வணக்கம்.....
என் பெயர் அன்னாடங்காய்ச்சி...என்ன பரிச்சயமில்லாத பெயராக இருக்கிறதா?...அய்யயோ ....சத்தியமாகச் சொல்கிறேன் இது சுத்தத் தமிழ் பெயர்தான்...(அதற்காக நான் ஒன்றும் வரிவிலக்கு கோரப்போவதில்லை)..என்பெயரின் அர்த்தம்..அன்றாடம் காய்ச்சி குடிப்பவன்...உங்களில் பலர் கேட்கலாம் நாங்களும் தான் அன்றாடம் சமைத்து சாப்பிடுகிறோம் அப்படியானால் நாங்களும் அன்னாடங்காய்ச்சிகள் தானே..அது தான் இல்லை..நான் அன்றாடம் உழைத்து அதில் ஏதாவது கிடைத்தால் மட்டுமே காய்ச்சிக் குடிப்பவன்...ஒரு நாள் எதுவுமே கிடைக்கவில்லை என்றால் அன்று என் வீட்டில் பட்டினியுடன் தான் குடித்தனம் நடக்கும்...
இப்பொது புரிந்திருக்கும் எனக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்...
என்னை நீங்கள் சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம்...
அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகும் பல்பொருள் அங்காடியின் (ரேசன் கடை) வரிசையில் கடைசியில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு நிற்பவன் நான் தான்...அரசு மருத்துவமனையில் " யோவ் கைல ஏதாவது துட்டு வச்சிருக்கியா? ஒன்னுமே இல்லாம வந்துருங்க ஆஸ்பத்திரிக்கு " எதுவுமே இல்லாததால் தான் நான் அரசு மருத்துவமனைக்கே வருகிறேன் என்று தெரிந்துமே எரிந்து விழுவானே அரசாங்க மருத்துவமனையின் மருத்துவ உதவியாளன் ..அது என் மேல் தான்...
இலவசம் என்ற ஒன்று இருக்கிறதே...அது கண்டுபிடிக்கப்பட்டதே எனக்காகத்தான்...(ஆனால் அது இப்ப மாடி வீட்டு சீமான் வீட்டுக்கும் போகுதுங்கிறது வேற கதை..)...
இத்தனை அறிமுகத்துக்குப் பிறகும் என்ன அடையாளம் தெரியலைனா...வெறும் தினமும் 28 ரூபாய் இருந்தா சந்தோசமா வாழ முடியும்,மாசத்துக்கு வெறும் 600 ரூபாய் இருந்தா தினம் தினம் வீட்டில தீபாவளி தான் சொல்றாங்களே அது எல்லாமே என்னப் பற்றியும் என் வீட்டைப் பற்றியும் தான்..( ஆனா இவங்களெல்லாம் புரிஞ்சு தான் பேசறாங்களா இல்ல என்னை வெறுப்பேத்தறதுக்காக பேசறாங்களானே எனக்கு புரியல...).....
இப்போது நான் யார்னு உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்...சரி இப்போது நான் சொல்ல வந்த விசயத்தை சொல்லி விடுகிறேன்,,,
மண்ணெண்ணை - 8.50 ரூபாய்.
அரிசி - 2 ரூபாய் (இத வாய்ல வைக்க முடியாது, இருந்தாலும் வேற வழி இல்லை..)
இன்று வரை இந்த விலைப்பட்டியல் இப்படித்தான் இருக்கிறது..அதனால்தான் எனது வண்டி ஆங்காங்கே குண்டு, குழி இருந்தாலும் குடை சாயாமல் ஓடிக் கொண்டிருக்கிறது..ஆனால் சமீபத்தில் செய்தித்தாளில் படித்தேன்..மண்ணெண்ணை,அரிசி இதுக்கெல்லாம் அரசு தரும் மானியங்களெல்லாம் நிறுத்தப்பட்டு அது நேரடியாக என் கையிலயே வந்து தரப்போறாங்களாம்...பெயர்... நேரடி பணப் பரிமாற்றத் திட்டமாம் அதன் பெயர்...
விவரம் தெரிந்த சில மனிதர்களிடம் கேட்டு முழுமையாகத் தெரிந்து கொண்ட போது.." நாசமாப் போச்சு " என்று தான் சொல்லத் தோன்றியது..
அரிசியோட சந்தை விலை கொடுத்து நானே வாங்கிக்கணுமாம்..இவங்க அப்புறமா என் கணக்கிற்கு பணத்தை அனுப்புவார்களாம்...கேட்க நன்றாகத்தன் இருக்கிறது..ஆனால்...எனது சில கேள்விகளுக்குத் தான் பதில் இல்லை...
இந்த பணம் எத்தனை நாட்களில் என் கைக்கு வந்து சேரும்.. ? .அப்படியே இவர்கள் சொல்வது போல் " சீக்கிரமாக" வந்து சேர்ந்தாலும் அதுவரைக்கும் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு படுத்திருப்பதா?
சில குறிப்பிட்ட பொருள்களுக்குத் தான் இந்த மானியம் பொருந்தும்..உங்களுக்கே தெரியும் நம்ம் ஊர் சந்தையைப் பற்றி...எங்கள் தெரு மளிகைக் கடை அண்ணாச்சி என்ன சொல்வார் தெரியுமா ..." அடடே, அந்த வகை அரிசி இப்பத்தானே தீரிந்து போச்சு..வேற அரிசி இருக்கு, வாங்கிக்கிறீகளா மக்கா..." என்பார் ..மானிய விலை அரிசி அவர் கடையில் ஒரு ஓரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்,ஏதாவது தனியார் உணவு விடுதிக்கு விற்கப்படும் வரை..அப்படி நான் வேறு வகை அரிசி வாங்கினால் இவர்கள் பணம் தருவதில் அடம் பிடிப்பார்களா? மாட்டார்களா?...
இதெல்லாம் இருக்கட்டும், பணப்பரிமாற்றத்திற்கு வங்கிக்கணக்கு வேண்டும் என்பார்கள். அதைத்துவங்க ஒரு வங்கியில் ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும் என்பார்கள், இன்னொரு வங்கியில் ஐநூறு ரூபாய்கள் இருக்க வேண்டும் என்பார்கள்..இதில் ஒரு தெளிவான முறையை அறிமுகப்படுத்துவார்களா மாட்டார்களா?...
இப்படி எத்தனையோ கேள்விகள் பதிலே இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றன...
ம்ம்ம்...எத்தனை நாளைக்குத்தான் கேள்விகள் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்..என்று என் தலைவிதி இருக்கிறதோ...தெரியவில்லை...
ஒரு நிமிடம் இருங்கள்...அடடே..மறுபடியும் எங்கள் தானை தலைவர் கலைஞர் ஈழத்தமிழர் பிரச்சனைக்குக் கடிதம் எழுதிருக்காருய்யா..எதுகை மோனைனு சும்மா பின்னிருப்பாரு..ஒருபயலுக்கும் புரியாது....முதல்ல அத படிக்கணும் நான்.... உங்களை அப்ப இன்னொரு நாள் சந்திக்கிறேன்...நன்றி வணக்கம்...
....ஸ்ரீ