Pages

Saturday, 5 August 2017

அவளின் வேண்டுதல்கள் அத்தனை நீளமா

அடிப் பிரதக்ஷணம் செய்யும் அவளைத் தெரியும் எனக்கு

வெள்ளிக்கிழமைகளில்
அவள் வருகைக்காக காத்திருப்பது போல் ஏங்கி நிற்கின்றன சன்னிதியின் கற்கள்

எத்தனை அடிகள் நடந்திருப்பாள்
எண்ணிக் கொண்டேனும் நடந்திருப்பாளா
எதற்காக நடக்கின்றாள்

அவளின் வேண்டுதல்கள் அத்தனை நீளமா
எங்கோ இருக்கும் கடவுளே
சற்று இறங்கித்தான் வந்துவிடேன்
அவள் எதிர்திசையில் நடக்கும் முன்னால்

Thursday, 4 May 2017

நிசப்தத்தின் குரூரம்

கவிதைகள்

எட்டெடுத்து நடக்கையில்
இடையில் ஆடும் கொடியின் சத்தம்
ஏதோ ஒரு பொருள் உடையும் சத்தம்
மார்பில் பால் உறிஞ்சி
உதடுகள் சப்புகொட்டும் சத்தம்
எனக்கு  மட்டும் புரியும்
"உங்ங்ங்ங்ங்கா"என்றொரு சத்தம்
நெஞ்சில் நிற்கையில்
நிற்காத கொலுசின் சத்தம்
மகள் என்றொருத்தி வந்தபின்
அறிகிறேன் நிசப்தத்தின் குரூரத்தை  



 

Friday, 28 April 2017

காத்திருப்பின் கடைசி நொடியில்

காத்திருப்பின் கடைசி நொடியில்
தேய்ந்து கொண்டிருக்கிறேன் நான்

உணர்ச்சிகள் உமிழ்ந்து
சரடுகளாக்கி வலைவடிப்பவன்
தேய்ந்து கொண்டிருக்கின்றேன்
உணர்ச்சிகள் தீர்ந்து போன
சடல நிலை நோக்கி

இரையென இதுவரை வீழ்ந்தவை
உணர்வின் சுரப்புகளை
உண்டிருக்க வேண்டும்

இதோ ஒரு கண்ணி
என் மாய வலையின்
கடைசிக் கண்ணி
உயிரின் பெரும் பகுதி
உமிழ்ந்தாகி விட்டது.

இனி இரைக்கான காத்திருப்பு

இரைகள் இயல்பானவை
அன்பானவை
அழகானவை
ஆனால் அறிவிலிகள்
உணர்வின் ஒளியால் உயிர்பறிக்கும்
மாய வலையில் வீழ்பவை.

அடுத்த அறிவிலிக்காக
நீள்கிறது என் காத்திருப்பு
நானே வீழ்ந்ததை அறியாமல்.

Saturday, 18 March 2017

கொய்யா மரக் கிளைகளும் ,பங்காளி அணில்களும் ...


இலை மணந்து வளையும் கிளைகள்
இரண்டொரு முறை விழுந்திருக்கிறேன்
கிளை ஒடிந்து
சுவற்றைத் தாண்டி வளர்ந்ததால்
அடிக்கடி வெட்டப்படும்  .
வரம்புகளை  மீற மரங்களுக்கும் உரிமையில்லை

வெள்ளை வட்டங்கள் கிளையெங்கும்
தேமல் வந்த அக்காவின் கைகள் போல்
இல்லை,
எண்ணெய் மறந்த எனது கைகள் போல்

பகை முகம் காட்டும் அணில்
பல்லைக் காட்டி சிரிக்கும்
பழம் பழுக்கையில்
பங்காளிச் சண்டை எங்களுக்குள்

ஆடிக்களைக்கையில்
அணில் தின்ற பழம் தேடுவோம்
அவளும்  நானும் .

"அகம்பாதம் புடிச்சவனே "
வசைகளை மாலையென
மரம் ஏறிப் பெற்ற
தலைமுறை எமது .

அடுத்த தலைமுறை
ஆண்ட்ராய்டில் பிறந்ததால்
அனாதைகள்  ஆகிவிட்டன
கொய்யா மரக் கிளைகளும்
பங்காளி அணில்களும் ...







 

Saturday, 7 January 2017

ஒளியில்லா விழிகொண்ட தேவமகள் உறங்குகிறாள் சாலையோரம்




ஒளியில்லா விழிகொண்ட தேவமகள்
உறங்குகிறாள் சாலையோரம்
உளிகண்ட சிலை போல் அவள் உடல்
கந்தல்களின் வழி காட்சி தரும்

விலங்கிட்ட விலங்காக
கிழிந்ததையும் துகிலுரிக்கும்
கண்கள் பல.
பார்வைகளின் பச்சையான இச்சைகளை
எங்ஙனம் மறந்து உறங்குகிறாள் ..
சிலை கட்டும் சேலையையே
உரித்து விடும் துச்சாதனர்கள் இடையே
இன்பக்கனவில் எப்படி ஆழ்ந்துவிட்டாள்

எட்டாய் கிழிந்த புடவையை
அவள் போர்த்தியபடி
"எடுபட்ட பயலுக எப்படி பாக்குறாய்ங்க பாரு "
கிழவியின் வசை மொழி
என்னையும் சேர்த்துதான் ..

ஒளியில்லா விழிகொண்ட தேவமகள்
உறங்குகிறாள் சாலையோரம்