுடிமக்கள், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பின்னால் வந்து குடி ஏறியவர்கள்..தன் நாட்டில் வந்து குடி ஏறிவர்கள் தங்களைப் போல் தான் பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பிரச்சனையின் ஆரம்பம்..

அதன் பின் சுதந்திரப் போராட்டம் துவங்கிய பிறகு சற்று மறையத் தொடங்கியது இந்த எண்ணம்...ஏனெனில் இருவருக்கும் ஒரே எதிரி...அவர்கள் சென்ற பிறகு மீண்டும் பற்றிக் கொண்டது...

தாங்கள் மதிக்கப்படுவதில்லை என்று பெரும்பான்மையினரும், தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று சிறுபான்மையினரும் உணரத் தலைப்பட்ட பின்னர் தான் துவங்கியது தலைவலி...

பிரிவினை விதைத்துச் சென்ற விஷ விதையில் பாபர் மசூதி தண்ணீர் ஊற்றி வளர்த்தது..கோத்ரா தொடங்கி இன்று முசாபர் நகர் வரையில் தொடர்கிறது இந்த பிரிவினைவாத நெருப்பு...

காரணம் என்று ஆராய்ந்தால் பலர் சொல்லும் பதில் இது தான்...

பொதுவாக இருவரும் வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்டவர்கள்.ஒருவருக்குப் புனிதமாவது இன்னொருவருக்கு அவ்வாறு இருப்பதில்லை (உதாரணம்...பசுவதை)

என்னால் இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது...தாராளமயமாக்கள் வந்த பிறகு கலாச்சாரத்தைக் கண்டுகொள்ள பலருக்கு நேரமில்லை..மேலும் இவர்கள் சொல்லும் பசுவதை இப்போது பெரிதாகப் பேசப்படுவதும் இல்லை...(ஆனால் இன்னும் நம்மூர் அரசியல்வாதிகள் அதைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது வேறு விசயம்).....

வேறு என்னவாக இருக்க முடியும்...

நான் சந்தித்த மனிதர்கள், அவர்களுடனான உரையாடலில் நான் தெரிந்து கொண்ட தற்காலத்து கருத்துகளின் அடிப்படையில் காரணங்கள் இடங்களுக்குத் தகுந்தார் போல் மாறுகின்றன...

பொதுவாக கலவரங்களின் துவக்கப்புள்ளி அற்பமாக இருந்த போதிலும் வெறுப்பின் ஊற்றுக்கண் ஆழமாக இருக்கிறது...

சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக அரசும் அரசாங்கக் கட்டிலில் அமர்பவர்களும் காட்டும் சலுகைகள் மற்றவர்களை உஷ்ணப்படுத்துகிறது.. (உதாரணமாக...காஷ்மீரில் இந்துக்களுக்கு,மற்ற பகுதிகளில் முஸ்லீம்களுக்கு..)..நம்மூரிலும்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று இருந்த இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனியே பிரித்துக் கொடுத்து அங்கேயும் பிளவு ஏற்படுத்தினார்கள் புண்ணியவான்கள்..அப்படிக் கொடுப்பதென்று முடிவு செய்தால் தனியே கொடுக்கலாமே...ஏற்கனவே குறைவு என்று கொதிப்பவனிடம் இருப்பதையும் பிடிங்கினால் என்னவாகும்....,

மேலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தில்..சிறுபான்மையினக்குத் தரப்படும் சில சிறிய ஆனால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் சலுகைகள்... உதாரணம்...இந்திய திருமணச் சட்டம் (அதாங்க..ஒருவனுக்கு ஒருத்தி )இஸ்லாமியர்களைக் கட்டுப்படுத்தாது...இது போதாதா குறை சொல்ல...

 அடுத்தடுத்த வீட்டில் வசித்தால் நாம் செய்வதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று நமக்கு வருகிற ஒரு குருட்டு மனோபாவம்...இதற்கு உதாரணம் சமீபத்தில் நடந்தது..என்னுடன் வட இந்தியாவில் பணிபுரியும் இஸ்லாமிய சக ஊழியரின் (தமிழர் தான்..வயதில் முதிர்ந்தவர்) குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது..தமிழில் பேசினால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது...நண்பர்கள் அருகில் இருக்க அந்த ஊழியரிடம் நான் " குழந்தைகளுக்கு ஏன் தாய் மொழியை கற்றுதரவில்லை?" என்று கேட்க அதற்கு அவர் " எங்கள் தாய் மொழி உருது தானே ..அது தெரியும் அவர்களுக்கு" என்று சொல்ல நண்பர்கள் பலருக்கு அதில் உடன்பாடில்லை...
" தமிழ்னாட்டில் பிறந்து விட்டு தமிழ் தாய் மொழி இல்லை என்பதா?"..என்று கொதிக்கத் தொடங்கிவிட்டனர்..பல இடங்களில் இதைப் போன்ற பிணக்குகள் தான் ஆரம்பம்..தமிழ் எனது தாய் மொழி இல்லை என்பதற்காக அவர் மேல் கோபம் கொள்வதா..இல்லை மத ரீதியாக ஒருவன் தான் பேசும் மொழிக்கு முக்கியத்துவம் தருவதைக் கண்டு கோபம் கொள்ளும் நண்பர்களைக் கண்டிப்பதா என்று குழப்பமாகிப் போனது எனக்கு..

அடுத்து பொருளாதாரம்...அதாவது வர்க்கபேதங்கள்..சற்று விளக்கமாகச் சொன்னால்....செல்வம், அதன் அடிப்படையில் ஏழை பணக்காரன் வேறுபாடு... பணம் சிறுபான்மையினரிடம் குவிந்து பெரும்பான்மை மக்கள் அதே இடத்தில் வறுமையில் வாடுவது...சற்று கூர்ந்து கவனித்தால் இப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் கலவரங்கள் ஏற்படும் பொழுதும் முதலில் குறிவைக்கப்படுவது உயிர்கள் அல்ல..உடைமைகள் தான் என்பது புரியும்..

சமீபத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி யாரோ எங்கோ அவதூராகப் படமெடுக்க அதை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் என்ற பெயரில் சாலையை மறித்துவிட அதனால் பாதிக்கப்படுபவர் இந்துவாக இருந்தால் நிச்சயம் கோபம் வரும்... எடுத்தவனை விட்டுவிட்டு இருப்பவர்களை இம்சித்தால் என்ன நியாயம் என்று...

மேலே சொன்ன காரணங்கள் எல்லாம் நமது தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இந்தியா முழுவதும் என்று பார்க்கும் போது பரவலாகப் பரவிக் கிடக்கின்றன...

பொதுவாகவே இங்கே ஒரு கருத்து நிலவுகிறது..எந்த ஒரு இஸ்லாமியரும் இந்தியன் என்ற உணர்வை இரண்டாம் தர உணர்வாகவே கொள்வதாகவும் முதலில் மதம் முன்னிறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது..அவர்களின் தேசபக்தி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது...அப்துல் கலாம் தொடங்கி பலர் வந்து நின்றாலும் இன்னும் இந்த எண்ண்த்தின் தாக்கம் குறையவில்லை,,,அது தான் நிதர்சன உண்மை..

முதலில் பிரிவினைகளை உண்டாக்கும் ஒதுக்கீடுகளை நிறுத்துங்கள், அது தரும் நன்மை கடுகளவு என்றால் விளைவிக்கும் கேடுகள் கடலளவு..

எம் தலைவர்களே,  சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிப்பதாக சொல்லி அமைதியாக வாழ்கின்ற அம்மக்களை அலைபாயவிடாதீர்கள்....

மதம் என்பதையும் மொழி என்பதையும் மனிதத்திலிருந்து பிரித்து வைய்யுங்கள்...

என்றைக்கு இந்த அடிப்படை காரணங்களைக் களைந்து ஒற்றுமையாக வழி வகுக்கிறோமோ.... அன்றுவரை இந்தியாவைப் பொறுத்தவரை...மத சார்பின்மை என்பது ஒரு பகட்டான வார்த்தை மட்டுமே...,,,...







Tuesday, 16 April 2013

நீங்கலாம் நல்லாவே இருக்க மாட்டீங்கயா யோவ்...



கோயம்பேடு புற நகர் பேருந்து நிலையம்...

 திருநெல்வேலி, நாகர்கோயில் என்று பெயர் பலகையுடன் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை கடந்து சென்று கொண்டே இருக்கையில் "சாதாரண பஸ்ல போலாமா? இல்ல ஏ.சி (குளிர் சாதன வசதி கொண்ட) பஸ்ல போலாமா?"... ஒரே  குழப்பமாக இருந்தது..

"வர்றது பத்து நாள் லீவுக்கு... அதுலயும் பாதிய தூங்கியே கழிச்சிடு" இப்படி அம்மாவிடம் வசை வாங்குவதை விட ஐநூறு ரூபாயானாலும் பரவாயில்லை என்று குளிர் சாதன வசதி கொண்ட பேருந்தில் பயணச்சீட்டு வாங்கி உட்கார்ந்து..."சரி..ஸ்ரீதரா இன்னும் ஏன் முழிச்சிற்றுக்கே..தூங்குனு". சற்று கண் அய்ர்ந்ததுமே ஆரம்பித்தது..பஞ்சாயத்து....

"யோவ் யாரக்கேட்டுயா என் பொருள எடுத்து கீழ வச்ச?" ஒரு கடுமையான குரல்

" அய்யயோ நான் யார் பொருளையும் எடுத்து எங்கேயும் வைக்கலைங்க" அலறியவாரே நான் எழுந்து உட்காரும் முன்பே..

"அப்படித்தான்யா வைப்பேன் ..என் சீட்ல எதுக்குய்ய நீ வச்ச பொருளை" இது என் பக்கத்து இருக்கைக்காரர்..நடிகர் மன்சூர் அலிகானின் தூரத்து உறவினர் போல் ஒரு உடல் வாகுடன் முகத்தில் பாதியை மறைத்திருந்த மீசையை தடவியவாரே பேசிக்கொண்டிருந்தார்...

"இவரு எப்ப நம்ம பக்கத்துல உட்கார்ந்தார்" என்று யோசிக்கும் முன்பே....

" நான் யாருன்னு தெரியுமா...வாரண்ட்டுக்குப் போயிற்றுக்க போலீஸூ, எங்ககிட்டயே நீ இவ்வளவு திமிரா பேசிறியா" இது பொருளுக்கு சொந்தக்காரர்...

" அய்யோ போலீஸ்........கும்புடுறேன் சாமீ" என்று இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு ஒரு சலாம் எதிர்பார்த்தவருக்கு
"அதுக்கு..என் சீட்ல கொண்டு வந்து பொருளை வைப்பீயா?" என்று மாண்புமிகு பக்கத்து இருக்கை பதிலளித்தது..

" என்ன நீ எதுத்து பேசிட்டே இருக்க...யோவ் கண்டக்டர் இங்க வாய்யா" என்று காவல்துறை அழைக்க பணப்பையை  தூக்கிக் கொண்டு கங்காருவைப் போல் ஓடி வந்த நடத்துனரைப் பார்க்கையில் சற்றே பரிதாபமாக இருந்தது...

" என்ன சார்...பிரச்சனை......" இது நடத்துனர்..

" என் சீட்ல இவன் உட்கார்ந்துருக்கான்..." இது காவல்துறை..

"சார் பாத்து பேசுங்க ...அவன் இவன்லாம் பேசதீங்க...இது என் சீட்டு"

" உனகென்னடா மரியாதை ஒரு போலீஸ்காரன் பொருளையே எடுத்து கீழ வச்சிட்டு...திமிரா பதில் சொல்லுவ..அத நான் கேட்டுட்டு இருக்கனுமா?" கன்னம் துடிக்க, தொண்டை நரம்புகள் வெடிக்க கத்தினார் காவல்துறை நண்பர்,,,

அடுத்த சில மணி நேரத்திற்கு தமிழில் இருக்கும் அத்தனை மூன்றாம் தர வார்த்தைகளும் பேருந்தை வலம் வந்தன...

" செம்மொழியான தமிழ்மொழியாம்...." மனதிற்குள் ஏனோ இந்த பாடல் ரீங்காரமிட்டது..

ஒரு வழியாக ஐ.நா சபை வரை செல்ல இருந்த பிரச்சனையை அங்கேயே முடித்து வைக்க போராடி அதில் வெற்றியும் பெற்றார் நடத்துனர்...

இறுதியாக என் இருக்கைக்கு முன் இருக்கையில் காவல்துறைக்கு இடம் கிடைக்க...பேருந்து சற்று அமைதியானது..ஆனால் இது புயலுக்கு பிந்தைய அமைதியா,,இல்லை புயலுக்கு முந்தைய அமைதியா என்று ஒரு குழப்பம் அனைவருக்கும் இருந்தது உண்மை...

ஆனாலும் இவ்வளவு பெரிய சண்டை வர்ற அளவுக்கு அப்படி என்ன பொருளை எடுத்து கீழ வச்சுருப்பாய்ங்க...சரி..நமக்கெதுக்கு வம்பு... தூங்குவோம் என்று எண்ணிய வேளையில்...

" தம்பி எந்த ஊருக்குப் போறீக?" சற்று தணிவான குரலில் பக்கத்து இருக்கை நண்பர் கேட்க...

"கோவில்பட்டி" என்றேன் நான்...

" பாத்தீங்களா தம்பி...பப்ளிக்கு ஒரு மரியாதையே இல்லை...இந்த நாட்டுல...எப்படி பேசுறாய்ங்க பாருங்க" என்க

எல்லை கோட்டுக்கு வெளியே எட்டிப்பார்க்கும் படை வீரன் போல் பின் இருக்கையை எட்டிப் பார்த்தது காவல்துறை..

" அடடா..இவரு நம்மளையும் ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போகாம விடமாட்டாரு போல இருக்கே..."
அப்படி இல்ல சார்..நீங்க அவர் பொருள எடுத்து கீழ வச்சீங்கள்ல அந்த கோபத்துல பேசிருப்பாரு...என்று நழுவ முயற்சித்தேன்...

இப்போது காவல்துறை அமைதியாக திரும்பிவிட்டது..

இருந்தாலும் என் குழப்பம் இன்னும் தீரவில்லை..அப்படி என்ன பொருள் அது...சரி கேட்டுவிடுவோம்...

" அப்படி என்ன சார் பொருள் அது...?"  கடைசியாக கேட்டே விட்டேன்...

" அது ஏதோ இட்லி பொட்டலம் மாதிரி இருந்தது தம்பி.." என்றவாரே அவர் குறட்டை விடத்துவங்க,,

" என்னது இட்லி பொட்டலமா..." சத்தமில்லாமல் முன் இருக்கையை எட்டிப் பார்க்க

சாம்பாரில் குழைத்து இட்லியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது காவல்துறை..

அடப்பாவிகளா...இட்லிக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா....

" கோவில்பட்டி உள்ள போகாது எல்லாரும் பைபாஸ் ரோட்ல இறங்குங்க " என்ற நடத்துநரின் குரல் கேட்டு எழுந்தேன்..

இப்போது காவல்துறையும், என் பக்கத்து இருக்கையும் ஒரே குரலில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தனர்...

"எவ்வளவு சுகமா தூங்குராய்ங்க.... நீங்கலாம் நல்லாவே இருக்க மாட்டீங்கயா யோவ்".......

தேனீர்க்கடை


பழையதானாலும் பண்பலையில் கேட்கையில்
இனிக்கும் அந்த பாடல்கள்...
ஊனமான கால்களானாலும்
ஓயாமல் ஆடிக் கொண்டிருக்கும்
அந்த மேசைகள்....
பல இதழ்கள் தழுவியும்
பல விரல்கள் வருடியும்
கற்பிலக்காத கண்ணாடிக்
குவளைகள்...
நடுவே அவன்..
தேநீர் கலக்கும்
திடமனிதன்....

வியர்வை நீரில்
விபூதி குலைத்து
நெற்றிப் பரப்பில்
நேராக நீவி
வடிகட்டியின் இடையை
வளைக்கும் அவன் சாகச விரல்களிடம்
வீணையை மீட்டும் லாவக விரல்களும்
தோற்கலாம்.....

அடடா………
வென்னீர் கலக்கையில் கர்ணனாகிறான்..
வெண்பால் கலக்கையில் கருமியின்
புதல்வனாகிறான்...
இருந்தாலும் இனிக்கிறது இதழோரமாய்
அவன் தந்த அரைக்குவளை தேநீர்...

தேநீர் மிதக்கும் குவளை ஏந்தி....
"இதில் முன்னால் குடித்தவனும்
பின்னால் குடிப்பவனும்
என் சாதிக்காரனா ?":  
எவனுமே கேட்பதில்லை இங்கே...

" ஓட்டுப் போட்டவனெல்லாம்
 ஓட்டாண்டிதேன்..."
எங்கோ கேட்கும் ஒரு குரல்
" சரிதான் அண்ணாச்சி"
பதிலாய் ஒலிக்கும் மறுகுரல்

முக்கால் வினாடி முன்பு வரை
முகம் தெரியாத இருவர் நடுவே
முளைத்து நிற்கும்
திடீர் நட்பு.....

புகை மண்டலம் நடுவே
புத்துணர்வு மணம் பரப்பும்
ஒரு பூக்கூடை
இந்த தேனீர்க்கடை.......

Monday, 21 January 2013

என் பெயர் அன்னாடங்காய்ச்சி

                                               
                  
வணக்கம்.....

என் பெயர் அன்னாடங்காய்ச்சி...என்ன பரிச்சயமில்லாத பெயராக இருக்கிறதா?...அய்யயோ ....சத்தியமாகச் சொல்கிறேன் இது சுத்தத் தமிழ் பெயர்தான்...(அதற்காக நான் ஒன்றும் வரிவிலக்கு கோரப்போவதில்லை)..என்பெயரின் அர்த்தம்..அன்றாடம் காய்ச்சி குடிப்பவன்...உங்களில் பலர் கேட்கலாம் நாங்களும் தான் அன்றாடம் சமைத்து சாப்பிடுகிறோம் அப்படியானால் நாங்களும் அன்னாடங்காய்ச்சிகள் தானே..அது தான் இல்லை..நான் அன்றாடம் உழைத்து அதில் ஏதாவது கிடைத்தால் மட்டுமே காய்ச்சிக் குடிப்பவன்...ஒரு நாள் எதுவுமே கிடைக்கவில்லை என்றால் அன்று என் வீட்டில் பட்டினியுடன் தான் குடித்தனம் நடக்கும்...

இப்பொது புரிந்திருக்கும் எனக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்...

என்னை நீங்கள் சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம்...

          அனுமார் வால் போல் நீண்டு  கொண்டே போகும் பல்பொருள் அங்காடியின் (ரேசன் கடை) வரிசையில் கடைசியில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு நிற்பவன் நான் தான்...அரசு மருத்துவமனையில் " யோவ் கைல ஏதாவது துட்டு வச்சிருக்கியா? ஒன்னுமே இல்லாம வந்துருங்க ஆஸ்பத்திரிக்கு " எதுவுமே இல்லாததால் தான் நான் அரசு மருத்துவமனைக்கே வருகிறேன் என்று தெரிந்துமே எரிந்து விழுவானே அரசாங்க மருத்துவமனையின் மருத்துவ உதவியாளன் ..அது என் மேல் தான்...

இலவசம் என்ற ஒன்று இருக்கிறதே...அது கண்டுபிடிக்கப்பட்டதே எனக்காகத்தான்...(ஆனால் அது இப்ப மாடி வீட்டு சீமான் வீட்டுக்கும் போகுதுங்கிறது வேற கதை..)...


இத்தனை அறிமுகத்துக்குப் பிறகும் என்ன அடையாளம் தெரியலைனா...வெறும் தினமும் 28 ரூபாய் இருந்தா  சந்தோசமா வாழ முடியும்,மாசத்துக்கு வெறும் 600 ரூபாய் இருந்தா தினம் தினம் வீட்டில தீபாவளி தான் சொல்றாங்களே அது எல்லாமே என்னப் பற்றியும் என் வீட்டைப் பற்றியும் தான்..( ஆனா இவங்களெல்லாம் புரிஞ்சு தான் பேசறாங்களா இல்ல என்னை வெறுப்பேத்தறதுக்காக பேசறாங்களானே எனக்கு புரியல...).....

இப்போது நான் யார்னு உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்...சரி இப்போது நான் சொல்ல வந்த விசயத்தை சொல்லி விடுகிறேன்,,,

மண்ணெண்ணை - 8.50 ரூபாய்.
அரிசி - 2 ரூபாய் (இத வாய்ல வைக்க முடியாது, இருந்தாலும் வேற வழி இல்லை..)

 இன்று வரை இந்த விலைப்பட்டியல் இப்படித்தான் இருக்கிறது..அதனால்தான் எனது வண்டி ஆங்காங்கே குண்டு, குழி இருந்தாலும் குடை சாயாமல் ஓடிக் கொண்டிருக்கிறது..ஆனால் சமீபத்தில் செய்தித்தாளில் படித்தேன்..மண்ணெண்ணை,அரிசி இதுக்கெல்லாம் அரசு தரும் மானியங்களெல்லாம் நிறுத்தப்பட்டு அது நேரடியாக என் கையிலயே வந்து தரப்போறாங்களாம்...பெயர்... நேரடி பணப் பரிமாற்றத் திட்டமாம் அதன் பெயர்...

விவரம் தெரிந்த சில மனிதர்களிடம் கேட்டு முழுமையாகத் தெரிந்து கொண்ட போது.." நாசமாப் போச்சு " என்று தான் சொல்லத் தோன்றியது..

அரிசியோட சந்தை விலை கொடுத்து நானே வாங்கிக்கணுமாம்..இவங்க அப்புறமா என் கணக்கிற்கு பணத்தை அனுப்புவார்களாம்...கேட்க நன்றாகத்தன் இருக்கிறது..ஆனால்...எனது சில கேள்விகளுக்குத் தான் பதில் இல்லை...

இந்த பணம் எத்தனை நாட்களில் என் கைக்கு வந்து சேரும்.. ? .அப்படியே இவர்கள் சொல்வது போல் " சீக்கிரமாக" வந்து சேர்ந்தாலும் அதுவரைக்கும் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு படுத்திருப்பதா?

சில குறிப்பிட்ட பொருள்களுக்குத் தான் இந்த மானியம் பொருந்தும்..உங்களுக்கே தெரியும் நம்ம் ஊர் சந்தையைப் பற்றி...எங்கள் தெரு மளிகைக் கடை அண்ணாச்சி என்ன சொல்வார் தெரியுமா ..." அடடே, அந்த வகை அரிசி இப்பத்தானே தீரிந்து போச்சு..வேற அரிசி இருக்கு, வாங்கிக்கிறீகளா மக்கா..." என்பார் ..மானிய விலை அரிசி அவர் கடையில் ஒரு ஓரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்,ஏதாவது தனியார் உணவு விடுதிக்கு விற்கப்படும் வரை..அப்படி நான் வேறு வகை அரிசி வாங்கினால் இவர்கள் பணம் தருவதில் அடம் பிடிப்பார்களா? மாட்டார்களா?...

இதெல்லாம் இருக்கட்டும், பணப்பரிமாற்றத்திற்கு வங்கிக்கணக்கு வேண்டும் என்பார்கள். அதைத்துவங்க ஒரு வங்கியில் ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும் என்பார்கள், இன்னொரு வங்கியில் ஐநூறு ரூபாய்கள் இருக்க வேண்டும் என்பார்கள்..இதில் ஒரு தெளிவான முறையை அறிமுகப்படுத்துவார்களா மாட்டார்களா?...

 இப்படி எத்தனையோ கேள்விகள் பதிலே இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றன...

ம்ம்ம்...எத்தனை நாளைக்குத்தான் கேள்விகள் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்..என்று என் தலைவிதி இருக்கிறதோ...தெரியவில்லை...


ஒரு நிமிடம் இருங்கள்...அடடே..மறுபடியும் எங்கள் தானை தலைவர் கலைஞர் ஈழத்தமிழர் பிரச்சனைக்குக் கடிதம் எழுதிருக்காருய்யா..எதுகை மோனைனு சும்மா பின்னிருப்பாரு..ஒருபயலுக்கும் புரியாது....முதல்ல அத படிக்கணும் நான்.... உங்களை அப்ப இன்னொரு நாள் சந்திக்கிறேன்...நன்றி வணக்கம்...




....ஸ்ரீ