புள்ளியில்
துவங்கும் பயணம்
நிற்கும் நிமிடம்
வரை
நீள்கிறது
நெடுந்தூரம்..
வாழ்வியல்
ஆசான்கள்
வழியெங்கும்
வேதம் சொல்வர்.
“நிற்க இடம்
வேண்டுமா நிற்காதே ஓடு
விலைவாசி ஏறும்,
வேகமாக ஓடு
வீடு கட்ட
வேண்டும், விரைவாக ஓடு
மூச்சுவாங்கும்
நேரமும்
முன்னேறும் கனவை
பின் தொடர்ந்து
ஓடு..”
சுவாசிக்க
நிற்கையில்
சுலபமான வழி
சொல்வான் சாத்தான்
“சற்று வளைந்து
தான் போயேன்
வாழ்வாங்கு வாழலாம்..”
வாழ்வாங்கு வாழலாம்..”
அறிவுரை கொண்ட
அந்நொடி முதல்
வளையும் விழைவே ,வழியெங்கும்
பின் தொடர
விளைவுகள் எண்ணி,
மதில் தாண்ட மனம் பதற
வளைந்து போகும்
சலனம் கொண்டு
வாழ்நாளெல்லாம்
பயணிக்கும் நேர்கோடுகள்...
ஒரு
நடுத்தரவாசியைப் போல்...