Pages

Saturday, 18 March 2017

கொய்யா மரக் கிளைகளும் ,பங்காளி அணில்களும் ...


இலை மணந்து வளையும் கிளைகள்
இரண்டொரு முறை விழுந்திருக்கிறேன்
கிளை ஒடிந்து
சுவற்றைத் தாண்டி வளர்ந்ததால்
அடிக்கடி வெட்டப்படும்  .
வரம்புகளை  மீற மரங்களுக்கும் உரிமையில்லை

வெள்ளை வட்டங்கள் கிளையெங்கும்
தேமல் வந்த அக்காவின் கைகள் போல்
இல்லை,
எண்ணெய் மறந்த எனது கைகள் போல்

பகை முகம் காட்டும் அணில்
பல்லைக் காட்டி சிரிக்கும்
பழம் பழுக்கையில்
பங்காளிச் சண்டை எங்களுக்குள்

ஆடிக்களைக்கையில்
அணில் தின்ற பழம் தேடுவோம்
அவளும்  நானும் .

"அகம்பாதம் புடிச்சவனே "
வசைகளை மாலையென
மரம் ஏறிப் பெற்ற
தலைமுறை எமது .

அடுத்த தலைமுறை
ஆண்ட்ராய்டில் பிறந்ததால்
அனாதைகள்  ஆகிவிட்டன
கொய்யா மரக் கிளைகளும்
பங்காளி அணில்களும் ...