Pages

Wednesday, 17 August 2011

" ரத்தம் வெறுக்கும் ஒரு ஆயுதம் "


         இந்த வலைப்பதிவை உணர்ச்சிவசப்பட்ட ஒரு இளைஞனின் கிறுக்கலாகவோ, சுயவிளம்பரம் தேடும் ஒருவனின் பிதற்றலாகவோ  நினைக்காமல்  படிக்க வேண்டுகிறேன்....

            தமிழனாய் பிறந்து இன்று பணி நிமித்தம் காரணமாக ஒரிசாவில் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் பிறந்த ஒரு கலப்பின இடத்தில் வசிக்கிறேன் நான்...கார்ல் மார்சும், சேகுவேராவும் படித்து கனன்று நின்று கொண்டிருந்த மனம் ,இப்போது மகன், சகோதரன் என்ற சுமைகள் தூக்கி பணம் தேடி திரிந்து கொண்டிருக்கிறது.... என் மனம் பற்றிய விமர்சனம் படிக்கும் உங்களுக்கு தேவை இல்லாதது போல் தோன்றலாம்...ஆனால் என்னை போல் பலர் இருக்கிறார்கள்,,,மனம் எழுப்பும் குரலை அடக்கி  புத்தி சொல்லும் பேச்சை கேட்போர் என்று தெரிந்து தான் அதனை விவரிக்கிறேன்...   

    அகிம்சை பற்றிய எனது கண்ணோட்டம் மாறிய நாள் இன்று.....அன்னா ஹசாரே என்ற ஒரு பெரியவர் இரண்டாம் சுதந்திர யுத்தம் துவங்கியதாக அறிந்தேன்...உங்களைப் போலவே எனக்கும் நேற்றுவரை அது ஒரு பத்திரிக்கை செய்திதான்....அகிம்சை என்பதே காற்று போன பலூன் தான் என்று நினைத்திருந்தேன்....துப்பாக்கி தூக்கி தோட்டாக்களில் உயிர் பறிக்கும் மூன்றாம் உலகத்தில் அஹிம்சை என்பது முட்டாளின் மதி தந்த மூடப்பழக்கம் என்று  தான் சாடி இருந்தேன் நான்,,,, இன்று அதன் சக்தியை காணும் வரை...
..                     

  ஜார்சுகுடாவை பற்றி முன்னமே கூறிவிட்டதால் உங்களுக்கு புரிந்திருக்கும் அதன் பூகோள மதிப்பு...அங்கே ஒரு  மளிகை அங்காடி போன்ற சிறு இடம்..அதில் அதிக பட்சம் ஐம்பது பேர் அமரலாம்..ஆனால் அங்கே நான் கண்டது நூற்றுக்கும் மேற்பட்டவர்களை.இவர்கள் எல்லாம் நாம் நினைப்பது போல்  கூட்டம் எப்போது முடியும் மது புட்டியுடன் மதில் சுவரின் பின்னால் அமர்வது எப்போது என்று கணக்கு போடுபவர்கள் அல்ல...ஒரு மாற்றம் வேண்டி உணவு துறந்து உறக்கம் மறந்து அமர்ந்திருப்பவர்கள்...  சுவரொட்டியில் அன்னா ஹசாரேவின் படம்....கைகளில் இந்திய தேசத்தின் கொடி...கூடி இருந்தவர்களின் முகங்களை நான் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் கண்களில் தெரிந்த ஒரு எதிர்பார்ப்பு, ஒரு நம்பிக்கை...அதை வர்ணனை செய்ய...என் தமிழன்னை எனக்கு வல்லமை தரவில்லை...அங்கே கூடி இருந்த மக்களின் மொழி எனக்கு புரியவில்லை..ஆனால் உணர்வுகளுக்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை உணர்ந்தவன் நான்...

.அந்த கூட்டத்தில் ஒருவன் " பாரத் மாதா கி" ( பாரத அன்னைக்கு" ) என்று உரக்க சத்தமிட்ட போது என்னையும் அறியாமல் என் உதடுகள் "ஜே" என்று உரைப்பதை உணர்ந்தேன்...அது தான் ஐநூறு மொழி பேசி ஆயிரம் சாதி கொண்டாலும் அனைத்தையும் வெல்லும் ஒரு உணர்வு....உச்சி தொட்டு உள்ளங்கால் வரை ஓடும் உதிரத்தின் உரம்..இந்தியன் என்பது ஒரு அடையாளம் அல்ல..ஒரு உணர்வு ,,,,விவரிக்க முடியாதது...

             அங்கே கூடி இருந்தவர்கள் யாரையும் துன்புறுத்தவில்லை..ஒரு துளி ரத்தம் இல்லை..ஒரு கடும்  சொல் இல்லை....அமைதியும்  ஒரு அழகான அதே நேரம் வன்மையான மொழி தான்....என்பது எனக்கு இன்று தான் புரிந்தது,,,,ஆனால் அனைவருக்கும் தெரியும் புயலுக்கு முன்னே வரும் அமைதி இதுவென்று...எனக்கும் தெரிந்ததால் எம் பாரதியின் வீரம் சொட்டும் வரிகள் நினைவுக்கு வந்தன....


               " தேடிச் சோறு நிதந்தின்று - பல
                  சின்னஞ் சிறு கதை பேசி-மனம்
                   வாடித் துன்ப  மிக உழன்று பிறர் 
                வாடப் பல  செய்து -நரை 
                 கூடிக்  கிழப்பருவம் எய்தி -கொடுங் 
                   கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல         
                     வேடிக்கை மனிதரை போலே- நான் 
                     வீழ்வேனென்று நினைத்தாயோ "

அங்கே இருந்த ஒவ்வொரு மனிதனின் முகவிலாசமும்  சொன்ன  வார்த்தைகள்...நீ சொன்ன வார்த்தைகள் பலிப்பதை காணமல்...காலனுக்கு உயிரை கடன் தந்தாயே பாரதி...

       இந்த சிறு கிராமத்தில் நடப்பதே இத்தனை அலைகளை உருவாக்கும் என்றால் ...பெரு நகரங்களின் நிலை என்ன....அஹிம்சை என்ற வழி தேர்ந்து பயணிக்கும் எம் மக்களின் கனவு பலிக்குமா..???????


    ...எனது ஆசை எல்லாம்....

    "கனவு மெய்ப்பட வேண்டும்"